அவள் மேலான காதல் என்று வந்ததோ

பெண்ணழகை சொல்லவும் வேண்டுமோ
கண்ணழகை கடந்து செல்ல முடியுமோ
வண்ணமது தீட்டாத ஓவியமே
வனத்தின் தேவதை பெண்ணே

வானத்து மேகங்கள் போலவே
கானத்தின் இசையைப் போலவே
கனியின் சுவையைப் போலவே
வெண்ணிலாவின் குளிர்ச்சியைப் போல
இப்படி எல்லாமும்
எப்படி எல்லாமோ
அவளை புகழ முடியும்
அவள் சொல்லித்தந்த
மொழியால்

ஆனால் எல்லாவற்றையும் தாண்டி
மலையின் உயரத்தைப் போல
அண்ணாந்து பார்க்கிறேன்
தமிழ் இலக்கியங்களை
அவள் விழியும் விரலும்
அபிநயம் பிடித்து
கற்றுத்தந்த அழகு மொழியை

அவள் மேலான காதல்
அதையும் தாண்டி அவளால்
கிளர்ந்து எழுந்த
தமிழ் மேலான காதல்
எப்போது வந்தது
சற்று விழிமூடி
யோசித்துப் பார்க்கிறேன்


ஆசிரியர் சொன்னதற்காக
முதல் முதலாக
உருண்டு புரண்டு
எழுதிய ரோஜா கவிதையை
நண்பர்கள மெச்சியபோதா
அல்லது

அழகு அழகாய்
காதல் கவிதைகளை
தலைவன் தலைவி
இலக்கியக் காதலை
நயம்பட சொல்லித்தந்த
ஆசிரியையின் அபிநயத்தைப்
பார்த்த பின்னோ
அல்லது

அம்புலி மாமா கதையும்
சிந்துபாத் கதையையும்
தேடி தேடி படித்த
காலத்தில் வந்ததோ

வீட்டில் வாங்கி தந்த
தங்க மலர் கதைகளில் வந்ததோ
அல்லது பக்கத்துக்கு வீட்டில்
கதவை தட்டி லேசாக நெளிந்து
கேட்டுப் படித்த
சிறுவர் மலர் கதைகளில் வந்ததோ

குறுங்கவிதைகளில்
காதல் பொழுதுகளில்
கண்ணை மூடி
கணம் மறந்து
இன்னொரு உலகம்
பயணம் செய்த
காதல் பொழுதுகளில்
வந்ததோ

பருவம் கடந்து
கல்லூரி விடுதியில்
கவிழ்ந்து கிடந்து
நீள நாவல்களில்
நாட்களை நகர்த்திய
காலங்களில் வந்ததோ

எப்பொழுது வந்ததோ
அறியேன் நான்
எப்போதும் தொடர்கிறது
தமிழ் மேலான
அந்தக் காதல்
அழகாய் மழையாய்
எனக்குள்ளும் என் கவிதைகளுக்குள்ளும் !

எழுதியவர் : யாழினி வளன் (23-Nov-18, 10:10 pm)
சேர்த்தது : யாழினி வளன்
பார்வை : 414

மேலே