கவிதை வருமா… எப்போதெல்லாம்

#கவிதை வருமா…? எப்போதெல்லாம்..?

நிலம் நோக்கா நீள் விழியால்
கணம் நோக்கும் பார்வையிலே
உளம் புகுந்த நொடி தன்னில் - விரல்
பிடித்து வரும் கவிதையடி..!

அழும் மழலை அடக்கிடவே
சேர்த்தணைக்கும் வேளையிலும் தூளியிலே ஆட்டுகையில் துள்ளலுடன் தாலினிலே ஆடிவரும் கவிதையடி..!

ஆண்டவனின் அருள் கோலம்
ஆலயத்தில் கண்டுவிட்டால்
வேண்டுதலை வழி மறித்து - மெய்
சிலிர்க்க வரும் கவிதையடி..!

ஏமாற்றம் துரோகமெல்லாம்
சூழ வரும் வேளையிலே
மையம் கொண்ட புயலைப்போல்
சுழன்று வரும் கவிதையடி..!

நீள் வானம் நிலவு காண
கண்சிமிட்டும் மீன்கள் காண
சிந்தையிலே சந்தம் கூட்டி -தாள்
பந்தியிலே படையலிடும் கவிதையடி..!

காற்று தீண்ட கவிதை வரும்
காதல் தீண்ட கவிதை வரும்
கருணை கொண்ட கவிஞனுக்கு
காட்சியெல்லாம் கவிதை தரும்..!

#சொ.சாந்தி

எழுதியவர் : சொ.சாந்தி (10-Oct-18, 10:00 pm)
சேர்த்தது : C. SHANTHI
பார்வை : 123

மேலே