பனமரத்து பேய்
" டேய்! அந்த பனமரத்துப் பக்கம் போகாதீங்கடா.
அதுல பேய் இருக்கு! ",என்று இராஜுவின் அம்மா எங்களை எச்சரிச்சுட்டு வீட்டுக்குள் போனாங்க.
அந்த மரத்தில் உண்மையிலே பேய் இருக்கா?
அப்படி பேய் இருந்தால் எப்படி இருக்கும்?
என்ற ஆவல் வர அதை பார்த்துவிட்டு வரலாம் என்று அருகே நெருங்கினேன்.
" அம்மா சொன்னா சரியாகத் தான் இருக்கும்டா. அந்த பக்கம் போக வேண்டாம்.
அம்மா சொல்லி இருக்காங்க. பேய் எல்லாம் மோசமானவையாக இருக்கும். ",என்று இராஜு அழாத குறையாக கெஞ்சிக் கொண்டிருந்தான்.
அவன் என் கிட்ட பேசிட்டு இருக்கும் போதே காற்று வேகமாக வீசியது.
பன ஓலைகளில் இருந்து சர சரனு சத்தம் வர தொடங்கியது.
" சர் ட் திட்டீர் ",என்ற சத்தம் கேட்டது.
என்னவென்று கூர்ந்து பார்ப்பதற்குள் இராஜு என் கையை பிடித்து இழுத்துக் கொண்டு, " டேய்! பேயோட வேலைதான்டா. வாடா ஓடிப் பொயிடலாம். ", என்றிட அவனுடன் அவனுடைய வீடு நோக்கி ஓட வேண்டியதாயிற்று.
அந்த ஒத்த பேய் பனமரம் இராஜுவின் வீட்டிற்குப் பின்னால் 300 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
எனக்கும் இராஜுவிற்கும் எட்டு வயதிருக்கும்.
இராஜு அமைதியான பையன். அம்மா பிள்ளை.
நான் குறும்புக்காரன்.
செய்யக்கூடாது சொன்னால் அதை ஏன் செய்யக்கூடாது என்று சிந்தித்து ஆராய்ந்து தேடுபவன்.
இராஜுவின் வீட்டை அடைந்தோம்.
இராஜுவிற்கு அதிகப்பயமாக இருந்ததால் அவனுடைய அம்மா மடியில் போய் அமர்ந்தார்.
" இரண்டு பேரும் ஏன் இப்படி ஒடியாறீங்க? என்ன குறும்பு பண்ணிட்டு வாறீங்க? ",என்று கேட்டதும் இராஜு நாங்க பனமரத்தை பார்க்கப் போனதையும் அங்க நடந்ததையும் ஒன்று விடாமல் சொல்லிட்டார்.
இராஜுவோட அம்மா கோபமா என்னை பார்த்தாங்க.
" நான் வீட்டுக்கு கிளம்புறேன் அம்மா ",என்று சொல்லிட்டு கிளம்புனேன்.
இராஜுவோட அம்மாவை என் அம்மாவா நினைக்கிறதால அம்மானுதான் சொல்வேன்.
அவங்க என்னையும் அவங்களோட பையன் மாதிரிதான் நடத்துவாங்க.
நான் கிளம்பிய போது, " சிவா! இங்க வா. இப்படி உட்காரு. ",என்று சொன்னாங்க.
நான் பக்கத்துல போய் அமர்ந்தேன்.
" சிவா நீ புத்திசாலியான பையன்னு தெரியும்.
அந்த பனமரத்து பக்கத்துல ஏன் போகக்கூடாதுனு சொல்லுறேன் என்றால் ஒரு தடவை அந்த மரத்துக்கு சொந்தக்காரர் நுங்கு வெட்ட பனமரத்தில் ஏறினார். பாதி மரத்தைத் தாண்டி ஏறும் போது பேய்க்காற்று வீசியது.
நுங்குக் காய் வந்து அவர் தலையில் வீழுந்துடுச்சு.
அதனால் அவர் கீழே விழுந்து செத்துப்போனார்.
அந்த காரணத்தால் அந்த மரத்தை வேட்ட முடிவு பண்ணி சில அந்த மரத்துப் பக்கம் போனாங்க.
அவங்க மரத்தை வெட்ட தயாராகும் போது பேய்க்காற்று வீசத் தொடங்கியது.
இரண்டு நுங்குக்காய் வந்து இருவர் தலையில் விழுந்ததால் அவங்க மண்டை உடைச்சிருச்சு.
அந்த மரத்தில் பேய் இருப்பது இப்படித்தான் தெரியவந்தது. அப்புறம் யாரும் அந்த மரத்துப்பக்கமே போகல. அதனால நீங்க இனி அந்த மரத்துப்பக்கம் போகக்கூடாது. ",என்று அந்த மரப்பேய்க்கதையைச் சொன்னாங்க.
