வாசிக்க வாசிக்கத்தான் மொழி பெருகும் ----------------------எழுத்தாளர் சுரேஷ் பிரதீப் பேச்சு

தர்மபுரி, ஆக.7:

வாசிக்க வாசிக்கத்தான் நம்முள் இருக்கும் மொழிக் கிடங்கு பெருகும் என எழுத்தாளர் சுரேஷ் பிரதீப் பேசினார். தர்மபுரியில் கடந்த 3ம் தேதி புத்தகத் திருவிழா தொடங்கியது. இதில் 50க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் மாலை நடந்த நிகழ்ச்சியில், எழுத்தாளர் சுரேஷ் பிரதீப் ஏன் வாசிக்க வேண்டும் என்ற தலைப்பில் பேசுகையில்,

மொழி தோன்றி 6 முதல் 7 ஆயிரம் ஆண்டுகள் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அதற்கு முன்பு, சுமார் 20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதன் பேசத் தொடங்கியிருக்கலாம். தான் பார்த்த ஒன்றை வியப்பால் மற்றவர்களுக்கு அதனை உணர்த்த முற்பட்டிருக்கலாம். அது பேச்சாகி, பிறகு மொழியாகியிருக்கிறது. ஒவ்வொரு சொற்களுக்கும் ஒரு குறியீட்டை மனிதன் வடிவமைத்தான். அந்த மொழிக் குறியீட்டின் பயன்பாட்டைப் புரிந்து கொள்ள வாசிப்பு நமக்குத் தேவைப்படுகிறது. வாசிக்க வாசிக்கத்தான் நம்முள் இருக்கும் மொழிக் கிடங்கு பெருகும். மொழிக் கிடங்கு பெருகினால்தான் பேச்சு மொழி மேம்படும், மனிதனின் சுய சிந்தனை வளரும். வீடுகளில் சமத்துவமின்மை, ஜனநாயகத் தன்மையின்மை ஆகியவற்றால் தான் குடும்பம் சிதைகிறது. மகிழ்ச்சியாக வாழ வேண்டிய தருணங்களில் பெண் வீடுகளுக்குள் முடங்கிவிடுகிறாள். இதனை ஆண்கள் உணர்வதில்லை. பாவனைகளுக்குள் பெண் சிக்கிக் கொள்கிறாள். இவை குறித்தெல்லாம் பேச வேண்டியுள்ளது என்றார்.நிகழ்ச்சியில் காலத்தின் குரல் என்ற தலைப்பில் ஊடகவியலாளர் மு.குணசேகரன் பேசியதாவது: மனிதர்களை ஏற்றத் தாழ்வின்றி கண்ணியமாக நடத்துவதற்கு, நாம் மேலும் மேலும் படிக்க வேண்டியுள்ளது. பள்ளிப் படிப்பின்போது மிகக் குறைந்த மதிப்பெண்களை எடுத்த அம்பேத்கர்தான், பிற்காலத்தில் உலகிலேயே மிகப்பெரிய பல்கலைக்கழகங்கள் என்று அப்போது கருதப்பட்ட இரண்டிலும் படித்தவர். மதிப்பெண்களைக் கடந்தது வாழ்க்கை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு காலத்தில் நிலம்தான் சொத்து, இப்போது அறிவுதான் சொத்து. தொடர்ந்து வாசிப்பதன் மூலமும், பயணங்களின் மூலமும் கிடைக்கும் அரிய சொத்து, அறிவு என்றார். மூன்றாம் நாள் நிகழ்ச்சிக்கு விஜய் கல்வி நிறுவனங்களின் தலைவர் டிஎன்சி. மணிவண்ணன் தலைமை வகித்தார். பென்னாகரம் அரசுக் கலைக் கல்லூரி முதல்வர் செல்வவிநாயகம், இந்திய மருத்துவச் சங்கத் தலைவர் டாக்டர் சந்திரசேகர், தர்மபுரி மறை மாவட்ட ஆயர் லாரன்ஸ் பயஸ், டாக்டர் செந்தில், சிசுபாலன், வனப்பிரியன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். முன்னதாக, புத்தகத் திருவிழாவின் வரவேற்புக் குழு பொருளாளர் கண்ணன் வரவேற்றார். சவுந்திரபாண்டியன் நன்றி கூறினார்.

எழுதியவர் : (25-Nov-18, 6:03 am)
பார்வை : 46

மேலே