நண்பா உனக்கொரு வெண்பா
உன் வாழ்வு சிறக்க சிறகடித்து நான் பறக்க,
நீ என்னை மறக்க வலியால் நான் துடிக்க
நான் விரும்ப நீ திரும்ப, நீ ஒட்ட நான் வெட்ட,
முதலில் பேசுவது யாரென முடிவில்லை முடிவிலும்
என் இடத்திற்கு எவனெவனோ போட்டியிடுகிறான் உன்னிடம்,
வேட்புமனு தாக்கல் செய்யவும் ஆளில்லை இவ்விடம்
நான் வகித்த நட்புத்துறையோ நரிகளிடம் சென்றது,
நயவஞ்சக செயலெல்லாம் எனையல்லவா கொன்றது
காலம் கடக்க கரும்பு கசக்க தேன் புளிக்க
மிளகாய் இனிக்க உன் நினைவுகள் மட்டும் வலிக்கிறது,
தனிமைக் கடலில் துடுப்பு போட்டு சென்றவன்
இனிமைக் குரல் கேட்க ஓடோடி வந்தேன்
நண்பா என்றழைத்து என் நாவிற்கு உயிர் கொடுப்பேன்
காற்று புகுந்தும் பிரித்து விடாமல் கட்டிக் கொள்வேன்
ஆசை வார்த்தைகள் கூறி மனதுக்கு ஆறுதல் கொடுத்தேன்,
உன் கோட்டை மதிலேறி கோமாளிகள் விலக்கிப் பார்த்தேன்.
அங்கே,
என்னைத் தீண்டிய பாம்பொன்று பசியாறுகிறது,
என்னை உதைத்த எருமை ஏளனமாய்ச் சிரிக்கிறது,
என்னைக் கடித்த நாயொன்று நல்லி கடிக்கிறது,
விடம் கொடுத்த நரிக்கூட்டம் உன்னிடம் நக்கிப் பிழைக்கிறது
உள்ளே வந்தேன் உன்னருகே வந்தேன்,
உன் முகம் பார்த்தேன் உள்ளம் நெகிழ்ந்தேன்
நலமா என்றாய் நலம் என்றேன்
நம்மிருவர் இடையில் பலர் இருக்க
நஞ்சில்லா பாம்பாம் பல்லில்லா நாயாம்,
உதவி கேட்ட உண்மை நண்பர்களாம்,
உபயம் நிறுத்து உண்மை புரியும்,
உடனிருப்பவன் யாரென உனக்குத் தெரியும்.