சிறகு முடக்கப்பட்ட சிறைப்பறவை

உனக்கென்ன ராசா
மணியடிச்சா சாப்பாடு,
மாத்திக்க உடுதுணி,
போத்திக்க போர்வையொண்ணு,
ராத்திரிக்குத் தூங்குமிடம்;
பிச்சைக்காரன் பெருமூச்சு விட்டான், என் எச்சைப் பொழப்ப பாத்து...!

நாலு சுவருக்குள்ள
நாலு பேர ஒண்ணாப்பூட்ட,
காலு நீட்டக்கூட
ஏலாதடா தம்பி இங்கை...!

சுத்த பத்தம் பாத்து என்னப்
பெத்தவ வளத்து விடச்
சுத்த சைவன் நானிங்க
செத்த மாமிசந் தின்ன, மணம்
செத்தவும் புடிக்காமச்
சத்தமா வாந்தி வரும்;
எத்தினி கயிட்டப்பட்டு
மெத்தனமா அதையடக்க...?

சாயந்தரமானா, மனசுங்
காயங்கண்ட ஊனுடம்பும்
மாயங் காட்டி என்னை
மயக்குறவளத் தேடும்
போயங்க ஒரு எட்டுப் பாத்து
வாயிங்கை எண்டு மனந்துடிக்கும்...

‘ஸ்கைப்’ கடவுள் மாத்திரம்
‘நைன்’ எண்டா எம்பொழைப்பு
சிரிப்பாச் சிரிச்சிருக்கும்
எரிச்சலா வருமெனக்கு
எப்பவும் அத நெனைக்க...!

பால்குடி மாறாம
பாத்த என்ர பச்சை மண்ணு
“பால்குடி, இந்தா” எண்டு
பாசங் காட்டுந் திரை மேல
விரும்பியென்ன மணமுடிச்ச
வேல்விழியாள் எம்மனைவி
விடைசொல்வாள் நெடிதுயிர்த்து,
கடைசியா ஒருமுத்தங் கூடக்
கானல் நீர் தானெனக்கு...!

நாள் கிழமை தெரியாம,
சூழ் சோகங் குறையாம,
பாழும் விதிய நொந்து
வாழ்ந்திருந்தன் வாழாமல்...!

~ தமிழ்க்கிழவி (2018)

குறிப்பு:
ஐரோப்பியச் சிறையில் வாடிய ஆசியாவைச் சேர்ந்த ஒருவரது ஓர்நாள் வாழ்க்கைச் சரிதம் படித்தறிந்த பின், அப்பிரதிபலிப்பில் எழுந்த கவிதை

‘ஸ்கைப்’ - Skype
‘நைன்’ - Nein (German மொழி)
இல்லை

எழுதியவர் : தமிழ்க்கிழவி (14-Oct-18, 1:14 pm)
சேர்த்தது : தமிழ்க்கிழவி
பார்வை : 603

மேலே