மணவுறவு மீறல் குற்றமா

ஆசிரியருக்கு,

உச்சநீதிமன்றம் திருமணத்திற்கு வெளியே உள்ள உறவு ஒரு குற்றமல்ல, அது குற்றம் எனக் கூறுவது அரசியல் சாசனத்திற்கு விரோதமானது என இன்று தீர்ப்பளித்துள்ளது.

ரத்து செய்யப்பட்ட இ த ச பிரிவு 497 என்ன சொல்கிறது என்பதை இங்கே காணலாம்.

Section 497 in The Indian Penal காடே

497. Adultery.—Whoever has sexual intercourse with a person who is and whom he knows or has reason to believe to be the wife of another man, without the consent or connivance of that man, such sexual intercourse not amounting to the offence of rape, is guilty of the offence of adultery, and shall be punished with imprisonment of either description for a term which may extend to five years, or with fine, or with both. In such case the wife shall not be punishable as an abettor.
--------------------------------------
செய்தித்தாள் விவாததங்களைப் பார்க்கும் பொழுது, பெண்கள் மீது இ த ச பிரிவு 497 ன் கீழ் பல்வேறு நீதிமன்றங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், இப்போது அது முடிவுக்கு வந்து விட்டதகவும் பெண்களின் நலன் காக்கப் பட்டதாகவும் அறிவுஜீவிகள் எண்ணுகிறார்கள்.

இப்பிரிவின் படி ஒரு பெண்ணை குற்றவாளியாக்க முடியாது, இவ்வழக்கை தொடுக்கும் அதிகாரம் அப்பெண்ணின் கணவருக்கு மட்டுமே உண்டு தனது மனைவியுடன் கூடியவரை மட்டும் குற்றவாளியாக்க முடியும். அதே சமயம் ஒரு ஆண் மீது ஒரு பெண் வழக்கு தொடுக்க முடியாது ( இங்கு மட்டும் சமநிலை சற்று குறைகிறது). நடைமுறையில் எனது வழக்கறிஞர் அனுபவத்தில் இது வரை இப்பிரிவில் ஒரு வழக்கு தொடுக்கப்பட்டதாகக் கண்டதில்லை.

குற்றவியல் நடைமுறை சட்டத்தில் பிரிவு 125 ன் கீழ் கைவிடப்பட்ட மனைவி கணவரிடம் ஜீவனாம்சம் கோரலாம், தகாத உறவு வைத்துள்ளார் எனக் காரணம் கூறி ஜீவனாம்சத்தை கணவர் மறுக்கலாம். இது குறித்து சட்டம் என்ன சொல்கிறது என்பதை கீழே காணலாம்.

உச்ச நீதிமன்றம் சில பத்தாண்டுகளுக்கு முன்பே மனைவி ஓரிருமுறை தகாத உறவு வைத்திருப்பது என்பது ஜீவனாம்சத்தை மறுக்க காரணமாக அமையாது, “living in adultery” என இருக்க வேண்டும், அதாவது மனைவி ஒரு தொடர் தகாத உறவில் வாழ்ந்திருந்தால் மட்டுமே கணவன் ஜீவனாம்சத்தை மறுக்க இயலும் என தீர்ப்பளித்துள்ளது. எனவே இப்போதைய இ த ச பிரிவு 497 ரத்து என்பது அதி முற்போக்கான தீர்ப்பல்ல, இந்த வகை மனப்பாங்கு உச்சநீதிமன்றத்திற்கு புதிதல்ல.

இந்த விவாதத்தில் அறம் மற்றும் ஒழுக்கவியல் கேள்விகள் எழுவதை தவிர்க்க முடியாது. ஒரு தரப்பினர் திருமணத்திற்கு முன்பே உறவு கொண்டுள்ளாரா, திருமணத்திற்கு பின் தனது இணையுடன் மட்டுமே உறவு கொள்வேன் என வாக்குறுதி அளிக்கிறாரா என்பதெல்லாம் இன்றைய தேதியில் திருமணத்திற்கு முன் ஆண் பெண் இருபாலரும் இது குறித்து வெளிப்படையாகப் பேசிக்கொள்வதில்லை என கருதுகிறேன்.

