பேருக்கு வாழ்க்கை

====================
நல்லதுக்கு காலமில்லா நாட்டினிலே வாழ்வதற்கு
நாமிங்கு செய்ததென்ன பாவம் பாவம்
அல்லலுற்று நித்தநித்தம் அழுகின்ற நிலைக்கெல்லாம்
ஆண்டவனே விட்டானா சாபம் சாபம்
**
விலைவாசிப் பேயென்றும் விரட்டிவிரட்டி அடித்தாலும்
வேறெங்கே தான்நாமும் போவோம் போவோம்
மலைபோல உயர்ந்திட்ட மாதுன்பம் வதைத்தாலும்
மனதாலே தினந்தோறும் நோவோம் நோவோம்
**
கடன்காரன் வந்தெங்கள் கழுத்தைத்தான் நெரித்தாலும்
கண்ணீரை மட்டும்தான் கொடுப்போம் கொடுப்போம்
உடன்பட்டு வாழவந்த உத்தமியின் குங்குமமும்
உயிர்வாழ உயிர்வாழ்ந்துக் கிடப்போம் கிடப்போம்
**
மழைவெள்ளம் வீட்டுக்குள் மலமலன்னு புகுந்துவிடும்
மறுநொடியில் தெருவோரம் இருப்போம் இருப்போம்
உழைத்துழைத்து வாழ்வினிலே ஒன்றுமற்று போனதற்கு
ஒருசாட்சி நாம்வாழ்வை வெறுப்போம் வெறுப்போம்
**
வறுமைக்குப் பிறந்திட்ட வாரிசுகள் என்றாகி
வாழ்வதற்கு நாம்பழகிக் கொண்டு கொண்டு.
பெறுமதியை இழந்திட்ட பெரியவங்கி நாணயம்போல்
பேருக்கு வாழ்ந்திருக்கோம் இன்று இன்று
**

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (10-Oct-18, 3:02 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 271

மேலே