பாதையற்ற பயணம்
பாதையற்ற பயணம்
வகுக்காத எல்லையற்ற பயணத்தில்
கானல் நீர்குடித்து களைப்பு தீர்த்து
பணமுடிகளை பலமென கரம் ஏற்றி
பாதையற்ற பயணம் சென்று
வேதங்களை விரல்தொடாது
வாதங்களை முன்வைத்து
அள்ளிக்கொடுக்க வக்கிருந்தும்
கிள்ளிக்கொடுக்கா மனதோடு
காதல் கசிந்துருகும் கண்களுக்குள்
காமத்தீ வளர்த்தடுத்து
சொல்லிற்குள் விஷம் வைத்து
இல்லோரை இழிபேசி
தாற்பரியங்களின் உயிர்முடிச்சில்
அன்பெனும் நீர்த்திவலை
இன்முகம் காட்ட காத்திருந்தும்
கோபத்தின் கொடுநெருப்பில்
புடம் போட்ட வார்த்தைகளால்
தடம்மாறி சென்றேனே
பண்பற்ற பாதையிலே பயணித்தேன் பரம்பொருளே
ஊர் நிலமெல்லாம் எனதானாலும்
உள் நினைவெல்லாம் பொருளானாலும்
நானென்றும் உனதாமே எனும்
நற்சிந்தை மறந்தேனே
அழிவென்னும் பாதையில்
அடிகொண்ட என்வாழ்வை
ஆட்கொள்வாயா அருட்பெரும்ஜோதியே