ஒழுக்கவியல் அளவீடு மாறிக்கொண்டே இருந்தாலும் தற்காலத்தில் நிலவும் ஒழுக்கத்தை தற்காலத்தில் கடைபிடிப்பது சிபாரிசு செய்யத்தக்கது.

அவ்வாறு பார்த்தல் திருமண இணை இது குறித்து பேசிக் கொள்ளாவிட்டாலும், ஒரு தரப்பு தனது இணை திருமணத்திற்கு முன்பே ஓரிருமுறை உறவு கொண்டிருந்தாலும் அது சகஜமே என்றும் திருமணத்திற்கு பின் ஓரிருமுறை நிலை தடுமாறி ஒ ரு உறவில் ஈடுபடும் பொழுது அது சகிக்கத்தக்கது அது திருமண பந்தத்தை முறிக்கும் அளவுக்கு அடிப்படை தவறல்ல என்பது சமூக பொது ஒழுக்கவியல் அளவுகோல் என நான் கருதுகிறேன். தமிழகத்தில் கிட்டத்தட்ட கால் வாசி பெண்கள் தனது கணவர் பாங்காக் சென்று உறவு கொள்வதை தெரிந்தே அனுமதிக்கிறார்கள் அல்லது கடுமையாக எதிர்ப்பதில்லை, எனவே இன்று இங்கு ஆண்களை பொறுத்தவரை இது பெரிய விஷயமல்ல.

அதே சமயம் முறைமீறிய உறவுகொண்டுள்ள ஒரு ஆணையும் பெண்ணையும் சமூகம் சமமாக நடத்துவதில்லை, பெண்களுக்கு கூடுதல் காயம் ஏற்படும்.

ஆனாலும் திருமணத்திற்கு முன் உறவு கொள்ளாதிருப்பதும் திருமணத்திற்கு பின் தனது இணையுடன் மட்டும் உறவு வைத்துக்கொள்வதும் அது விக்ட்டோரிய ஒழுக்கவியல் என்றாலும் கூட ஒரு லட்சிய நடத்தை என கருதுகிறேன்.

இங்கு தான் அறமீறல் மற்றும் ஒழுக்க மீறல் குறித்த கேள்வி எழுகிறது

பொதுவாக வாக்கு மீறல் என்பது அறமீறல் எனக் கருதுகிறேன். சில சமயங்களில் ஒழுக்க மீறல் அறமீறல் என கருதுவதற்கு இடமுண்டு. ஒரு பொதுப் புரிதலின்படி ஒரு நபர் தனது இணை திருமணத்திற்கு வெளியே ஒரு தொடர் உறவு கொள்ளமாட்டார் என எண்ணிக்கொண்டு பின்னர் அவ்வாறு நடந்தால் அது அறமீறல் என எண்ணுகிறேன். அதே போலவே தான் மறைக்கப்பட்ட திருமணத்திற்கு முந்தைய உறவும். இதற்கு தண்டனை அல்லது கண்டன அளவுகளை பற்றி பின்னர் முடிவெடுக்கலாம். எந்த நிதானமான ஒழுக்கவாதியும் இதற்கு தூக்கையெல்லாம் சிபாரிசு செய்யப் போவதில்லை.

அதேபோல திருமணத்திற்கு முன் அந்த இணை வெளிப்படையாக பேசி உறுதிமொழிகளை பரிமாறிக்கொண்டடிருந்தால் அதை மீறுவது வெறும் ஒழுக்க மீறல் அல்ல அது அற மீறல்.

உங்கள் பதில் என்ன ?

கிருஷ்ணன்
------------------------------------------------------------------------------------------------------------

அன்புள்ள கிருஷ்ணன்,

நான் இந்த சட்டவிஷயங்களை முழுக்க வாசிக்கவில்லை. அவை பொதுவாசகர்களுக்குரிய மொழியில் எழுதப்பட இன்னும் கொஞ்சகாலம் ஆகும். அதன்பின்னரே என்னால் வாசிக்கமுடியும். சட்டமொழியின் முறுக்குசுற்றல்களில் சிக்கிக்கொண்டால் நாட்கள் கடந்துசெல்லும். ஏற்கனவே சிலமுறை சில பஞ்சாயத்துக்களுக்காக இவற்றை பொதுவாக வாசித்ததுண்டு.

