எசக்கி
பக்கத்து ஊருல வேப்பில அடிக்கறவரு இருக்காராம் கூட்டிட்டுப் போ.
இது புதூர் மாமாவின் அறிவுரை.
அதெல்லாம் வேணாம்பா, கிழக்கால இருக்க அம்மங் கோவில் பூசாரிய தண்ணி ஓதி முகத்துல தெளிக்கச் சொல்லலாம். புள்ள பயந்திருக்கு அவ்ளோதான்.
சுடலி ஆத்தாவின் கருத்து.
எங்கள் வீட்டு வாசல் திண்ணை முதல் வெளியில் போட்டிருக்கும் நார்க்கட்டில் வரை ஊர்ப் பெரிசுகளின் சங்கமம் இலவச அறிவுரைகளுடன். நடுவில் நானும் என் அப்பா அம்மாவும்.
இத்தன பேர் கேக்குதாங்க இல்ல. வாய தொறந்து பேசுல. விதி முடிஞ்சி குமாரு போய்ச் சேந்துட்டான். நம்ம வீட்லேர்ந்து வேணும்னாலும் சுடுகாட்டு ஆலமரம் பக்கத்துல படயல் வச்சு கும்பிட்டிடுவோம். அவன் ஆத்மா நல்ல கதி அடஞ்சுடும்.
இது என் அம்மா.
அதுவரை பித்து பிடித்தவன் போல் அமைதியாக இருந்த நான் பேசத் தொடங்கினேன்.
நான் தான் குமாரு..
ஆத்தாடி என்று கூக்குரலிட்டு சில பெருசுகள் பயத்தில் நழுவத் தொடங்கியிருந்தன.
நான் நிதானமாகத் தொடர்ந்தேன். எல்லாரும் நல்லாக் கேட்டுக்கோங்க . குமார் என்னோட நெருங்கிய நண்பன். நல்லாப் படிக்கிறவன். எங்க வகுப்பிலேயே அவன்தான் மொத மதிப்பெண் எடுப்பான். முந்தாநாளும் அவன் படிச்சிட்டு தான் இருந்தான். நான்தான் அவன தொந்தரவு பண்ணி உணவு இடைவேளைல பள்ளிக்கு வெளியில நடந்த விபத்த பாக்க கூட்டிட்டுப் போனேன்..
கோரமானஅந்த விபத்தப் பாத்துட்டு திரும்பும்போது நிலை தடுமாறி என் சைக்கிள் எதிரில வந்த பஸ் ல மோதிர்ச்சு.. அப்பவும் பின்னால உக்காந்திட்டிருந்த குமாரு தான் என்ன பக்கவாட்டுல தள்ளி விட்டான். நான் பொழச்சிக்கிட்டேன்.. அவன் செத்து போய்ட்டான்..
இனிமே குமாரா அவன் குடும்பத்துக்கு தேவையான எல்லாத்தையும் செய்ய வேண்டியது என் பொறுப்பு.
நான் நல்லா படிச்சு வேலையில சேர்ந்து அவனோட ரெண்டு தங்கைகளையும் , பெற்றொரையும் எங் குடும்பம் போல பாத்துக்குவேன். சொல்லிவிட்டு
முடிவுடன் குமாரின் வீட்டைநோக்கி நடக்க ஆரம்பித்தான் பன்னிரண்டாம் வகுப்பு மாணவனான எசக்கி.
சந்தோஷப் பெருமூச்சுடன் எழுந்து
அதான் எம்புள்ள பேசிட்டான்ல இனிமே அவங்க குடும்பமும் எங்க குடும்பம் தான். எல்லாரும் கிளம்புங்க கிளம்புங்க. சோலிய பாக்க போங்க.
தன் பிள்ளையின் செய்கையை பெருமையுடன் ஒப்புக் கொண்டு நடந்தார் எசக்கி என செல்லமாக அழைக்கப்படும் இசக்கியின் அப்பாவும் தமிழாசிரியருமான நல்லசாமி.
_____________________________________________________________________