குறிப்பம் புளிய மரம்

(ஒரு நிலஅளவையாளரின் அனுபவம்)

நான் இலங்கை நில அளவைத் திணைக்களத்தில்(Surveyor General Department) வேலை செய்த ஒரு நில அளவையாளன். முப்பது வருட அனுபவம் எனக்கு .
இலங்கையில் பல காடுகளில் நில அளவை வேலை செய்ததால் சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளும் தாராளமாகப் பேசுவேன். வடக்கில் உள்ள வன்னிக் காட்டில் மூளை முடுக்குகள் எல்லாம் எனக்கு அத்துப்படிப் பாடம் நிலஅளவை செய்வதுக்கு எனக்கு உதவியாளர்களாக நால்வரும் , ஒரு சமயல்காரனும் அரசு நியமித்துள்ளது. நால்வருக்கு தனி கூடாரத்தில் அவர்களே சமைத்து சாப்பிடவேண்டும். எனக்கும் என் சமையல்காரனுக்கும் தனிக் கூடாரம். காடுகளை அளப்பது அவ்வளவு இலேசான காரியம் இல்லை.
அக்காட்டில் யானைகள் போன்ற மிருகங்கள், பாம்புகள் தாக்குதல்களை எதிர் நோக்க வேண்டி வரும். . பல தடவைகள் யானைகள் என் கூடாரத்துக்கு அருகே வந்து பிளிறி, என்னைப் பயமுறுத்திப் போகும். வன்னியில் A9 பாதை ஓரத்தில் உள்ள மரத்தில் தானாகவே தோன்றிய முருகண்டிப் பிள்ளையார் கோவில் ஐயருக்கு என் யானைப் பிரச்சனையை சொன்னபோது அவர் எனக்கு ஒரு சிறு பிள்ளையார் சிலையைத் தந்து நான் இருக்கும் கூடாரத்துக்குள் சிலையை வைத்து வணங்கும் படிச் சொன்னார் . அதன் படி செய்தேன். கூடாரத்துக்குள் ஒரு பிள்ளையார் சிலை வைத்து பூஜை செய்து வந்த காரணமோ என்னவோ யானைகள் என் கூடாரத்தைத் தாக்கவில்லை என்பது என் நம்பிக்கை.
வன்னிக் காட்டில் பாம்புகளுக்கு குறைவில்லை . அதனால் பல நாக தம்பிரான் கோவில்கள் வன்னியில் உண்டு பலர் பாம்பு கடித்து இறந்துள்ளார்கள் . எனது உதவியாளர் ஒருவரை ஒரு நாள் பாம்பு தீண்டியது . நாங்கள் இருந்த கிராமத்தில் உள்ள பாம்பு கடி வைத்தியரிடம் உடனே அவரை கூட்டிச் சென்று காட்டிய போது, அவர் பாம்பு தீண்டிய இடத்தில ஒரு கருப்பு நிறக் கல்லை சில நிமிடங்கள் வைத்து எதையோ வாயுக்குள் முணுமுணுத்து, அதன் பின் மூலிகை இலைகளின் சாறு அவருக்கு குடிக்கக் கொடுத்து குணப் படுத்தினார். சிலர் பாம்பு கடித்த இடத்தில் வாயால் கடித்து, இரத்தத்தை உறிஞ்சு எடுத்து பல தடவைகள் துப்புவார்கள் . அதன் பின் வைத்தியசாலையில் வைத்தியம் நடக்கும் .
காட்டில் வேலை செய்த போது சுவைத்து உண்ட. காட்டு சேவல் , மான், பன்றி இறைச்சிகளை இன்றும் என்னால் மறக்க முடியாது . நான் குளித்தது குளத்தில் . உணவு உண்டது தாமரை இலையில்
வன்னிப் பிரதேசத்தில் தொற்று நோய்கள் பரவலாகக் காணப்படுகின்றன. ஏனென்றால் மக்கள் காட்டில் வாழ்வதால் நோயாளிகள் மலேரியா, காலரா போன்ற நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். ஒரு தடவை நுளம்பு கடித்து மலேரியா நோயால் பாதிக்கப் பட்டு மிக கசப்பான மருந்து அருந்திய அனுபவம் எனக்கு உண்டு. அதனால் மலேரியா நோயில் இருந்து என்னைப் பாதுக்காக்கும் தெய்வம் கொசு வலை மட்டுமே. என்னை மலேரியா நோயில் இருந்து காப்பாற்ற கொசு வலைதொன்றை அரச செலவில் கட்டிலோடு எனக்கு வாங்கிக் கொடுத்திருந்தது
வன்னியில் பிரதான ஆஸ்பத்திரி கிளிநொச்சியில் அமைந்துள்ளபோதும் அங்கு சத்திர சிகிச்சைகளுக்கான வசதிகள் கிடையாது
****
வன்னியில் வேலை செய்த காலத்தில் பல ஊர்வசிகளை சந்தித்தேன் அவர்களில் பெரும்பாலோர் விவசாயிகள். ஓரு காலத்தில் இலங்கையின் நெற் களஞ்சியமாக வன்னி திகழ்ந்தது . அந்த வன்னிவாசிகளில் ஒருவன் கருப்பையா என்ற ஒரு விறகு வெட்டி. வேட்டையும் ஆடுவான் . அவனைக் “கறுப்பன்” என்று வன்னிவாசிகள் அழைத்தனர் . அவன் நிறத்திலும் கருப்பு, அதோடு காட்டில் உள்ள பழங்களையும். மயில் இறகுகளையும் தாமரை இலைகளையும் பறித்து வாரம் இரு முறை கூடும் கிராமச் சந்தையில் விற்பவன். அது தான் அவனின் தொழில். கிராமச் சந்தையில் அவனை ஒரு நாள் நான் சந்திக்க நேரிட்டது
“என்ன கருப்பன் எனக்கு ஒரு கட்டுத் தாமரை இலையும், கிழங்கும் , பாலப் பழமும் தரமுடியுமா “:? நானா கருப்பனைக் கேட்டேன்