இத்தகைய வினாக்களை அதிநுட்பமாக்கி ஊகக்கேள்விகள் வழியாக அணுகும் வழக்கமும் எனக்கில்லை. நானறிந்த வாழ்க்கைச்சூழலில் இவை என்னபொருள் கொள்கின்றன என்றுதான் பார்க்க முயல்வேன்.ஒழுக்கமீறல், அறமீறல் எல்லாம் சட்டத்தின் எல்லைக்குள் வருமா என்ன? சட்டம் எவர் பாதிக்கப்படுகிறார், எவர் பாதிப்பை உருவாக்குகிறார் என்று மட்டும்தானே பார்க்கும்?

சட்டத்துறையில் சிலருடன் இத்தீர்ப்பைப்பற்றிப் பொதுவாகப் பேசினேன். இத்தீர்ப்பு அளிக்கும் மேலதிக விலக்கு என்ன என்று நான் புரிந்துகொண்டது இதுதான். பொதுவாக எந்தச் சட்டமும் அறநெறிபோல ஒழுக்கவிதி போல எப்போதைக்கும் எக்காலத்திற்கும் உரியதாக வகுக்கப்படுவதில்லை. சட்டம் ஒரு வழிகாட்டுநெறி மட்டுமே. அது நடைமுறையில் எப்படிச் செயல்படுகிறது, என்ன விளைவை உருவாக்குகிறது என்பதைக்கொண்டு அதை தொடர்ச்சியாக மாற்றிக்கொண்டே இருக்கிறார்கள், சட்டத்திருத்தங்கள் வழியாக, தீர்ப்புவாசகங்கள் வழியாக.

இந்தச்சட்டம் ஏன் உருவானது என்பதற்கு ஒரு சமூகப்பின்னணியை வழக்கறிஞரான நண்பர் சொன்னார். 1860 இல் இந்தச் சட்டத்தின் முதல்வடிவம் பிரிட்டிஷாரால் உருவாக்கப்பட்டது. அன்று நிலப்பிரபுத்துவம் ஓங்கியிருந்த சூழலில் பெரும்பாலான நிலவுடைமையாளர்கள் தங்கள் குடியானவர், ஏவலர்களின் மனைவிகளை தங்கள் உடைமையாகக் கருதி வன்பாலுறவு கொள்ளும் வழக்கமிருந்தது. அடித்தள மக்களின் தன்மானத்திற்கு அறைகூவலாக இருந்த இப்பிரச்னைக்கு எதிராக உருவான சட்டம் இது. ஒருவர் தன் மனைவியுடன் இன்னொருவர் உறவுகொண்டிருக்கிறார் என்று ஆதாரபூர்வமாகக் குற்றம்சாட்டினால் அவ்வுறவுகொண்டவர் தண்டிக்கப்படுவார், அந்தப்பெண் அதை ஏற்றுக்கொண்டாளா இல்லையா என்பது ஒரு கேள்வியே அல்ல. அந்தப்பெண் அதன்பொருட்டு தண்டிக்கப்படுவதுமில்லை. ஏனென்றால் அன்றைய சூழலில் பெண் உண்மையிலேயே ஆணின் உடைமைதான். அவளுக்கு எந்த சமூக உரிமையும் இல்லை, எந்த தன்னிலையும் இல்லை. அவள் எதையும் தெரிவுசெய்யவோ மறுக்கவோ முடியாது.

