அந்தக் கிழவி !
அரைத் தூக்கத்தில்
சோம்பலாய்
படுத்திருந்த என்னை
அடித்து எழுப்புவது
போல ஒலித்த்து
அந்தக்குரல்
“அம்மா கீரை “
துள்ளி எழுந்து
என்னைத் தொடர்ந்து
மள மளவென
பல வேலைகளைச்
செய்யவைக்கும்
அந்த அதிகாலைக்குரல்
தெளிவாகவே கேட்ட்து
“ அம்மா கீரை “
வீட்டின் முன்னே
பார்த்தேன் !
ஊன்றிய தடி
ஒரு புறமும்
கீரைக் கூடையின்மேல்
ஒரு கையுமாய்
எழுபதைத் தாண்டிய
அந்தக் கிழவி
“என்ன தம்பி கீரை
வேண்டுமா ?” என்றார்
ஆமாம் என்ற நான்
அய்ந்து ரூபாய்க்கு
கீரை கொடுங்கள் என்றேன்
அலாரம் தேவையில்லை
ஒழுங்கு படுத்தப்பட்ட
வாழ்க்கையின் குரலாய்
அதிகாலை ஆறு என்பதனை
தினம் ஒலிக்கும்
அந்தக் கிழவி
மனம் வலிது
எனில் உடல்வழி
ஒரு பொருட்டல்ல
என்பதனை நாளும்
உணர்த்தும் நடமாடும்
பள்ளிக் கூடமாய்
நடமாடும் அக்கிழவி !
உழைப்பது பின்பு
உண்பது என்பதே
உயிர்
வாழ்தலுக்கான
அடையாளம் என்பதனை
நாளும் உரைக்கும் அந்தக் கிழவி !
ராபின் சர்மாவின்
“பேம்லி விஸ்டம் “
புத்தகம் அருகில் கிடந்த்து !
ஆங்கிலத்தில் ஆயிரம்
வார்த்தைகளில் ராபின்சர்மா
சொல்வதைக் கிழவி
அலட்சியமாய்
நடைமுறைப் படுத்துகிறார்
“ ஒழுங்குபடுத்தலும்
உழைப்பதுமே வாழ்க்கை”