“இதோ எடுத்துக் கொள்ளுங்கள ஐயா”; விலையைச் சொன்னான்.: நான் பேரம் பேசாமல் அவன் கேட்ட பணத்தைக் கொடுத்தேன், கரணம் அவனிடம் வன்னிக் காட்டைப் பற்றி எனக்கு பல விஷயங்கள் அறியவேண்டி இருந்தது

“கருப்பன். வன்னிக் காடு அடர்த்தியானது . நீ அக்காட்டில் ஒரு பாதை வழியே போனால் எப்படி சரியான் பாதயில் வீடு திரும்புவாய்”?
“போகும் பாது இலை கோப்புகளை கொய்சு அடையாளமாக நிலத்தில் போட்டு செல்வேன். திரும்போது அதை பார்த்து வீடு திரும்புவேன் :
“காட்டில் உன்னை பாம்பு கடித்த்துண்டா””
“அது ஒரு தனி அனுபவம் ஐயா . ஒரு சமயம் நாக பாம்பு ஏன்னைக் கடித்து நான் உயிர் தப்பியது நாக தம்பிரான் கிருபை. விறகு வெட்டி களைத்து ஒரு மரத்தடியில் தூங்கி விட்டேன். நான் நித்திரரையாக இருக்கும்போது ஒரு நாக பாம்பு என் காலில் தீண்டி விட்டது . என் அதிர்ஷ்டம் நான் படுத்த இடதிற்கு அருகே ஒரு கட்டேரறும்பு புற்று இருந்தது எனக்கு தெரியவில்லை. அந்த புற்றில் உள்ள எறும்புகள் என்னைக் கடித்து என்உடலில் உள்ள விஷம் எல்லாம் போய்விடது ,என் உயர் தப்பியது. பாவம் எறும்புகள் இறந்து கிடந்தன”
ட்
"நீ விறகு வெட்டுபபவன் ஆயிற்றே. உனக்கு வன்னிக்க காட்டில் தெரியாத் மர வகைகள் இல்லை.
“ பல விதமமான் மரங்கள் உண்டு காட்டில், முதிரை, பாலை. காட்டு வேம்பு. நாவல்.. வில்வ மரம், பூவரசு, அருமையாக சில கருங்காலி . ஆலமரம். இலுப்பை . புளியமரம். பனை ஆகியவற்றை சொல்லலாம்."
“அதுசரி உனக்குத் தெரிந்த உயரமான மரம் எது"? நான் கேட்டேன் .

