பிரிவு உபசார விழா
பிரிவு உபசார விழா
31-08-2018 அன்று எங்கள் அலுவலகத்தில் எனக்கும் என் தோழி கிருஷ்ண குமாரிக்கும் இன்னும் இருவருக்கும் நடைபெற்ற பிரிவு உபசார விழாவில் வாசித்த கவிதை…
#கவிதை எனக்கும் என் தோழிக்குமானது
காலத்தின் கால்கள் வெகு நீளம்தான்
என்னமாய் ஓடுகிறது…?
நாலெட்டு ஆண்டுகளை
நாலெட்டுகளில் தாண்டிக் கடந்ததாய்
ஓர் உணர்வு.. !
திரும்பிப்பார்க்கிறேன்
எங்களின் பணிக்காலங்கள்
கண்ணுக்கெட்டா தூரம் கடந்திருக்கிறது
இல்லை...இல்லை…
எங்களைக் கடத்திவிட்டிருக்கிறது..!
மகிழ்ச்சியில் மூழ்கி
களித்த வாழ்க்கை
மூச்சிரைத்த வாழ்க்கை…
முனகளான வாழ்க்கை..
ஆசுவாசப் படுத்திக்கொள்கிறோம்
நானும் என் தோழி கிரிஷ் ஷும்…!
பணி விடுவிப்புக்கூட
பிணிக்கு விடுப்பளிக்கிறது
பணிக்கு ஓய்வு போன்று
பிணிக்கு ஓய்வாய்..!
இதோ
கடந்த காலங்களை
நினைவுகளால் தள்ளிப்பார்க்கிறேன்
சற்றே பின்னோக்கி…
வேலை வாய்ப்புத்துறையில் இருந்து
துவங்குகிறது
எங்களுக்கான பொற்காலம்
எழுத்துத் தேர்வு, தட்டச்சுத் தேர்வு
தேர்ச்சி பெற்று
படிப்படியாக முன்னேற்றம்
இட்டுச்சென்றது நேர்முகதேற்விற்கும்
வஞ்சனை செய்திருக்கவில்லை
வாஞ்சையுடன்தான் இருந்தது
அனைத்துத் தேர்வுகளும்
அரசு பணி கிடைக்குமா..
கிடைக்காதா…?
இப்படி எல்லாம்
ஒத்தையா ரெட்டையா பிடிக்கவில்லை மனது..
மமதை… மமதை…
வேற்றுப் பணியில் இருக்கும்
மமதை…!
அரசுப்பணிக்கான வேறு ஒரு தேர்வு
எழுதிவிட்டு திரும்பியபோது
காத்திருந்தது
ஆனந்தத் தாண்டவ செய்திகள்…
அரசுப் பணி நியமன ஆணையை
வீடு சேரத்திருந்தது
பதிவு அஞ்சல்...
கையூட்டு இல்லாமல்
அரசுப் பணியா…?
கிள்ளிப்பார்த்துக்கொள்கிறேன்
வலித்தது… நிஜத்தில்…
வலியும் பிடித்துப்போன நேரம்…
வேறென்ன…? சொல்வதற்கொன்றுமில்லை…!
ஆனந்தத்தில் கைகளை உயர்த்தி
ஆர்ப்பரிக்கிறேன்…
மேகம் தாண்டி
வானம் தொடுகிறது கைகள்..!
கே.கே.. தோழியுடனான
முதல் சந்திப்பில்
“நீங்களும் இந்த அலுவலகத்திற்குத்தான்
வருகிறீர்களா… நானும்…”
தெரியாதபோது மரியாதைகளில்
ஆரம்பித்த பேச்சுக்கள்
நாளாக நாளாக
மரியாதை தேய்மானங்கள்
“டி” க்களில் பலம் கொண்டிருந்தது
அந்நியம் விலக்கி
அந்நோன்னியமான நட்பு..!
ஊரில் வாழ்வு என்றால்
மார்பில் சந்தனமாகிவிடும் எங்களுக்கு
நட்புகளின் திருமணமா. ?
