அன்பான ஊடல்

" எப்போ பாரு! போனை கட்டிக் கிட்டே அழுறீங்க!
இங்க ஒரு மனுஷி கத்துறேனே! உங்க காதுல விழுதா? ", என்று கலவரமடைந்தாள் கலா.

" என்ன தான்டி வேணும்? கொஞ்சம் நேரம் நிம்மதியா இருக்கவிடுறியா?
எப்போ பாரு நைய் நைய்னு நச்சரிக்கற! ", என்று சளித்துக் கொண்டார் கணேஷ்.

" கல்யாணமான புதுசு எல்லாம் நான் பேசுனா கவிதை மாதிரி இருக்குனு சொல்வீங்க.
இப்போ என்னடானா இப்படி சளித்துக்கொள்கிறீங்க. ",என்றாள் கலா.

பதில் சொல்லாமல் தனது கைபேசியில் ஆழ்ந்திருந்தார் கணேஷ்.

கணேஷ் ஒரு சாப்ட்வர் இன்ஷினியர்.
வேலைவிட்டு வந்தால் எந்நேரமும் தனது கைபேசியில் டுவிட்டரிலே தங்கிவிடுவார்.
கலா அந்தக் காலத்து எட்டாங்கிளாஷ்.
தன் கணவன் எப்போது கைபேசியில் மூழ்கி இருப்பதை விரும்பாதவள்.
தினம் நடக்கும் கச்சேரி.
ஆனால் இன்று கலா கோபம் எல்லை தாண்டிவிட்டது.

தன் பேச்சை கேட்டு பதில் சொல்லாமல் போனில் கணேஷ் மூழ்கி இருந்ததால் கைபேசியை பிடுங்கி எறிந்துவிட்டாள்.
கைபேசி கீழே விழுந்து சிதறியதைக் கண்ட கணேஷும் கோபமாகி கலா கன்னத்தில் பளார் பளார் என்று இரண்டு அறைவிட்டார்.

" உனக்கு திமிரு அதிகமாயிடுச்சுடி. ", என்று பல்லை கடித்தார்.

கலாவிற்கு இரண்டு கண்களிலும் நீர் பொங்கி வழிய அப்படியே கீழே இருந்தாள்.
வார்த்தைகள் உதிக்க நாக்கு மறந்தது.

கணேஷ் தன் அறைக்குப் போய் கதவைச் சாத்திக் கொண்டார்.

சிறிது நேர மௌனத்திற்கு பிறகு உடைந்து கிடந்த கைபேசியை பொருக்கினாள் தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு.

வேகமாக சமையலறை சென்று எதையோ தேடினாள்.
சமையலுக்காக தன் கணவர் கொடுத்த பணத்தில் மிச்சம் பிடித்த பணத்தை ஒரு டப்பாவில் போட்டு வைத்திருந்தாள்.
அந்த டப்பாவை திறந்து இருந்த ரூபாயை எடுத்துக் கொண்டு முகம் கழுவிவிட்டு,
வெளியே கிளம்பினாள் கலா.

சிறிது நேரம் கழித்து தன் அறையில் இருந்து வந்த கணேஷ் தன் மனைவியை தேடினார்.
வீட்டிற்கு அவளைக் காணாததால் பக்கத்துவீட்டில் கேட்டார்.
அங்கும் வரவில்லை எனத் தெரிந்ததும் மிகவும் கவலையாக இருந்தது.

எப்போது சண்டை நடந்தாலும் வாய் பேச்சாத்தான் இருந்திருக்குமே தவிர கலாவை கணேஷ் அடித்ததில்லை.
இன்று தான் எல்லை மீறிவிட்டோம் என்று வருத்தப்பட்டார்.

தனது இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு தன் மனைவியை தேடிப் புறப்பட்டார்.
எங்கெங்கோ தேடினார்.
கண்ணில் கலா அகப்படாததால் சோகமாக வீட்டிற்கு வந்தார்.
வீட்டுப் போனிலிருந்து தன் மாமனார் வீட்டிற்கு கால் செய்து கேட்க, அங்கும் வரவில்லை என்றதும் கணேஷுக்கு அழுகையே வந்துவிட்டது.
கலாவை காணாத கலவரத்தில் அவர் தன் கைபேசியையே மறந்துவிட்டார்.

" மன்னிச்சுருடி கலா. என்னை விட்டு எங்கடி போன? ", என்று மனுஷன் வாய்விட்டே அழுதுவிட்டார்.

வாசலில் யாரோ வீட்டிற்குள் நுழைவது தெரிய நிமிர்ந்து பார்த்தார் கணேஷ்.
கலா நின்றிருந்தாள்.

தன் கண்ணீரை மறைத்துக்கொண்டு, " சொல்லாம கொள்ளாம எங்கடி போன? ",என்று கலா அருகில் சென்றார்.
எதுவும் பேசாத கலா தன் கையிலிருந்த போனை நீட்டினாள்.
வாங்கிக் கொண்ட கணேஷ் கைபேசியோடு ஒரு காகிதம் இருப்பதைக் கண்டார்.

