தீபஒளித் திருநாளே வருக

தீபஒளித் திருநாளே வருக..!
===============================

நீலவானில் நிலவொளியும் மறைந்த பின்னே
..........நீர்கொண்டு வாசலிலே சுத்தம் செய்து
கோலமிட்டு மங்கையர்கள் அழகு செய்து
..........கும்பிடவே வரிசையிலே விளக்கு வைப்பார்
ஆலயமும் திறந்திருக்கும் முழுதும் அன்று
..........அன்பையுமே பகிர்ந்திடவே இனிப்பும் உண்டு
காலத்தே வழிபடும்நம் குலத்தின் தெய்வம்
..........கனிந்தருளும் கணக்கிலா அருளை ஈந்து..!


ஆபரண ஆடையொடு அழகு சேர்க்க
..........அன்புமழை வாழ்த்தாகப் பொழிய விக்க
சாபங்கள் சங்கடங்கள் விலகி ஓடும்
..........சரித்திரமே இதற்கான பதில் சொல்லும்
பாபங்கள் நீங்கிடவே பண்டி கையாம்
..........படித்தபின் ஆராய்ந்தால் புத்து ணர்ச்சி
தீபங்கள் வரிசையிலே தீயு மிழ்ந்து
..........தீங்குகளை விரட்டிடுமே தூர மாக..!


ஞாலத்துள் உழலுகின்ற மாந்தர் துன்பம்
..........ஞானியரின் அருளாலே விலகிச் செல்லும்
வாலறிவன் வரங்கொடுத்த வாக்கி னாலே
..........வந்ததிந்த வெடிமுழக்கம் பிளக்கும் காதை
சாலவித்தை காட்டுகின்ற வெடிக்கும் சத்தம்
..........சங்கடத்தை உருவாக்கும் உயிர்க ளுக்கே
காலக்கெடு அரசாங்கம் வைத்த பின்பு
..........கண்டநேரம் வெடிவெடிக்க முடியா தன்று..!

========================
எண்சீர் ஆசிரிய விருத்தம்
காய் = காய் = மா = தேமா
========================

எழுதியவர் : பெருவை பார்த்தசாரதி (6-Nov-18, 10:49 am)
பார்வை : 103

மேலே