“இது தெரியாதா ஐயா உங்களுக்கு? குளத்தருகே உள்ள “குறிப்பம் புளிய மரம் “.
பெரிய பரந்தனில் நூறாண்டுகள் நிறைந்த, பனைகளை விட உயர்ந்த புளியமரம் ஒன்று உண்டு. காட்டில் எங்கிருந்தாலும் ஒரு சிறிய மரத்தில் ஏறிப்பார்த்தால் அம்மரம் தெரியும். அதன் திசையை நோக்கி நடந்தால் எவரும் தவறாது வீடு போய் சேரலாம்.. நாள் வழிகாட்டும் மரம் குறிப்பம் புளியின் அருமை உணர்ந்தவர்களைப் பேய் பிடிப்பதில்லை என்ற நம்பிக்கை ஊர்வசிகளுக்கு உண்டு.
ஒரு புளியமரம் சராசரி 80 அடி உயரத்துக்கும் 40அடிகளுக்கு பரந்து வளரக் கூடியது. சுமார் ஆறு ஆண்டுகளில் காய்க்தத தொடங்கி விடும் 300ஆண்டுகுகு மேல் வாழக் கூடியவை. இந்த குறிப்பம் புளிய மரம் பாண்டர வன்னியன் காலத்து மரம்” என்று கருப்பன் சொன்னான் .
எனது கணிப்பின் படி கருப்பன் காட்டிய மரத்தின் உயரம் நூறு அடி மட்டில் இருக்கும். ஒரு பெரிய அரக்கனை போல் அது காட்சி கொடுத்தது

கறுப்பன் மேலும் சொன்னான் “பலருக்கு நிழல் கொடுக்கும் மரம் அது . அம்மரத்தைத் தழுவி செல்கிறது இரு கிரவல்பாதை அந்த மரத்தில் இலை தெரியாமல் காய்க்கும் புளியங் காயை ஊர்வாசிகள் சமையலுக்குப் பாவிப்பார்கள் , அந்த மரத்தின் கீழ் ஒரு வைரவர் உண்டு. பக்கத்தில் உள்ள வயலில் வேலை செய்யும் பெண்கள் அனைத் மரத்தில் சேலையில் ஏணைகட்டி தம் குழந்தைகளை தூங்க வைப்பர். அது காட்டில் நடந்து செலவோரை பேய் பிடிக்காமல் இருக்கும் காவல் தெய்வம். வைரவருக்கு வருடத்துக்கு ஒரு தடவை ஊர்வசிகள் பொங்கிப்படைப்பார்கள் ஒரு குளத்துக்கு அருகே இருப்பதால் சில காலங்களில் வெளி நாடுகளில் இருந்து புலம் பெயர்ந்து வரும் வெள்ளை நிற பறவைகள் அந்த மரம் முழவதையும் ஆக்கிரமித்துக் கொள்ளும்”.அதனால் அந்த பச்சைநிற மரம் வெள்ளை நிற மரமாகக் காட்சி தரும்.
“அது என்ன கையில் என்ன வைத்திருக்கிறாய்’?
“இது ஈச்சங்குருத்து. இது மிகவும் ருசியானது மாசி, பங்குனி மாதங்கள் ஈச்சங்குருத்து வெட்ட உகந்த காலமாகும். “

“அது சரி மான் பன்றி இறைச்சி வேட்டைஆடி கொடுக்கிறாயே உன்னிடம் துவக்கு இருகிறதா”?.:

அவன் சிரித்தபடி, “விதானையாரின் லைசன்ஸ் உள்ள துவக்ககை சிலசமயம் அவருக்கு இறைச்சி தேவை படும்போது வேட்டையாடக் கொடுப்பார்” என்றான் கறுப்பன்,

*****
அரசசேவையில் இருந்து நான் ஓய்வு பெற்று சில வருடங்களுக்குப் பின்னர் பரந்தனுக்கு சென்ற போது என்னை ஒரு காலத்தில் கவர்ந்த குறிப்பம் புளிய மரத்தை பாரக்க சென்ற போது எனக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. மரம் இருந்த இடத்தில ஒரு இராணுவ முகாம் இருத்தது. அந்த முகாமை சுற்றி முள் வேலி. கிரவல் பாதை இராணுவத்தின் வாகனம் வசதியாக பொய் வர அகண்ட தார் போட்ட பாதையாக மாறி இருந்தது. புலம் பெயர்ந்த பறவைகளையும், வைரவரையும் காணவில்லை. புளிய மரம் இருந்tத இடத்தில சுமார் இரண்டடி உயரமுள்ள அரசமரமும் , ,அதன் கீழ் புத்தர் சிலையும் இருந்தது பக்கத்தில் உள்ள வயல்கள் கவனிப்பார் அற்று கிடந்தன. அரச இராணுவத்தின் ஆக்கிர்மிப்பால் அந்த இயற்கையின் அழகு சீரழிந்து கிடந்தது .பேயுக்கும், மிருகங்களுக்கும் பயந்த ஊர்வாசிகள் இப்போது இராணுவத்துக்குப் பயப்படவேண்டி இருந்தது.
(யாவும் உண்மையும் புனைவும் கலந்தது)

எழுதியவர் : பொன் குலேந்திரன் – கனடா (5-Nov-18, 4:36 pm)
பார்வை : 257

மேலே