தமிழ்க்காதலி-----------------------------------------கவியரசர் முடியரசர் கவிபரப்பி முத்தமிழுலகுக்கு முடிசூட்டுவோம்
“கவியரசர் முடியரசன் கவிதை நூல்கள் ஒவ்வொன்றும் தமிழுக்கு ஆக்கம் செய்யும் செம்மொழிச் செல்வமாகும்” என்பார் பேராசிரியர் அன்பழகன். அச்செல்வங்களை நாட்டுடைமை ஆக்கினார் தலைவர் கலைஞர். அவற்றில் மூன்றில் ஒரு பங்கே எம் தந்தையார் காலத்தில் நூல்வடிவம் பெற்றன. எஞ்சிய பெரும் பகுதி பெட்டகத்துள் கட்டுண்டு கிடந்தன. அவற்றின் சிறப்புகள் அப்போது எமக்குத் தெரியவில்லை. எந்தையும் ஏதும் கூறவில்லை. அவரின் இறுதிக் காலத்தில் தான் அதை உணர்ந்த நான், அச்செல்வங்களைத் தொகுத்து வெளியிட முயற்சி மேற்கொண்டேன். எனினும் அவரின் மறைவுக்கப் பின்னரே அவற்றிற்கு நூல்வடிவம் தர எம்மால் இயன்றது. அச்செல்வங்களைத் தமிழுலகிற்கு வழங்கியதன் மூலம், மகன் தந்தைக்காற்றும் கடமையை, கவின் கலைச்செல்வியாம் தமிழ் அன்னைக்கு ஆற்றும் தொண்டினை நிறைவேற்றிய மனநிறைவும் கொண்டேன். தொடர்ந்து அப்பணியை எம் வாழ்வின் இலக்காகக் கொண்டு, ஒல்லும் வகை யெல்லாம் செயலாற்றி வருகின்றேன்.
இவ்வகையில், தந்தையின் அனைத்துப் படைப்புகளையும் ஒரே நேரத்தில் முழுத் தொகுப்பாகப் பதிப்பிக்க எண்ணியிருந்தேன். இந்நிலையில், 1999-இல் முனைவர் இளவரசு வழி, மொழிக்காவலர் கோ.இளவழகன் நட்பினைப் பெற்றேன். தமிழ்மண் பதிப்பகத்தின் முதல் வெளியீடு முடியரசன் நூல்களே. முழுத் தொகைப்பையும் தமிழ்மண் வெளியிடும் என அப்போது அவர் கூறினார். இப்போது அது கனிந்தது. முடியரசனார் படைப்புகளை முழுமையாகத் தொகுத்துத் தருமாறு அவர் கூறியதற்கிணங்க தொகுத்துத் தந்துள்ளேன்.
முந்தையரின் அரிய தமிழ்ச்சீர்களைத் தமிழர்க் களித்து வரும் அன்னார்க்கு என் பாராட்டு; அவ்வழி எந்தையாரின் செம்மொழிச் செல்வங்களையும் வழங்கும் அவர்க்கு என் நன்றி; தமிழ் மண்ணுக்கு என் வணக்கம்.
- பாரி முடியரசன்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
தென்னகத்துத் திருமகளே! கனியே! நெஞ்சில்
தித்திக்கும் கனிச்சாறே! சுளையே! தேனே!
என்னகத்து நின்றுநடம் ஆடும் பாவாய்!
எழிலரசி! எஞ்ஞான்றும் இளமைத் தோற்றம்
நின்முகத்துக் காண்கின்றேன் களிப்பில் மூழ்கி
நிகரில்லை நினக்கென்றே நிமிர்ந்து நோக்கி
உன்னலத்தைக் காதலித்தேன் உயிர்மூச் செல்லாம்
உனக்கென்றே வாழ்கின்றேன் தமிழ ணங்கே
உனையீன்ற நாட்டுக்கு நன்றி சொல்வேன்
உனைவளர்த்த பெரியோர்க்கும் சொல்வேன் நன்றி
சுனையீன்ற நாண்மலரே! நின்னெ ழிற்குச்
சூட்டிமகிழ் அணிகலன்தாம் கணக்கில் உண்டோ?
நனியிகந்த செல்வமகள் என்ற றிந்தும்
நானொருவன் ஏழையுனை நாடு கின்றேன்
எனையிகழேல் நீயின்றேல் நானும் இல்லை
என்னுயிரும் நினக்கென்றே இருக்கின் றேனே
அரசனிடம் பெற்றபெருஞ் சிலம்பை நின்றன்
அடிமலரில் அணிவித்துக் கண்க ளித்தார்;
முரசுகெழு முந்நாட்டுக் கலையின் சாயல்
முழுமையொடு விளங்குவதைக் காணு கின்றேன்;
பரல்விலையோ மதிப்பரிதாம், அவைதாம் வைரப்
பன்மணியோ நன்முத்தோ பவழந் தாமோ?
திருவடியில் அணிந்துநடை பயிலும் போழ்து
தித்திக்கும் எழில்கண்டேன் ஒயிலும் கண்டேன்
ஒருமகளே! நுண்ணியநின் இடையில் சுற்ற
ஒப்பரிய நன்மணிமே கலையைக் கூடற்
பெருவணிகன் சீத்தலையூர்ச் சாத்தன் றன்பால்
பெற்றுனக்குப் பெருமையுடன் அணிவித் தார்கள்;
திருவுயர்ந்த மார்பகத்தில் கலையால் வல்லான்
திருத்தக்கன் தருசிந்தா மணியை வைத்தார்;
அரசியென நீவிளங்க உன்வீட் டார்கள்
அணிவித்த பொற்கலன்கள் நூறு நூறாம்
இளையவளே! உயிரே!நின் காதல் வேண்டி
ஏங்குகிறேன் கைகொடுப்பாய்! கையிற் கோல
வளையெங்கே? நலங்காணத் துடித்தே நின்றேன்
வாயிதழைத் தாராயோ? என்மெய்க் காதல்
தளையவிழ உதவாயோ? குண்ட லந்தான்
தயங்குசெவி வெறுஞ்செவியாய் இருத்தல் ஏனோ?
ஒளிமிகுந்த நின்னெழிற்குக் களங்க மென்ன
உணர்கின்றேன் அவைஎங்கே? அவைதாம் எங்கே?
தென்னாட்டுத் திறன்முழுதும் பொருந்தக் கண்டு
திருடினரோ வடக்கத்தித் திருடர் தாமும்!
நின்வீட்டுப் புறக்கணிப்பால் இங்கு வந்தோர்
நிகழ்த்தியபொய்ச் சதியோஎன் அகத்து வாழ்வாய்!
என்பாட்டுக் குரியவளே! கவலை கொள்ளேல்
எழில்மிகுத்துக் காண்பதற்கு நான்மு யன்று
பொன்காட்டும் அப்பணிபோல் பலவும் செய்து
பூட்டுகிறேன் பூட்டுகிறேன் காதல் நல்லாய்! 6
முடியரசன் கவிதைகள்
நெஞ்சிற் பூத்தவை
தமிழ்மண் பதிப்பகம்
சென்னை - 600 017