குமரியின் சமூகப் பண்பாட்டை பதிவு செய்யும் சு செல்வகுமாரனின் கவிதைகள்

தன் இனத்தையும் மொழியையும் பாடாத கவிதை வேரில்லாத மரம், கூடில்லாத பறவை என்று பாடிய இரசூல் கம்சதேவ் அவர்களின் கூற்றுப்படி தான் வாழ்ந்த மண்ணையும், தன்னைச் சார்ந்த சமூகத்தையும் தம் கவிதையில் பதிவு செய்து, அவர் வாழ்ந்த நிலத்திற்கே நம்மை அழைத்துச் செல்கிறார் கவிஞர் சு.செல்வகுமாரன். தான் வாழ்ந்த, வாழும் சமூகத்தையும் அதன் செயல்பாட்டினையும் அங்கு நிகழும், ஒவ்வொரு நிகழ்வினையும் தான் பேசித்தீர்த்த வட்டார வழக்குமொழி வழியே கவிதையாக்கித் தந்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கூந்தல் வண்டி என்னும் இத்தொகுப்பில் மொத்தம் 79 கவிதைகள் உள்ளன. ஒவ்வொரு கவிதையும், ஒவ்வொரு சமூகச் செயல்பாட்டின் (அல்லது) நிகழ்வின் பின்புலமாக அமைந்துள்ளது. கவிதை வாசிக்க, வாசிக்க நாமும் அக்கவிதையோடு ஊடுபாவி அச்சமூகத்திலே வாழக்கூடிய மனிதராய் மாறிப்போகும் வகையில் இத்தொகுப்பு அமைந்துள்ளதே இத்தொகுப்பின் வெற்றி எனலாம். கவிஞர் தான் அனுபவித்து வந்த பால்யகால நினைவுகளையும், வளர்ந்து வரும் நாகரீக, அறிவியல் மாற்றத்தால், அச்சமூகம் அடைந்துள்ள மாற்றமென ஒவ்வொன்றையும் தம் கவிதையில் உயிரோட்டமாய்ப் பதிவுசெய்துள்ளார்.

ஒவ்வொருவரின் வாழ்விலும், இனிமையான மறக்க முடியாத தருணம் எதுவென்றால் அனைவரின் பதில் ஒன்று போலவே இருக்கும். அது குழந்தைப் பருவம் முடித்து பள்ளிப்பருவம் தொடங்கிய காலமே. தன்னுடைய பால்ய காலத்தில் நடந்தவொன்றை எவராலும் இன்றளவும் மறக்கமுடியாது, அவை அப்படியே ஒவ்வொருவரின் வாழ்விலும் ஆழப் பதிந்துவிடுகிறது. குழந்தையாய் இருந்தபோது தம்மை அப்பாவாகப் பாவித்து தன் உடன் விளையாடியவர்களை அம்மாவாக, குழந்தையாக எனப் பாவித்து விளையாடிய விளையாட்டெனத் தொடங்கி, சொட்டாங்கல் விளையாடியது வரை யாராலும் மறக்கமுடியாது. அப்படிப்பட்ட தருணங்கள் இன்றைய பிள்ளைகளுக்கு இல்லாமல் போய்விட்டது. கவிஞரோ தன் பால்ய நினைவுகளைப் “பூவரசம் பூ” என்னும் கவிதையில்,

“பூவரச இலையில் ஊத்து ஊதி
பனங்கூந்தலில் வண்டி செய்து
தெருவெங்கும் சுற்றிய நாட்கள்
பூவரசம் பூவாய் மாறிப் போனது
மஞ்சளிலிருந்து சிகப்பாக” (கூந்தல் வண்டி, ப -24)

என அழகாகப் பதிவு செய்து நம்மையும் நம் பால்ய காலத்திற்கு இழுத்துச் சென்று பனங்கூந்தல் வண்டியை நம்மையும் மறுபடி ஓட்டச்செய்கிறார். கவிதைத் தொகுப்பின் தலைப்பும் இதுதான் என்பது தொகுப்பின் சாராம்சத்தை நமக்கு அடையாளப் படுத்துவதாய் உள்ளது.