இருந்தாலும் எனக்குள்ள ஆர்வம் இன்னும் அதிகமாயிடுச்சு.
அன்றிரவு சந்தேகத்தை தீர்க்க ஒரு திட்டம் போட்டேன்.
அதற்கு அம்மாவிற்கு தெரியாமல் இராஜுவை சம்மதிக்க வைத்தேன்.
அதன் படி இரவு 11:30 மணிக்கு யாருக்கு தெரியாமல் டார்ச் லைட்டோட கிளம்புனேன்.
இராஜு வீட்டருகில் போய் இராஜு என்றழைத்தேன்.
உயிர் நண்பன் உடனே ஓடி வந்தான்.
பனமரத்தில் இருந்து சிறிது தூரத்தில் நின்று பனைமர உச்சியில் லைட் அடிச்சு பார்த்துட்டு இருந்தோம்.
அந்த நேரம் கண் விழித்த இராஜுவின் அம்மா சன்னல் வழியாக பார்க்க, பனமரத்தில் நாங்க லைட்டு அடிச்சு வெளிச்சம் தெரிந்துள்ளது.
உடனே இராஜுவை தேடி இருக்காங்க.
அவனை காணவில்லை என்றது வீட்டை விட்டு வெளி வந்து எங்க பின்னால் சிறிது தூரத்தில் நின்று நாங்க என்ன பண்றோம்னு கவனித்திருக்காங்க.
சரச் சரவென்று ஓலைச் சத்தம் கேட்கத் தொடங்கியது.
" சர் ட் திட்டீர் ",என்று அதே ஒலி இடிமாதிரி கேட்க இராஜு பயந்து திரும்பி ஓடினான்.
ஓடியவன் அம்மா மேல் மோதியதும்,
அம்மா சத்தம் போடாமல் அவனை பிடித்து கொண்டார்கள்.
" டேய்! சிவா. வந்து காப்பாத்துடா. பேய் என்னை பிடிச்சிட்டுச்சுடா.
சீக்கிரம் வாடா. ",என்றான்.
நான் திரும்பி லைட் அடிச்சேன்.
இராஜு கையப் பிடித்துக் கொண்டு அம்மா நின்றாங்க.
" நான் காலையில அவ்வளவு சொல்லியும் இந்த நேரத்தில் இங்க வந்து நிக்குறீங்களடா.
டேய்! சிவா உனக்கு பயமா இல்லையா? ", என்றாங்க.
" பயமா? அப்படினா என்ன மா? ",என்றேன்.
" இப்போ சத்தம் கேட்டு இராஜு ஓடி வந்தானே! அதான் பயம். ",என்றாங்க அம்மா.
" எதுக்கு மா பயப்படனும். அந்த மரத்தில தான் பேயெல்லாம் இல்லையே மா.
காற்று அடிக்கிறதாலதான் நுங்குக் காய் அதன் அடியில் விழுது.
நீங்க சொன்னமாதிரி பேய் இருந்திருந்தா நாங்க லைட் அடிச்சதற்கு நுங்கு காய் எங்க மேல வந்து விழுந்திருக்கனுமே! ",என்றேன்.
சொல்லிக் கொண்டிருக்கும் போதே பனைமரத்து அடியில் " சர் ட் திட்டீர். ",என்ற சத்தம் கேட்க அம்மா சிந்திக்கத் தொடங்கினாங்க.
" நீ சொல்லுறது சரிதான் டா பெரிய மனுஷா. ",என்று கூறிவிட்டு என் கையை பிடித்து வீட்டுக்குக் கூட்டிட்டு போனாங்க.
நான் அம்மா கிட்ட சொல்லிட்டு என் வீட்டுக்கு வந்த தாத்தாவோடு படுத்துக் கொண்டேன்.
மறுநாள் அந்த பனைமரத்தில் இருந்து விழுந்து இறந்தவருடைய மகன் கிட்ட நாங்க கண்டுபிடிச்சதை சொன்னோம்.
அதோட அந்த பன மரத்தை வெட்டுவதற்கு ஐடியாவும் கொடுத்தோம்.
அதன்படி மரம் வேட்டுபவர்கள் தலைக்கவசம் அணிந்துக் கொண்டு வந்து அந்த மரத்தை பாதுகாப்பாக வெட்டி வீழ்த்தி அப்புறப்படுத்தினாங்க.
பனைமரம் தென்னை மரம் அடியில் நிற்கக்கூடாது என்று சொல்வது காற்று அடிக்கும் போது தேங்காய், நுங்கு போன்றவை உதிரக்கூடியவை என்பதால் தான்.
அந்த அந்த பருவத்தில் அவற்றை பாதுகாப்பாக பறிப்பது அந்த மரத்துக்கு சொந்தக்காரரின் சாமர்த்தியம் தான்.
இந்தகாரணமே பனைமரப் பேய்யின் கதைக்குப் பின் ஒளிந்துள்ளது.