ஐந்தாண்டு சிறை என்பது மிகக்கடுமையான தண்டனை.ஏனென்றால் அந்தப் பாலுறவை அன்றைய சட்டவல்லுநர் ஓர் அத்துமீறலாக, வன்முறையாகக் கண்டனர். அந்த கணவனுக்கு எதிரான ஒரு நேரடியான சூறையாடல் அது. அவன் தன்மதிப்பை அழிப்பது, அவனுடைய சமூக இடத்தை இல்லாமலாக்குவது.அன்றையசூழலில் அந்த எளியவனைக் காக்கும்பொருட்டு, அந்தப்பெண்ணுக்கும் பாதுகாப்பாக அமையும்பொருட்டு உருவான கருணைமிக்க ஒரு சட்டம்தான் அது. இன்று அதன் பயன்பாடு மாறியிருக்கிறது. இன்று கணவர்கள் மனைவிகளை தன் உடைமையாகக் கருதவும் அந்த எல்லையை அவள் மீறிவிட்டாளென்று எண்ணினால் தண்டிக்கவும் இச்சட்டம் பயன்படுகிறது. ஆகவேதான் கணவனின் உரிமை அல்ல பெண் என தீர்ப்பு ஆணையிடுகிறது.

திருமணத்துக்கு வெளியே பாலுறவு என்பது ஐந்தாண்டு தண்டனைக்குரிய குற்றம் என்னும் சட்டம் நடைமுறையில் இங்கே எப்படி கையாளப்பட்டது? அது இதுவரை திருட்டு, வழிப்பறி போல ஒரு பொதுக்குற்றம். எவருக்கும் புகார் இல்லை என்றாலும்கூட காவல்துறை நடவடிக்கை எடுக்கமுடியும் என்றே கருதப்பட்டது. இதைப்பயன்படுத்தி காவல்துறை ஆண்பெண் இணைகளை விசாரிக்கவும், விசாரணைக்கு காவல்நிலையம் கொண்டுசெல்லவும் முடியும். சட்டவிரோதமாக மிரட்டவும் முடியும். இதை காவலர் எப்படிப் பயன்படுத்துவார்கள் என நாம் அறிவோம். கணவன்மனைவியாகச் சென்று தங்குபவர்களுக்கேகூட இங்கே காவலர்களின் தொந்தரவு உச்சத்தில் உள்ளது.

உதாரணமாக, என் நண்பரான இதழாளர் ப்ரியா தம்பி ஒருமுறை மகாபலிபுரத்தில் ஒரு விடுதியில் தன் கணவருடன் தங்கியிருந்தபோது ஒரு காவலர் அவர்களை கணவன் மனைவி அல்ல என ‘சந்தேகப்பட்டு’ ‘நள்ளிரவில் அவர்களின் அறையைத் தட்டி உள்ளே வந்து ஆவணங்களைக் கேட்டு மிரட்டி தொந்தரவுசெய்ததைப் பதிவுசெய்திருந்தார். அவர் இதழாளர் என்பதனால், அருகிலேயே சென்னையில் குடியிருந்தமையால் தப்பினார். இல்லையேல் பெரிய சிக்கல்தான். ஏனென்றால் சட்டம் அதை அனுமதிக்கிறது. ஒரு குற்றம் நிகழ்கிறது என்று சந்தேகம் வந்தால் கண்காணிக்கவும் விசாரிக்கவும் காவலருக்கு உரிமை உண்டு.ஐந்தாண்டுவரை தண்டனைக்குரிய குற்றம் என்னும் ஒற்றைவரியே அந்த அதிகாரத்தை அளிக்கிறது

இரண்டாவதாக, அரசூழியர் விஷயத்தில் இது எவ்வாறெல்லாம் பயன்படுத்தப்படும் என நான் என் தொழிற்சங்கச்சூழலில் கண்டிருக்கிறேன். ஒரு பெண் அரசூழியரான கணவரை மிரட்டவோ பழிவாங்கவோ விரும்பினால் முறைமீறிய பாலுறவில் ஈடுபட்டதாக ஒரு வழக்கைப் பதிவுசெய்தால்போதும். அதில் சில சட்டச்சர்க்கஸ் எல்லாம் தேவைப்படும் என்றாலும் அதை குற்றவழக்காகப் பதிவுசெய்ய முடியும். விளைவு, உடனடி வேலைநீக்கம்தான். அதன்பின் நீண்ட நீதிமன்ற நடவடிக்கைகளுக்குப்பின்னர் விடுதலையானால் மட்டுமே வேலையைத் திரும்பப்பெற முடியும்- எந்த இழப்பீடும், ஊதிய மிச்சமும் இல்லாமல். இதைப்பயன்படுத்தி எத்தனையோ ஆண்கள் பெண்களால் மிரட்டப்பட்டிருக்கிறார்கள், பெரும்பணம் பறிக்கப்பட்டுள்ளது என நான் அறிவேன்.

