பனிப்பொழிவிலிருந்து பறவையின்மையை…

நேற்று பி.பி.சியில் நீர்வளம் குறித்த கலந்துரையாடல். நீர்வள நிபுணர்கள், சூழலியல் அறிஞர்களிடையே ஒரு ஓவியரும் இடம்பெற்றிருந்தார். பெண். பெயர் மறந்துவிட்டது. சமூக, அரசியல் நோக்கில் மற்ற அனைவரும் பேசிய பொழுது இவர் இலக்கியத்தையும் கலையையும் முன் நிறுத்தி பேசினார். அவர் முன்வைத்த நீர் குறித்த இரு மேற்கோள்கள் இன்னும் ear wormஎன நினைவில் ஒலித்துக்கொண்டே இருக்கின்றன.

When you look at your reflection in the water, do you see the water in you?

இந்த வரி நேற்றிரவில் இருந்து படுத்தி எடுக்கிறது…. நீ நீரில் உன் பிம்பத்தை காணும் பொழுது உன்னுள் இருக்கும் நீர் தெரிகிறதா?….

இன்னொரு வரி, எமிலி டிக்கின்சனின் கவிதையில் வரும் வரி…

Water is taught by thirst.

ப்பா… என்றிருந்தது…என்ன ஒரு வரி… இந்த வரி இடம்பெற்ற முழு கவிதை :

Water, is taught by thirst.
Land—by the Oceans passed.
Transport—by throe—
Peace—by its battles told—
Love, by Memorial Mold—
Birds, by the Snow.

அருமையான கவிதை….

இன்மையில் நின்றபடி இருப்பை நோக்குதல்…
தாகத்திலிருந்தபடி நீரை,
போரிலிருந்தபடி அமைதியை,
பனிப்பொழிவில் நின்றபடி பறவையை…

ஒரு வகையில் மிகப்பழமையான கவிதைக்கருவி இது… எனக்கு மிகப்பிடித்த குறுந்தொகை பாடல்களில் ஒன்றான காலே பரிதப்பினவே நினைவுக்கு வருகிறது…

காலே பரிதப்பினவே கண்ணே
நோக்கி நோக்கி வாளிழந்தனவே
அகலிரு விசும்பின் மீனினும் பலரே
மன்ற இவ்வுலகத்து பிறரே

கால்கள் வழிவிழந்தன… கண்கள் பார்த்துப்பார்த்து பூத்துப்போயின… வானத்தின் விண்மீன்களை விடவும் அதிகமாக இருக்கிறார்கள் இவ்வுலகில் மற்றவர்கள்…

தேடலையும் அத்தேடலில் கண்ட மற்றவர்களையும் மட்டுமே குறிப்பிட்டு, இந்த இருப்பில் நின்றபடி தேடப்படும் நபரின் இன்மையை சுட்டும் கவிதை…

Birds, by the Snow… பனிப்பொழிவு பறவைகளை நினைவுப்படுத்துகிறது… நமக்கு துணையில்லா தனிமையை கார்காலம் ஊதிப்பெருக்குவது போல அமெரிக்கர்களுக்கு பனிக்காலம் போலும்…

இன்னொன்றும் தோன்றுகிறது. விண்மீன்களை தெளிவாகக்காண நகரத்து வெளிச்சங்கள் ஏதும் இல்லாத இரவு தேவைப்படுவது போல பறவைகளற்ற தூயவெள்ளை வானம் தேவைப்படுகிறதா பறவைகளை நினைவுகூற?



சித்தார்த்

எழுதியவர் : (19-Nov-18, 5:33 pm)
பார்வை : 27

மேலே