அன்பான புரிதல்

" ஏன்டி! என்ன பார்த்தால் உனக்கு எப்படி தெரியுது?
எப்போ பார்த்தாலும் அந்தப்புடவை வாங்கி தாங்க. பக்கத்து வீட்டு கமலா கட்டியிருக்கா, விமலா கட்டியிருக்கானு வில்லடிக்கிற? ", என்று ஆபிஸ்க்கு போகும் அலட்டிக் கொண்டார் பாலு.

" ஏங்க! உங்க கிட்ட என்னங்க கேட்டேன்,
ஒரே ஒரு புடவை தானே.
அது இப்படி அலட்டிக்கிறீங்க! ", என்று நயமாகக் கேட்டாள் சுப்புத்தாய்.

" எங்கிட்ட இப்போ பணம் இல்லடி, நான் ஆபிஸ் போகனும், தினம் உன் பஞ்சாயத்தில் லேட்டாயிடுது. ", என்று கூறிவிட்டு குளியலறை சென்றார் பாலு.

" இனி பேசி பயனில்லை. ",என்றெண்ணிய சுப்புத்தாய் மௌனமாக இருந்தாள்.

குளித்துவிட்டு வந்தவர், " என்னடி! அப்படியே உட்கார்ந்து இருக்க!. டிபன் ரெடி பண்ணிட்டியா? ", என்றார் ஆபிஸுக்கு கிளம்பியவாறு.

அங்கிருந்து பதிலே வரவில்லை.

" சரி வேதாளம் முருங்கமரம் ஏறிடுச்சா? ", என்றவாறே டிபன் பாக்ஸில் உணவை நிரப்பிக்கொண்டு ஆபிஸுக்கு சென்றார்.

ஆபிஸில் வேலைகளில் மூழ்கினார்.
பாலு ஒரு தனியார் அலுவலகத்தில் குமாஸ்தாவாக வேலை பார்க்கிறார்.
அவருடைய மனைவி சுப்புத்தாய் படிக்காதவள்.
கணவர் தான் தன் உலகம் என்று இருப்பவள்.
கடந்த வாரம் பக்கத்து கமலா ஒரு புடவை கட்டியிருந்தாள்.
அந்த புடவை நல்லா இருந்ததால் அந்த மாதிரி தனக்கும் புடவை வேண்டும் என்று தன் கணவரிடம் ஒருவாரமாக கேட்கிறாள்.
அவர்களுக்கு கல்யாணம் ஆகி இரண்டு வருடங்களாகியும் குழந்தை இல்லை.
ஆனால் பாலுவுக்கு சுப்புத்தாய் எப்போதுமே ஒரு குழந்தை தான்.
மிகவும் அன்பானவள்.

மதிய உணவு வேளையில் சாப்பிட்ட அமர்ந்த பாலு, " அவ சாப்பிட்டாலோ இல்லையோ? ", என்று நினைத்தவர் கைபேசியை எடுத்து வீட்டிற்கு கால் செய்தார்.

போன் ரீங் ஆனது. யாரும் எடுக்கல.
இன்னும் கோபமாக இருக்கிறாள் போல என்று நினைத்தவர்,
சாப்பிட ஆரம்பித்தார்.
பாதிக்குமேல் சாப்பிட பிடிக்காமல் அப்படியே மூடி வைத்துவிட்டு,
கையை கழுவினார்.
மீண்டும் வேலைகளில் மூழ்கினார்.
மாலை ஐந்து மணியானது.
ஆபிஸிலிருந்து வெளியே வந்தவர் நேராக ஜவுளிக்கடைக்கு சென்றார் ஒரு வாரமாக தன் மனைவி ஆசைப்பட்டு கேட்டு நச்சரித்த புடவையை வாங்க.

தேடிப்பிடித்து அந்த புடவையை வாங்கிகொண்டு கிளம்பினார்.
வரும் வழியில் இரண்டு முழம் பூ வாங்கிக் கொண்டார்.
அப்படியே அவளுக்கு பிடித்த காராபூந்தி வாங்கிக் கொண்டார்.

வீடு நோக்கி விரைந்தார்.
ஏழு மணியாகியிருந்தது.
வீடு இருட்டாக இருந்தது.
உள்ளே சென்றவர் தேடி பிடித்து மின்விளக்குகளை ஆன் செய்தார்.

சுப்புத்தாய் படுக்கையில் படுத்திருந்தார்.
அருகே சென்று பார்த்தார் பாலு.
அவள் தூங்கிக் கொண்டிருப்பது தெரிய,
அடுப்படி சென்று வேலையில் இறங்கினார் பாலு.

