உயிர் கசிவில்
இன்றோடு தொலையட்டும் என
எத்தனை இரவுகள் ஏமாற்றப்பட்டன.
மீண்டும்மீண்டும்
அவள் நினைவை நோக்கியே பயணப்படும்
என் சிந்தைக் கால்கள்.
இதழ் மௌனமாய்க் கிடந்தால் கூட,
மனம் மட்டும்
அவள் பெயரை முனுமுனுக்கும் தொடர்நிகழ்வு.
விரல்கள்கூட அவளுக்காய்
என்றும் வார்த்தைச் சுமக்கத் துணிகின்றன.
சற்று யோசித்தல்கூட அவள் நினைவுகள்
உயிரின் கடைசித்தளம் வரை சென்று
காயப்படுத்த விழைகின்றன.
மனித ஜீவிதத்தையே வெறுக்கும் நிலை.
நிதர்சனம் உணர்ந்த பின்னும் ,
நினைத்துப் புலம்பும் மனம்தான்
இன்னும் விசித்திரமாய் உள்ளது.
அவள் நினைவின் அலைகள்
சற்று கசிந்தால்கூட,
மனம் பிரளயத்தை நோக்கிப் பயணப்படுகிறது.
அதனுடன் விழிகளும் வழிமொழிந்து,
நதியோட்டதை வரவழைக்கின்றன.
விடைதெரியாது
அவள் வீசிச் சென்ற
எண்ணிலடங்கா கேள்விகள் ,
இன்னும் என் நினைவுக்குள்
அலைந்து திரிகின்றன.
அத்தனைக்கும் தீர்வு தேடியே
இந்த ஆயுள் முடிந்து போகலாம்.
இல்லை
என் உயிர்கசிவில் உறைந்து போகலாம்....