பாம்புகளைக் கொல்லாதீர்

.
==========================
நடக்கும் வழிகளிலோ
விவசாய நிலங்களிலோ
முற்றத்திலோ அல்லது
ஊரின் ஒதுக்குப்புறமான
ஆள் அரவமில்லாத இடங்களிலோ
தன்னிச்சையாகத் திரிகின்ற
பாம்புகளை நாமாகத்
தேடிச்சென்று சீண்டினாலன்றி
ஒருபோதும் நம்மைத் தேடிவந்து
பாம்புகள் தீண்டுவதில்லை அவை
*
வார்த்தைகளாய் விசத்தைக் கக்கும்
மனிதர்களிலும் பார்க்க
பாம்புகளின் விசமொன்றும்
கொடியதல்ல.
*
வேளாண்மை நிலங்களில்
நாசம் விளைவிக்கும்
எலி, பூச்சிகள் போன்றவற்றைப்
பிடித்துண்டு வாழ்கின்ற
பாம்புகள் தன்னையறியாமலேயே
விவசாயிகளுக்குக் கைகொடுக்கும்
தோழனாகின்றன
*
நீங்கள் தவளை வளர்க்கின்றக்
காரணத்தால் பாம்புகள் வருமே
என்று கவலைகளையும்
வளர்க்கின்றீர்கள்.
அது பாம்புகளின் குற்றமல்ல.
*
உங்கள் சுயநல சிறைகளில்
கைதியாகிக் கிடக்கின்ற
தவளைகளை விடுவிக்க
கடவுளால் நியமிக்கப்பட்ட
சட்டத்தரணிகள் அவை.
**
உங்களில் சட்டத்தரணிகள்
பேசுவதாகச் சொல்லிச் சொல்லி
பேசாமலேயே உங்களைக் கொல்ல,
உஷ்.. அமைதியாக இருங்கள்
என்றபடி பேசாமலே கொன்று
தவளைகளின் உயிருக்கு
விடுதலை கொடுக்கின்றன என்பதால்
பாம்புகளும் சட்டத்தரணிகளே..!
**
உயிரைக் காப்பாற்ற
மயக்கமருந்து கொடுத்து
சத்திர சிகிச்சை நடத்திச்
சிகிச்சைப் பலனின்றி
மரணமடைந்ததாக கைகழுவிவிடும்
வைத்தியர்களைப் போன்று
மயக்க மருந்து தெளித்து
வயிற்றுப் பாட்டுக்காக
உயிரைக் கொல்வதனால்
ஒருவகையில் பாம்புகளும்
வைத்தியர்களே!..
**
பாம்புகளை எப்போதும்
எதிரியாகவே பார்த்துப்
பழகிப்போன உங்களால்தான்
உங்களையும் பாம்புகள்
எதிரியாகவே கருதுகின்றன..
**
பாம்புகளை வாழ விடுங்கள்..
வாக்குப் பாலை வார்க்க வார்க்க
குடித்துக் கொழுத்து நாற்காலிப்
புற்றுகளில் மறைந்துகொள்ளும்
தேசத்தின் மலைப்பாம்புகளைபோல்
அவை தேசத்தையே விழுங்கி ஏப்பமிடும்
நம்பிக்கைத் துரோகிகள் அல்ல.
**
நேரான பாதையில் சென்றாலும்
வளைந்து வளைந்து செல்லுகின்ற
சில பாம்புகளைப்போல்
நேரான பாதை என்றாலும்
வளைந்தே செல்கின்றவர்கள்
உங்களிலும் நிறையவே இருக்கிறாகள்.
அந்த பாம்புகளைக் கொல்வதென்று
முடிவெடுக்கும் நீங்கள் முதலில்
உங்களில் அந்த பாம்புக்
குணமுடையோரைக் கொன்றுவிட்டுப்
பாம்பிடம் செல்லுங்கள்..
**
உங்கள் தோசம் தீர்வதற்காக
முட்டையும் பாலும் கொடுத்து
புற்றுகளைப் பூஜிக்கும் நீங்கள்
பாம்புகளின் சந்தோசத்திற்காகவும்
சற்று பால் வார்த்துவிடுங்கள்..
**
உங்களுக்காக இல்லாவிட்டாலும்
பசியோடு போராடும்
கழுகுகளுக்காகவேனும் அவை
வாழ்ந்துவிட்டுப் போகட்டும்.
பாம்புகளைக் கொல்லாதீர்.
**
**மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (16-Oct-18, 2:48 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 113

மேலே