அதேபோல மறுபக்கம் ஜீவனாம்சம் கொடுக்க மனமில்லாத கணவன் பெண் முறைமீறிய உறவில் இருக்கிறார் என எவரையேனும் சேர்த்து ஒரு குற்றப்பதிவை காவல்நிலையத்தில் செய்தால்போதும், அப்பெண் தீராத சட்டச்சிக்கலில் மாட்டிக்கொள்வாள். ஏனென்றால் அது விவாகரத்துக்கு வெளியே ஒரு குற்றவழக்கு. பெரும்பாலும் பெண்கள் உடனடியாக அடிபணிந்துவிடுவார்கள்.

இன்று நம் சமூகச்சூழ்நிலை மாறிவிட்டிருக்கிறது. கணவன்மனைவி அல்லாத ஆணும்பெண்ணும் ஓர் இடத்தில் தங்குவதோ, சேர்ந்து பயணம் செய்வதோ ,பொதுஇடத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பதோ இன்றைய வாழ்க்கையில் மிகச்சாதாரணமான விஷயம். அவர்கள் எப்போது தேவைப்பட்டாலும் காவலர்களுக்கும் பிறருக்கும் தாங்கள் முறைதவறிய உறவில் இல்லை என நிரூபிக்கவேண்டும் என்பது போல அபத்தம் வேறில்லை. கணவன் மனைவியே கூட எங்குசென்றாலும் கணவன் மனைவி என்பதற்கான முழு ஆதாரங்களுடன் இருக்கவேண்டும் என்பதும் உச்சகட்ட அராஜகம்.

இச்சூழலில்தான் இந்தத் தீர்ப்பு வந்துள்ளது. இது உருவாக்கும் மாற்றம் இதுதான். எந்த ஆண்பெண்ணைப் பார்த்தாலும் அவர்கள் கணவன்மனைவி அல்ல என்றால் ஒரு குற்றச்செயலில் ஈடுபடுகிறார்கள் என காவல்துறையோ பிறரோ கருதுவதை இது தடைசெய்கிறது. அவர்களை காவலரோ பிறரோ விசாரிப்பதை அவர்களின் தனியுரிமைக்குள் தலையிடுவதாக ஆக்குகிறது. அவ்வாறு ஒருவரை விசாரிப்பது சட்டப்படி குற்றம் ஆகிறது. இது மிகப்பெரிய ஒரு விடுதலை. இது தவிர்க்கமுடியாத ஒரு மாற்றம், நடைமுறை சார்ந்தது.

திருமண உறவு ஒரு சமூகநிகழ்வு என்ற புரிதல் முன்பு இருந்தது. ஆகவே அதை மீறுதல் என்பது சமூகத்துக்கு எதிரான குற்றம். ஆகவே அது சமூகத்தின்பொருட்டு சட்டத்தால் தண்டிக்கப்பட்டது. இன்று அது இருவர் தங்களுக்குள் செய்துகொள்ளும் ஒப்பந்தம் மட்டுமே என்ற புரிதல் உருவாகியிருக்கிறது. இது நீதிமன்றத்தில் உருவானது அல்ல, அதற்கு முன்னரே சமூகத்தில் உருவாகிவிட்டிருக்கிறது. முன்பு கணவன்மனைவிச் சண்டைகளில் உறவினர், ஊர் எல்லாம் தலையிடுவதுண்டு. இன்று அது இருவர் சார்ந்த தனிவிஷயம், அவர்கள் கோரினாலொழிய தாய்தந்தையரே தலையிடக்கூடாது என நம் வாழ்க்கைச்சூழல் மாறியிருக்கிறது. அந்தம்மாற்றத்தையே சட்டம் பிரதிபலிக்கிறது

