மன்னிப்பாயா
மனதில் உனை நினைக்காமல்
குணத்தில் உனை தேடாமல்
பணத்தால் எதுவும் முடியுமென்று
கற்சிலையில் மட்டும் உனை கண்டு
மாலை சூடி
அபிஷேகம்
ஆராதனை செய்து
உன் அருளை பெற்றிட நினைக்கும்
போலிப் பக்தர்களை
நீ மன்னிப்பாயா கடவுளே??
கொள்கை
கருத்துக்களை
எளிமையை
நேர்மையை
இதில் உனை பின்பற்றாமல்
உன் பெயரை
உன் புகைப்படத்தை
உன் புகழை மட்டும்
பேசிக்கொண்டு
உனை மறந்து
உனை தொடரும் தொண்டர்களை
மன்னிப்பாயா தலைவனே ??
கோடான கோடி
உயிர் வாழ இடம் தந்து
எல்லா ஜீவ ராசிகளும்
நலமுடன் வளம் பெற
நீ அள்ளித்தந்த உன்னை
கூறு போட்டு
கூவி கூவி
ஏலம் விடும்
இம்முட்டால் மானிடரை
மன்னிப்பாயா பூமித்தாயே??
நிழல் மட்டும் தராமல்
தூய காற்று தந்து
மண் வளம் தந்து
மழை தந்து
சின்னஞ்சிறு கூடு கட்டி
சிற்றுயிர்கள் வாழ இடம் தந்த உன்னை
வெட்டியெறியும் கைகளை
மன்னிப்பாயா மரமே ??
சமத்துவம் பேசும் சமுத்திரமே
எல்லா உயிர்களுக்கும் நீராதாரமே
உன்னையும்
உன்னுடன் உடன்பட்டு பிரிந்த
உன் பிள்ளைகளாகிய
ஆறு குளம் ஏரியையும்
காழ்ப்புணர்ச்சி காரணமாய்
எல்லை பிரித்து சண்டையிடும்
இம்மடையர்களை
மன்னிப்பாயா கடலே ??
இயற்கை எய்தும் வரை
இயற்கையை உணரா
இம்மனிதப் பிண்டங்களை
மன்னித்தருள்வாயா இயற்கையே ??