மருவுமின் மாட்சிமைப்பட்ட நல்லோர் கூறும் அறம் – நாலடியார் 36
(மெல்லின எதுகை) நேரிசை வெண்பா
இன்றுகொல் அன்றுகொல் என்றுகொல் என்னாது
பின்றையே நின்றது கூற்றமென் - றெண்ணி
ஒருவுமின் தீயவை ஒல்லும் வகையால்
மருவுமின் மாண்டார் அறம். 36
- அறன் வலியுறுத்தல், நாலடியார்
பொருளுரை:
இன்றோ அன்றோ என்றோ என்று இகழ்ந்திராமல் பின்னாலேயே நமன் இருக்கின்றான் என்று மதித்து தீய செயல்களை நீக்குங்கள். மாட்சிமைப்பட்ட நல்லோர் கூறும் அறச் செயல்களை இயன்ற வகையினால் தழுவிச் செய்யுங்கள்.
கருத்துரை:
கூற்றுவன் எந்த நேரத்திலும் வருவான் என்று கருதி உடனே நல்லன செய்யவேண்டும்.

