இன்னினியே செய்க அறவினை – நாலடியார் 29

நேரிசை வெண்பா

புல்நுனிமேல் நீர்போல் நிலையாமை என்றெண்ணி
இன்னினியே செய்க அறவினை; - இன்னினியே
நின்றான் இருந்தான் கிடந்தான்தன் கேள்அலறச்
சென்றான் எனப்படுத லால். 29

- யாக்கை நிலையாமை, நாலடியார்

பொருளுரை:

இப்போதுதான் ஒருவன் இங்கே நின்றான் இருந்தான் படுத்தான், தன் உறவினர் அலறி அழும்படி இறந்துவிட்டான் என உலகத்தாரால் சொல்லப்படலாம் என்பதால்,

உடல் கட்டமைப்பு நிலையாமை புல் நுனியில் நிற்கும் நீர்த்துளி போன்றது என்று கருதி இப்பொழுதே அறச்செயல்கள் செய்.

கருத்துரை:

புல்நுனி நீர் போல உடம்பு நொடிப்பொழுதில் இறக்க நேர்வதால் உடனே நற்செயல்கள் செய்து கொள் என்று அறிவுறுத்தப்படுகிறது.

விளக்கம்:

புல்நுனி மேல் நிற்கும் பனிநீர் துளிநீராதலின் விரைந்து ஆவியாய்ப் போகும்; யாக்கையின் நிலையாமையும் அத்தகையது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (4-Oct-18, 9:01 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 92

சிறந்த கட்டுரைகள்

மேலே