உலகமெங்கும் பரவியிருக்கும் தமிழர்களால், தமிழர்களின் பண்பாடு சிதைவுறாமல் இன்றளவும் காக்கப்படுகின்றதென்றாலும் தமிழர்களின் அளவிலடங்காப் பண்பாடுகள் கால வளர்ச்சியில் கணினிமயமாக்கப்பட்ட இச்சூழலிலும் ஒருபுறம் அவை அழிந்து வருகின்றன என்பது வெள்ளிடை மலையே ஆகும்.

“பெட்டி” என்ற தலைப்பில் இடம் பெற்றுள்ள கவிதையில்,

“நாருப்பெட்டி
கொட்டாப்பெட்டி
தட்டுப்பெட்டி
ஈக்காம்பெட்டி
பொட்டப்பொட்டி
பிளாப்பெட்டி
கிலுக்குப்பெட்டி
மடக்குப்பெட்டி” (கூந்தல் வண்டி, ப -28)

என்று பல பெட்டிகளைப் பற்றிப் பேசுகிறார். இத்தனை வகைப் பெட்டிகள் எல்லாம் இன்று காணாமல் போய் விட்டதாகவும், தங்கள் வட்டாரப் பாரம்பரியத்தின் பெரும்பகுதி மறைந்து விட்டதாகவும் வருத்தப்படுவதை இக்கவிதை வழி அறிய முடிகிறது. கவிதையை முடிக்கும் போது,

“வீட்டு முற்றத்தில் நின்றிருந்த
பனைமரத்தைக் காணவில்லை” (கூந்தல் வண்டி, ப -48)

என்று தமிழர் வாழ்வியலோடு ஒன்றிப் போயிருந்த பனைமரம் இன்று அழிந்துவிட்ட நிலையை அவலத்தோடு பதிவுசெய்வதை அறியமுடிகிறது.

ஏற்றத்தாழ்வில்லாத சமுதாயம் அமைய வேண்டி எண்ணற்ற ஞானிகள் தோன்றிய இம்மண்ணில் இன்றளவும் அது மாற்றம் காணாதவொன்றாகவே உள்ளது. மனிதர்களிடையே ஏற்றத்தாழ்வு நிலவுகின்ற இச்சூழலில் கடவுளர்களிடம் கூட உயர்வு, தாழ்வு, பாகுபாடு பார்க்கப்படுவதைச் சுட்டி சமுதாயத்தில் நிலவும் உயர்வு தாழ்வை உவமையுடன் அடையாளப்படுத்துவது இங்கு பொருத்தமாக இருப்பதை பரிவாரத் தெய்வங்கள் கவிதைவழிக் காண முடிகிறது.

“கும்பாபிசேகம்
அலங்கார பூசை
லட்சார்ச்சனை
என மூலவரையே
சுற்றி சுற்றி வருகிறீர்கள்
பரிவார தெய்வங்களாகிய
எங்களுக்கு என்ன கிடைத்தது
நாங்கள் மழையில் நனைகிறோம்
வெயிலில் கருகுகிறோம்
விளக்கைக் கூட
காற்று அணைத்துவிட
இருளில் கிடக்குறோம்” (கூந்தல் வண்டி, ப-31)

என்பதாய் இன்று ஏழைகள் படும் துன்பத்தையும் இக்கவிதை பேசுகிறது.

தரணியெங்கும், தானியம் வழங்கிய என் தஞ்சைத் தமிழ்மண், இன்று மழை பொய்த்து, காவிரியும் தன் கரம் நீட்டமறுத்து, ஒரு கவளச் சோற்றுக்கு நம் விவசாயி கண்ணீர் வடிப்பதை நாம் அன்றாடம் பார்த்து வருகிறோம். செய்தியாய் மட்டும் பார்த்துவிட்டு அடுத்த செயலை பார்க்கச் சென்று வருகிறோம். ஏழை விவசாயியின் வாழ்விற்கு உதவ அரசாங்கமோ, அரசியல்வாதியோ, பொதுநல அமைப்போ, முன்வராத நிலைமையே இன்று நிலவுகிறது . இதனை கவிஞர்,

“மாடு கழுவிய
குளத்துநீரை வாரிக்குடித்து
குடலைக் கழுவுகிறான் விவசாயி
நெல் விளைச்சலுக்குப் பதிலாக
இந்தப் பூவில்
சாவு விளைச்சல்களே அமோகம்” (கூந்தல் வண்டி, ப-32)

என்று விவசாயின் நிலையைக் குறித்து பேசுவதும் சமுதாயச் சிக்கலை எடுத்துரைப்பதாக இருக்கிறது.