இன்று திருமணம் இருவரிடையே நிகழும் ஒரு சட்டபூர்வ ஒப்பந்தம். அதை மீறுபவர் மறுதரப்பினருக்கு குற்றமிழைத்தவர். பாதிக்கப்பட்டவர் புகார்செய்யலாம், இழப்பீடு கோரலாம். இதுவே இத்தீர்ப்பு அளிக்கும் மாற்றம்.இங்கே பலர் நினைத்துக்கொண்டிருப்பதுபோல ஆணும்பெண்ணும் முறைமீறிய உறவுகளில் ஈடுபடுவது தவறே இல்லை என இந்தத் தீர்ப்பு சொல்லவில்லை. அது அரசுக்கோ சமூகத்துக்கோ எதிரான குற்றம் அல்ல என்றுமட்டுமே சொல்கிறது. அது தனிநபர்களுக்குள் நிகழும் ஒப்பந்த மீறல் என்று சொல்கிறது.

இது பெண்களுக்கு எதிரானதா? நடைமுறையில் அப்படி இல்லை என்பதே உண்மை. திருமண ஒப்பந்தத்தை மீறும் கணவனை சட்டபூர்வமாகப் பிரிய பெண்ணுக்கு உரிமை உள்ளது. அந்த மீறலை அதற்கான வலுவான காரணமாகக் காட்டலாம். அவனிடமிருந்து இழப்பீடும் வாழ்வுச்செலவும் பெறலாம். நடைமுறையில் முன்னரும் அதுவே சாத்தியம். அதற்குமேல் அவனைச் சிறைக்கும் அனுப்பவேண்டும் என்பதெல்லாம் சரியானது அல்ல. சிறைக்கு அனுப்பிவிடுவேன் என மிரட்டி ஆணின் இறுதிப்பைசாவையும் பிடுங்குபவர்களுக்கு வேண்டுமென்றால் இத்தீர்ப்பு ஒரு தடையாகத் தெரியலாம்.

சரி, திருமணம் ஓர் ஒப்பந்தம் என்றால் அதன் ஷரத்துக்கள் என்னென்ன? ஒப்பந்தத்தில் அதெல்லாம் தெளிவாக முன்னரே பேசப்பட்டிருக்கவேண்டுமா? தேவையில்லை. இத்தகைய ஒப்பந்தங்களுக்கு சமூகம் சார்ந்த பொதுப்புரிதல் உள்ளது. சட்டம் சிலவற்றை வரையறுக்கிறது. அதுவே போதுமானது. நீதிமன்றம் அந்த நடைமுறைப் புரிதல்களையே ஒப்பந்தத்தின் பரஸ்பர ஏற்புகளாகக் கருதும். அதை இந்தத் தீர்ப்பு மாற்றி எழுதவில்லை. அதன்மேல் விவாதத்தையும் தொடங்கிவைக்கவில்லை, சரிதானே?

சட்டம் என்பது நீதிக்கான ஒரு தொடர்முயற்சி. நீதி என்பது ஒழுக்கத்தையும் நெறிகளையும் நடைமுறைப்படுத்துவதற்கான ஓர் அமைப்பு. அதன் சாரம் என்பது மானுடநிகர்க்கொள்கை, அனைவருக்கும் வாழ்க்கையுரிமை போன்ற சில அறவிழுமியங்களை அடிப்படையாகக் கொண்டது. அவ்விழுமியங்களை நோக்கிச் செல்லும் பொருட்டு அமையும் சட்டமாற்றங்கள் நீதியின்பார்பட்டவைதான். எனக்கு இந்தத் தீர்ப்பு தனிமனித வாழ்க்கையில் அரசும் சமூகமும் கைசெலுத்துவதை தடுக்கும் தீர்ப்பாக, தனிமனித உரிமையை காப்பதற்கு உதவுவதாகவே தோன்றுகிறது. திருமண உறவு என்பது இரு தனிநபர்களுக்கு நடுவே நிகழ்வது மட்டுமே என்ற புரிதலை நாம் சட்டத்திற்குள்ளும் இதன்வழியாகக் கொண்டுவந்திருக்கிறோம்.

ஜெ
-------------------------------------
மின்னஞ்சல்
படித்ததை பகிர்கிறேன்

எழுதியவர் : (1-Oct-18, 8:24 pm)
பார்வை : 88

மேலே