நம்பிக்கையும் எழுத்தும்- --------------கடிதம்

என் வாழ்க்கையில் நீங்கள் ஏற்படுத்திய தாக்கம் மிகப் பெரியது. மகாத்மாவின் மீது புரிதல் இன்றி வெறும் பக்தியோடு மட்டும் இருந்ததனால் , அவரைப் பற்றிய சார்பில்லா குறுக்கு வெட்டு தோற்றத்தை தரும் புத்தகம் “இன்றைய காந்தி” என்று கேள்விப்பட்டு வாசித்தேன். தங்களது புத்தகங்களில் நான் முதலில் வாசித்தது ‘இன்றைய காந்தி’ யைத்தான்.

அதன்பின் தங்கள் வலைத்தளத்தை வாசிக்க ஆரம்பித்தேன். நான் வேலையின்றி இருந்த சமயங்களில் தங்கள் வலைத்தளத்தை படிப்பது தான் என் பொழுதுபோக்கே.

வேலையில்லா நேரங்களில் நான் எனக்குள் குறுகிக்கொண்டிருக்கும் போதெல்லாம், நீங்கள் யாருக்கோ எப்பொழுதோ எதற்காகவோ சொன்ன விடயங்கள், கருத்துகள், கதைகள், தருணங்கள், மிகவும் பொருத்தமானவை ஆகவே இருந்தது. அத்தருணங்களில் எனக்கு இருந்த தனிமையையும், கொந்தளிப்பையும் யாருமே ஆற்றாத பொது, ஒவ்வொருமுறையும் உங்களின் எழுத்தின் மூலம் என்னை ஆற்றுப்படுத்தினீர்கள். நீங்கள் எனக்கு ஒவ்வொரு முறையும் என்னுடைய எல்லா நுட்பமான பிரச்சனைகளையும் கடந்து செல்வதற்கு உறுதுணையாக இருந்தீர்கள்.

இரண்டு வருடம் முன்பு வேலைக்காக ஹைதெராபாத் வந்த பிறகு, முன்பை போல், வலைதளத்தை தொடர்ந்து படிக்க முடியாமல் போனது. எனக்கு வேலையின் மீது இருந்த ‘ஆபசஷன்’ னை, எனக்கே உணர வைத்தது ‘டார்த்தீனியம்’ என்னும் குறுநாவல் உணர்த்தியது. எல்லா சமயங்களிலும் எனக்கு ஒரு நல்லாசிரியராகவே இருந்தீர்கள், இருக்கிறீர்கள்.

உலகத்தை புரட்டும் நெம்புகோல் தன்னிடம் இருப்பதாக அறியாமையினால் சிறுபிள்ளைத்தனமான நம்பும் பலரில் ஒருவனாக இருந்த என்னை மிகப் பெரிய மலை, கடல், ஆறு , சூறாவளி ஆகியவற்றின் முன் சிறியவனாக தோன்ற வைக்கும் உணர்வை விசும்பு , அறம் , இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள் எனக்கு தந்தன. உண்மையில் எனக்கு சிறியன் என்ற எண்ணம் வந்த பின்பே உண்மையான கற்றலை உணர்ந்தேன். நான் தங்களது குறுநாவல் தொகுப்பை வாசித்து கொண்டிருக்கிறேன். இந்த தொகுப்பில் உள்ள ஒவ்வொரு குறுநாவலும் ஒரு அற்புதமான உணர்வைத் தந்து கொண்டிருக்கின்றன.

இதுவரை நான் எப்பொழுதும் உணர்வு பூர்வமாக கடிதம் எழுதியது இல்லை. கடிதத்தை எப்படி ஆரம்பிக்க வேண்டும், எப்படி முடிக்க வேண்டும், எப்படி கோர்வையாக எனக்கு தெரியவில்லை. என் உணர்வுகளை முடிந்தவரை எழுத்திருக்கிறேன். என் கடிதத்தில் பிழை இருந்தால் மன்னிக்கவும்.

மணிமாறன்
--------------------------------------------------------------------------------
என் படைப்புகள் உண்மையைச் சொல்லவேண்டும், ஆனால் நம்பிக்கையையும் ஊட்டவேண்டும் என நினைப்பேன். ஆகவே பலசமயம் பலரை அவை தற்காலிகமாக உடைத்துவிடுவதைக் கண்டிருக்கிறேன். ஆனால் ஒட்டுமொத்தமாக வாழ்க்கை சார்ந்த யதார்த்தமான ஒரு கனவை அவை அளிக்கும் என்றே நினைக்கிறேன்

உங்களுக்கும் அவ்வாறு நிகழ்ந்தது என்றால் மகிழ்ச்சியே

ஜெ

மின்னஞ்சல்

எழுதியவர் : (16-Nov-18, 4:30 pm)
பார்வை : 63

சிறந்த கட்டுரைகள்

மேலே