முன்பொரு கவிதையில் பனைமரம் காணாமல் போனது பற்றி வருத்தத்துடன் பதிவு செய்த கவிஞர் இப்பொழுதெல்லாம் நெடுஞ்சாலைப் பணி, கட்டிடப்பணி என பல்வேறு காரணங்களால் புளியமரமும் காணாமல் போவதையும், தன்னுடைய இளமைக் காலத்தில் புளியங்காய் சாப்பிட்டதையும் ருசிபடக் கூறுவது போலக் கூறுகிறார் ஓரு கவிதையில்,

“தாழ்வாரங்களில் காய்த்துக்கிடந்த
நொண்டங்காய்களை
அக்காவுடன் பறித்து
உப்புடன் மசிய அரைத்து
அம்மாவுக்குத் தெரியாமல்
தின்ன நாட்கள்
புளியமரம் தறிபட்டது” (கூந்தல் வண்டி, ப-33)

இக் கவிதையில், புளியங்காயைப் பறித்து அம்மியிலோ, குழவியிலோ வைத்து அரைத்து உண்டது பற்றிப் பேசி அவையெல்லாம் இன்று இல்லாமல் போய்விட்ட நினைவாக கூறுகிறார்.

உலகில் எத்தனையோ, தொழில் நுட்பங்களும், நாகரீக வளர்ச்சிகள் அடைந்த போதிலும் குழந்தைத் தொழிலாளர்கள் இருக்கும் அவலநிலையை இன்றும் நாம் பொது இடங்களில் காணமுடிகின்றது. அப்படி வெள்ளரிப் பிஞ்சு விற்கும் சிறுவனைக் கவிஞர் கண்ணுற்றார் போலும். தாம் கண்ட அக்காட்சியை,

“மதிய உணவு இன்றி
புதிய பேருந்துநிலையப் படிக்கட்டில்
காலை மடக்கித் தூங்குகின்றான்
வெள்ளரிப்பிஞ்சுச் சிறுவன்” என்று பதிவு செய்வதையும் பார்க்க முடிகிறது.

”கோட்டுப் பூச்சிகள்” என்ற ஒரு கவிதையில் கிராமங்களில் பேசப்படும் பேய்கள் பற்றிய கவிதைகளை முன்நிறுத்துவது இயல்பாய் இருந்தாலும் நகரங்களில் தொழில்நுட்பத் திருடர்கள் என்ற பேய்க்கும் பயப்பட வேண்டியிருக்கிறது என்று நகர வாழ்க்கையின் நிலையைக் காட்டுகிறார்.

“தினமும் தொலைக்காட்சியில் பார்த்த
தொழில்நுட்பத் திருடர்களும்
கொலையாளிகளும்
கூடவே புரண்டு கொள்கிறார்கள்” (கூந்தல் வண்டி, ப- 95)

’கால்காசானாலும் கவர்மென்ட் காசு; அரைக்காசானாலும் அரசாங்கத்துக் காசு’ என்று கொங்கு பேச்சு வழக்கொன்று உண்டு. அரசு வேலையென்பது இன்றளவில் குதிரைக் கொம்பாகிப் போன நிலை இருப்பினும் பல்வேறு இன்னல்களுக்குப் பிறகு ஒரு அரசுவேலை கிடைத்தாலும், நிர்வாகம் சார்ந்தோ, பணிசார்ந்தோ, குடும்பம் சார்ந்தோ ஏதாவதொரு வகையில் அவர்களுக்கும் கஷ்டம், நஷ்டமென சராசரி மனிதனைப் போலவே அமைவதுண்டு. ஆனாலும் அதை மற்றவர்கள் புரிந்து கொள்வதில்லையென அரசுவேலையில் இருக்கும் ஒருவரின் வருத்தத்தைப் பதிவு செய்வதாய் ஒரு கவிதை அமைந்திருப்பது கவிஞரின் எதார்த்தத்தைக் காட்டுகிறது.

