நல்லத்துக்கு காலமில்லை
#நல்லதுக்கு காலமில்லை..!
அறிவிருந்தும் திறனிருந்தும்
அயராத உழைப்பிருந்தும்
அடிவருடி ஆனவர்க்கே - உலகம்
ஆனதெல்லாம் பெருங்கொடுமை
நோய்கண்டு விடுப்புக் கோரின்
வாய்விட்டு சிரிப்பார் முன்
பொய்யான மரண செய்தி
மெய்யாவது பெருங்கொடுமை..!
துன்பமுரைத்து உதவி கண்டு
தொலைந்து போவோர் உலகில்
நல்லோரை தீயோராய் - நெஞ்சம்
நினைப்பதெல்லாம் பெருங்கொடுமை..
ஊனமுற்ற பிச்சைக்காரன்
நாள் முழுதும் எடுத்த பிச்சை
நள்ளிரவில் மதுக்கடையில்
சேர்வதெல்லாம் பெருங்கொடுமை..!
தாகமென வந்தவர்க்கு
நீரெடுத்து வருமுன்னே - கூர்
வாள் முனையில் பொருள் கொள்ளை
போவதெல்லாம் பெருங்கொடுமை..!
சேர்த்ததெல்லாம் பிள்ளைக்கென
பெயர் மாற்றம் செய்த பின்னால்
இரக்கமின்றி ஈன்றோரை - முதியோரில்லம்
தள்ளிவிடல் பெருங்கொடுமை..!
பொய்யான வாக்குறுதி தந்து
அரியணை அமர்ந்த பின்னால்
மக்களை எல்லாம் மறந்து - தலைவன்
எக்காளமிடுவதெல்லாம் பெருங்கொடுமை..!
நல்லதென செய்யும் செயல் - நாளும்
பொல்லாதென மாறி நின்றால்
நெஞ்சம் வெடிக்கும் நிலை
புவியில் நல்லதுக்கு காலமில்லை..!
------------------------------
#சொ.சாந்தி
------------------------------