நாங்கள் புதுப்புது புடவைகள்
எடுத்துக்கொண்டோம்
புடவைக்கு மாட்சிங் கண்ணாடி வளையல் வாங்க
தி நகர் பாண்டிபஜார் என்று
திரியோ திரி என்று திரிந்து
மாய்ந்து மாய்ந்து
வளையல்கள் வாங்கினோம்
பிடித்திருந்தபோது
மற்ற வளையல்களும்…
மற்ற வளையல்களால்தான்
நிறைய செலவுகள் எங்களுக்கு
மற்ற வலையல்களை ஏந்திக்கொண்டு
மாட்சிங் புடவைகளுக்கு
கடை கடையாய் ஏறி இறங்கி
வளையல்கள் நிறத்திற்கு
புடவைகள் வாங்கிய கதைகள் போல்
எங்களிடத்தில்
நிறைய கதைகள் உண்டு..!
சுமைகள் ஏதுமின்றி
சுதந்திரமாய் திரிந்த பறவைகள் நாங்கள்…
திருமணக்கடலில் மூழ்கி
சந்ததி முத்துக்களை மட்டுமா எடுத்தோம்..?
விருப்பங்கள் ஏதுமின்றி
பரிசளித்தார்கள்
கண்ணீர் முத்துக்களையும்…
துன்பக் கடலில் மூழ்க ஆரம்பிக்கையில் அவளுக்கு துடுப்பாக நானும்
எனக்கு துடுப்பாக அவளுமென
காப்பாற்றப்பட்டு
கரை சேர்ந்த கதைகளும்
நிறைய உண்டு..!
துன்பங்களையும் இன்பங்களையும்
பகிர்ந்து கொண்டு ஆற்றுப்படுத்திக் கொண்டது போல்தான்
உணவவினை பகிர்ந்து
பசியாற்றிக் கொண்டோம்..!
அடுத்தடுத்த கேபின்கள்
நெகிழிப் பைகளின்
சிறு சலசலப்புகளும்
செய்தி அறிவித்துவிடும்
நொறுக்குக்குத்தீனி பிரிக்கப்படுகிறதென்று…
“கிரிஷ்”
குழந்தையாய் செல்லமாய்
என் குரல்தான்…
“என்னடா செல்லம்…
பர்பி கவர் பிரிக்கிற சத்தம் கேட்டுரிச்சா…
உனக்கில்லாததா…
இந்தாடி செல்லம்…”
இது என் க்ரிஷோட குரல்..
இருவரையும் பிரிந்திருக்கும்
தடுப்பிற்கு மேல் நீளும் கைகளில் உள்ள பர்பியில் உள்ள சுவையில்
நிறைந்திருக்கும்
தித்திப்பான தோழியின் அன்பு..
நான் கொடுப்பதிலும் அவ்வாறே..!
இப்படியாகத்தான்
எங்களின்
நாலெட்டு ஆண்டு நட்புக் கதைகள்
நாலாறு புத்தகம் போடலாம்..!
எங்களை ஒன்றாக இணைத்தது
இந்த அலுவலக கோவில்தான்..
தெய்வமாய் எங்களின் தொழில்
தொழுதோம் மனதில் ஆராதனையோடு..!
உழுதோம்.. விதைத்தோம் உழைப்பினை
கைவிட்டதில்லை இந்த கடவுள்
அறுவடைகள் அமோகமாய்…
போ என்று தோழியை விரட்டுகிறது
காலத்தோடு அலுவலகம்…
போய்விடுகிறேன் நானும்
என் இல்லத்திலும் கோவில் உண்டு
தொழுவதற்கு தெய்வங்களுண்டு
என்பதான விடை பெறுதல்களோடு
இன்றைய பிரிவுகள்
இறுக்க மான சூழல் என்றாலும்
மறக்க இயலா சூழல்…
அனைவருக்குமான நன்றிகளுடன்…!
பணி ஓய்வு காணும் தோழி
நலமுடனும் நலமுடனும் நெடுங்காலம் வாழ
நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்…!
விடை பெற இருக்கும்
எங்களை வாழ்த்த வேண்டுகிறோம்
உங்களையும்…!
#சொ.சாந்தி