உதிருமென் இலையாளுக்கு

இலையுதிர் காலமிது;
பொல பொல பொல
என்றுதிரும் இலைகளை,
பலநிறம் மாறியிங்கவை
புரி வர்ணஜாலங்களை,
சர சர சரவென்று
பாதம்படுஞ் சருகினை,
மெல்லிய குளிர்காற்றென்
மேனி தழுவுதலை,
எங்கோ இருக்கும்
உன்னணைப்பின்
நினைவு தரும்
கதகதப்பில்
மனமுருகி
இரசித்த நான்;

உதிரும் இலைகள்
எதிர்நோக்கும்
உன்னுதிர்வையும்,
நிறமாற்றங்கள்
எம்வாழ்வின்
எதிர்பாராத்
திருப்பத்தையும்,
மிதிபடும் சருகுகள்
மெல்ல (உ)என்னுள்
மறுகிடும் ஆன்மாவையும்,
நினைவுறுத்த;
சில்லென்ற குளிர்காற்று
முகம் படவும்
“ஐயோ! இப்படித்தான்
என்னவளுடலும் ஓர்நாள்
சில்லிடுமோ”
என்று இன்று
மனஞ்சிதைந்து
விக்கித்து நிற்கிறேன்...

அழையா விருந்தாளியாய்
நம்வாழ்வில் உள்
நுழைந்த அந் நோய்
நம் இளவலின்
மணநாள் வரையேனும்
இரங்கியுனை
என்னிடமே
கொடுத்திடாதோ
எனும் ஏக்கம்
என் கண்களில்
குளமாகிக் கசிந்து,
கடலாகிப் பின்
கொட்டியது
அருவியாக...

கடன்பட்ட
வேளையிலும் இஃது
கலங்கியவன்
நான் அல்ல;
உடன்கட்டை
ஏறிடவும் வழியிலையே!
எம்மகனை என்செய்வேன்?
திடங்கொண்ட என்னுடலம்,
ஆயுளில் சரிபாதி
தந்திடவியலுமோ
நானுனக்கு?
மடங்கொண்ட மாமயிலே
எனில்பாதி
எனவென்றும் - நான்
ஏத்தும் என் மனையாளே!

எழுதியவர் : தமிழ்க்கிழவி (14-Oct-18, 12:53 pm)
சேர்த்தது : தமிழ்க்கிழவி
பார்வை : 489

மேலே