அதைவிரித்துப் பார்த்தார்.
அதில், " நான் உடைத்த உங்க கைபேசியை சரி பண்ணிட்டேன். ஆனால் நீங்க உடைத்தது என் மனதை, நான் உங்கமேல வைத்திருந்த அன்பை. ", என்று எழுதியிருந்தது.

கணேஷ் நிமிர்ந்து பார்த்தார்.
கலா அங்கு நிற்கவில்லை. சமையலறை சென்றுவிட்டாள்.

கணேஷும் சமையலறை சென்று கலாவை சமாதானப்படுத்த முயன்றார்.

" அப்போ நீ என் கிட்ட பேசமாட்டியா? ", என்றார் கெஞ்சும் தோரணையில்.

அவரைக் கண்டுகொள்ளாமல் சமையல் வேலையை செய்து கொண்டிருந்தாள் கலா.

" நான் உன்னை அடிச்சதுக்கு நீ என்னை வேணா அடிச்சுக்கோ. ",என்று கன்னத்தைக் காட்டினார்.

கலாவிற்கு சிரிப்பு வந்தாலும் அடக்கிக் கொண்டு முகத்தை முறைப்பாகவே வைத்துக் கொண்டார்.
சமையல் வேலையும் முடிந்துவிட்டது.
ஆனால் கலா பேசவே இல்லை.
கெஞ்சி கெஞ்சி அலுத்துப் போன கணேஷ் கொஞ்சியும் பார்த்தார்.
ம்கூம்!

கடைசியாக கணேஷ் கோபமாகிவிட்டார்.
" ஏன்டி ஒரு மனுஷன் எவ்வளவு நேரம் கெஞ்சுறது? உனக்கு இரக்கமே இல்லையா?
கரடியா கத்துறனே உன் காதில் விழவில்லையா? ", என்றிட கலா ஒரு காகிதத்தை எடுத்து நீட்டினாள்.
அதில், " நான் உங்ககிட்ட பேசும் போதெல்லாம் பதில் சொல்லாமல் உங்க கைபேசியில் மூழ்கி இருந்தீங்களே! அப்போ எனக்கு எப்படி இருந்திருக்கும்? ", என்று எழுதப்பட்டிருந்து.

" அதுக்குத் தான் என்ன இப்போ பழிவாங்கட்டல, பேசுடி. இனி கால் வந்தாக் கூட கைபேசியைத் தொட மாட்டேன். ", என்றார் கணேஷ்.

கைபேசி ஒலித்தது.
காலை அட்டன்ட் செய்து பேசினார் கணேஷ்.

" ஹலோ யார் பேசுறது? "

" மச்சான் நான் மணி பேசுறேன். என்னடா டுவிட்டர் பக்கம் ஆளையே காணும்? "

" ஒன்னுமில்லை மச்சான். இப்போ வேலையா இருக்கேன்.
நாளைக்கு வாறேன். ", என்று அழைப்பைத் துண்டித்தார்.

கலா திரும்பி நின்று புன்னகைத்தாள்.
அப்பாட சமாதானம் ஆகிட்டா என்றெண்ணிய கணேஷ், " கலா ", என்று கூறிக் கொண்டே அருகில் நெருங்க மறுபடியும் கைபேசி ஒலித்தது.

போனை அட்டன்ட் செய்த கணேஷ் , " ஹலோ ",என்றிட, " என்ன மச்சி லைன் கட்டாயிருச்சு. ", என்று வாதத்திற்கு இழுக்க,
கலா கணேஷைப் பார்த்து முறைத்தாள்.

ஒரு நிமிடமென்று கலாவிற்கு ஆள்காட்டி விரலை காட்டி அனுமதி பெற்றுக் கொண்டு, " என்னடா மணி என்னை நிம்மதியா இருக்கவிட மாட்டியாடா?
நான் இனி டுவிட்டர் பக்கமே வர மாட்டேன்டா. அது உன்ன மாதிரி வெட்டிபயலுக கூடுற இடம். ", என்று காரசாரமாக பேசி அழைப்பைத் துண்டித்துவிட்டு, கைபேசி சுவிட்ச் ஆப் செய்துவிட்டார்.
பிறகு தன் மனைவி கலாவோடு காதல் மொழி பேசி நேரம் கழிய வயிற்று பசி வந்து கதவைத் தட்ட ஒருவருக்கொருவர் உணவை ஊட்டி மகிழ்ந்தார்கள்.

கைபேசி உடைந்தால் எளிதாக சரிசெய்து விடலாம்.
அன்பானவர்களின் மனம் உடைந்தால் சரி செய்வது மிகக் கடினம்.
குடும்பமே உடைந்து போக அது காரணமாகலாம்.
உங்களுடைய வாழ்க்கைத் துணையை நேசியுங்கள்.
வாழ்க அன்போடு.

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (4-Oct-18, 6:45 pm)
Tanglish : anpana oodal
பார்வை : 353

மேலே