முத்தொள்ளாயிரப் பாடல்------------------------மலரும் இயற்கை நினைவலைகள்
‘அள்ளற் பழனத்து அரக்காம்பல் வாயவிழ
வெள்ளம் தீப்பட்டதென வெரீஇப் புள்ளினந்தம்
கைச்சிறகால் பார்ப்பொடுக்கும் கௌவை உடைத்தரோ!
நச்சிலைவேற் கொக்கோதை நாடு’
செவ்வல்லிகள் அவிழ்ந்திட நீரில் தீப்பற்றிவிட்டதாகக் கருதிப் பறவைகள் கீச்சிட்டுக்கொண்டு கூடுகளில் இருக்கின்ற குஞ்சுகளைத் தம் சிறகுகளால் அணைத்து ஆரவாரம் செய்கிற சித்தரிப்பைக் கூறி சேரநாட்டில் பறவைகளின் சச்சரவுகளைத் தாண்டி வேறு கூச்சல்கள் ஏதுமில்லையெனச் சேரவளம் சுட்டுகின்ற செய்யுளிது. ஜெயராமனின் உருவகம் இந்த ஐந்தாம் நூற்றாண்டுப் படிமத்திற்கு அழைத்துச்செல்லும்போது இயற்கைக்கும் இலக்கியத்திற்கும் இருக்கின்ற மரபார்ந்த சரடொன்றை உணரமுடிகின்றது. அன்றைய ரசனையைச் செவ்வியல் ஆக்கமாக்கிய மானுடம் இன்று இயற்கையின் வழியாக அதே ரசனையை மீட்டெடுக்கின்றது.