ஒரு வழியாக சமையல் முடிந்தது.
ஒரு தட்டில் உணவை எடுத்துக் கொண்டு தன் மனைவியை எழுப்பினார்.
அவளால் எழுந்திக்க முடியவில்லை.
நெற்றியில் அனலடித்தது.

உடனே உணவு தட்டை மூடி வைத்துவிட்டு சமையலறை சென்று சுக்குத் தண்ணி போட்டு ஒரு தம்பளரில் கொண்டு வந்தார்.
காய்ச்சல் மாத்திரையை எடுத்து தன் மனைவி தூக்கி தன் தோளில் சாய வைத்துக் கொண்டு மாத்திரைக் கொடுத்து சுக்குத் தண்ணியை குடிக்கச் செய்தார்.
கொஞ்சம் தெளிச்சல் வர தட்டிலிருந்த உணவை ஊட்டிவிட்டார்.

உணவு ஊட்டுதல் முடிந்ததும்
தான் வாங்கி வந்த பூவிற்கு தண்ணீர் தெளித்து வைத்துவிட்டு, தானும் சாப்பிட்டுவிட்டு படுத்து தூங்கினார்.

காலையில் பாலு எழுந்த போது தேநீர் தயாராக இருந்தது.
குடித்துக் கொண்டே குளியலறை சென்றார்.
திரும்பி வந்த போது அவருடைய உடை தயாராக இருந்தது.
உடையை அணிந்து கொண்டார்.
சாப்பாடு தயாராக இருந்தது.
சாப்பிட்டார்.

சாப்பிட்டு முடித்த பாலு,
தான் வாங்கி வந்த பூவை எடுத்து அவள் தலையில் வைத்தார்.
கராபூந்தி எடுத்து ஊட்டிவிட்டார். தான் வாங்கிவந்த புடவையை கட்டிக் கொண்டு வரச் சோன்னார்.

" எங்கே? ", என்றாள்.

" பீட்ச்சுக்கு போய்ட்டு வரலாம். ", என்றிட அவளும் ஆர்வமாகக் கிளம்பினாள்.

இருவரும் கடற்கரை மணல் அமர்ந்திருந்த போது, அவர்கள் முன்னாடி ஒரு ஐந்து வயது பையன் கிழிந்த சட்டையோடு அலைகளில் விளையாடிக் கொண்டிருந்தான்.
பிறகு வயிற்று பசி உணர்ந்தவனாய் அங்கிருந்தவர்களிடம் சாப்பிட எதாவது தருமாறு கேட்டான்.
யாரும் தரவில்லை.

கடைநிலையாக பாலு, சுப்புத்தாயிடம் கேட்க,
அவர்கள் சுண்டல் விற்பவரை அழைத்து சுண்டல் வாங்கி கொடுத்துவிட்டு, " உன்னுடைய அப்பா, அம்மா எங்கே? ", என்று கேட்க, " இந்த தரை தான் என் அம்மா, அந்த கடல் தான் என் அப்பா,
அந்த அலைகள் தான் அவருடைய அன்பு கரங்கள். ", என்று அந்த சிறுவன் சைகை செய்தான்.

சுப்புத்தாய்க்கு மனசு உருகிவிட்டது.
" ஏங்க இவனை நாம் வளர்க்கலாமா? ", என்று கேட்க, " சரி ", என்றார்.

கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற அப்பா திரும்பவில்லை.
கடற்கரையில் கணவனுக்காக காத்திருந்தே உயிரை விட்டாள் அம்மா.
அங்கு வருபவர்கள் தின்றுவிட்டு போடும் மிச்ச மீதியில் அந்தபையன் வாழ்ந்தான்.
இல்லை, அன்பான அப்பா, அம்மாவிற்கு மீண்டும் மகனாகக் காத்திருந்தான்.
தவம் கிடந்தான்.
வரம் பெற்றான்.

புது புது ஆடைகள்.
வித விதமான பொம்மைகள்.
பள்ளிக்கூடம் சென்று கற்கவும் தொடங்கிவிட்டான்.
அப்பா, அம்மா இருக்கும் செல்லப் பிள்ளையாகிவிட்டான்.
குடும்பமே மகிழ்விற்கு பஞ்சமில்லாமல் வாழ்ந்தது.

பிறர் அன்புக்காக ஏங்காமல் நம் அன்பை காட்டும் போது,
நாம் காட்டிய அன்பு வட்டியும் முதலுமாகத் திரும்பக் கிடைக்கிறது.
வாழ்க அன்போடு.

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (4-Oct-18, 12:11 pm)
Tanglish : anpana purithal
பார்வை : 365

மேலே