நட்புக்கோர் தீபத்திருநாள் வாழ்த்து

நிந்தனதும் மகவினதும்
அன்பு விதை வளர்ந்து
ஆலம் நெடுவிருட்சமாக
‘பழையன கழிதலும்
புதியன புகுதலும்
வழுவில’வெனவேற்றே;
மகன் மனங்கோணாமல்
நும் மனங்கொள்நல்
மனையாள் வாய்த்து
இன்பவூற்றுப் பெருகியூற
வல்லமை மிகவோங்கி
நல்லாயுள், ஆரோக்கியம்
செல்வஞ்சீ ரெலாமெய்திச்
சிறப்புடன் நீவிர்வாழி!
எத்திக்கும் கொண்டாடும்
இத்தீபத் திருநாளில்
சித்தமொரு மித்தேதான்
அத்தனடிபணிந்தேன்யான்
எத்தனையோ இடருறினும்
அத்தனையும் மறைந்தோடி
இத்தனைநாள் நும்மனதை
எள்ளிநகை வதைசெய்தார்
சித்தமெலாந் திருந்திவரச்
சீமானாய் நலம் வாழி!
மொத்தமாய்ச் சோதிப்பான்
வித்தகனாம் வேலவன்தான்
அத்தனையு மவன்களைவான்
சத்தியமாய்! சற்றேபொறும்!!
போற்றும் என் குகன்கழல்
போற்றி செய்தே யான்
சாற்றி யமைகின்றேன்
சற்புத்திர! நீடு வாழி!!
~ தமிழ்க்கிழவி (2018)
கவிதைப் பிரியரே! தங்களுக்கும் குடும்பத்தினருக்கும்
இனிய தீபத்திருநாள் நல்வாழ்த்துகள் உரித்தாகுக!