“அவனுக்கென்ன அவன் அரசாங்க
வேலைக்காரன்” (கூந்தல் வண்டி, ப-101)

எம்மதமும் சம்மதம், எல்லாக் கடவுளும் ஒன்றைப் போலவே அன்பும் அருளும் பாலிக்கின்றனர். கடவுள் எந்த ஊரில் இருந்தாலும், எந்தக் கடவுள் எங்கிருந்தாலும், எல்லாக் கடவுளும், ஒரே மாதிரித்தான் எந்த மாற்றமுமில்லை. தன்னை நாடி வந்தவர்க்கு நலமே தருகின்றது. மனிதர்களிடம்தான் வேற்றுமை, கடவுளிடம் எந்தவித வேற்றுமையுமில்லை என்று கூறுவதாய் ஒரு கவிதை “குலசாமிகளின் பேரன்பு” என்ற கவிதையில்,

“அந்நகரத்துச் சாமிகளும் ஒரு போதும்
அந்நியராய்க் கருதியதில்லை நண்பர்களைப் போல
விண்ணப்பித்த ஒவ்வொன்றையும்
காலம் பிடித்தாலும் கருணையோடு பரிசீலித்து
கனியமுதாய்த் திகழ்ந்தார்கள்” (கூந்தல் வண்டி, ப -104)

நகர வாழ்க்கையை, நரக வாழ்க்கையே எனப் பதிவுசெய்யும் கவிஞர் அதன் தாக்கத்தைப் பல இடங்களில் பதிவுசெய்வதை அறியமுடிகிறது. அப்படியான கவிதையில் ஒன்று தான் 5 எப் தெற்குக் குறுக்குத் தெரு

“திணிக்கப்பட்ட நான்காவது மாடியில்
துர்நாற்றமும் வாசமுமாய்
தொடர்கிறது வாழ்வு” (கூந்தல் வண்டி, ப-87)

சுவாசிக்கும் காற்றுக்கூட தூய்மையாய் இல்லை. ஆனாலும் மக்கள் நெருக்கடியிலும் வாழ்வியல் வேண்டி துர்நாற்றத்தோடு வாழ வேண்டியிருக்கிறது என்கிறார்.

இயற்கையைப் பாடாத, இயற்கையை நினைக்காத கவிஞரே இருப்பதில்லை என்னும்படி கவிஞர்களுக்கேயுள்ள தனித்துவமாய் இன்றைய நிலைப்பாட்டில், இயற்கையின் மாற்றம் குறித்தும், மக்களால் இயற்கைக்கு நிகழும் கொடுமையையும் கண்ணீர்த்துளியாய் வடித்துக் காட்டுகிறார் தம் கவிதைகளில் அப்படியான ஒரு கவிதை,

“பூமித்தாய் அழுகிறாள்
பாழ்படுத்தி விட்டீர்களே
நான் மனம் மகிழ
உடுத்திக் கொண்ட
பச்சை ஆடையை” (கூந்தல் வண்டி, ப- 88)

மேலும் ஆற்றில் நீர் என்பது இல்லாத ஒன்றாகிவிட்டது, மழை நீரையும் சேமிப்பதில்லை, என்பதாக ”ஆறுகள்” அழிவுறுவது பற்றியும் தம் கவிதைகளில் சுட்டிக்காட்டுகிறார்.

“இப்போதும்
ஓடிக்கொண்டிருக்கிறது
விவசாயிகளை விட்டு விலகி
அதிவிரைவாய்” (கூந்தல் வண்டி, ப-65)

இப்படிப் பல கவிதைகள் சு. செல்வகுமாரனது படைப்புகள் சமுதாய நிகழ்வுகளோடு கட்டிப் பிணைந்தவொன்று. இது காலத்தால் அழியாத செல்வமாகும். வட்டாரச் சொற்கள் நிறைந்த இத்தொகுப்பில் சில கவிதைகள் மட்டும் வட்டார மொழி அறிந்தவர்களுக்கு மட்டுமே புரியுமென்பது தெளிவாகிறது.

பனைமரம், பெட்டிகள் பற்றிய கவிதைகளில் ஒரு பேராய்வே நடத்திடுமளவுக்கு தகவல்கள் உள்ளமை சிறப்புக்குரியதாகிறது. ஆக குமரியின் வட்டார, சமூகப் பண்பாட்டை பிரதிபலிக்கும் சு. செல்வகுமாரனின் கூந்தல்வண்டி இனவரைவியல் மற்றும் பின்காலனிய நோக்கிலும் வாசிப்புக்கு உட்படுத்துமளவிற்கான முக்கியமான ஒரு தொகுப்பாகிறது.

எழுதியவர் : (2-Nov-18, 6:33 pm)
பார்வை : 65

மேலே