சென்னை பேச்சிலர் ரூம் நவீன கவிதை

அழுக்குத் துணிகளின்
அலங்கரிப்பில் அழகாய்
குப்பைகள் கும்மாலமிடும்!

அரிசியில்லா அடுப்பிலே
பார்க்கவந்த பல்லிகூட
பாவமாய் திரும்பியோடும்!

தண்ணீர் குழாய்களும்
கண்ணீர் விட்டு விட்டு
சொட்டு சொட்டாய் விழும்!

குப்பைத் தொட்டியை
மேடையாக மாற்றிக்கொண்டு
கொசுக்கள் கொண்டாடும்!

துடைப்பங்கள் துக்கப்பட்டு
மூலையிலே குந்தியழுது
தலைமயிரை உதிரும்!

தலைவலியில் படுக்க எடுத்த
தலையணைகூட நம்தலைவிதி
எண்ணி தலையில் அடித்துக்கொள்ளும்!

காய்ந்த பாத்திரத்தில்
கரப்பான்பூச்சிகள் முகம்
பார்த்து அலங்காரம்செய்யும்!

காய்கறி கூடையில்
காய்ந்த கத்தரியும்
வெம்பிய வெங்காயமும்
உழவனின்றி முளைந்திருக்கும்!

ஆளுக்கொரு திசையில்
ஆன்லைனில் நுழைந்து
பசியை மறந்திருப்போம்!

மாதம் இறுதியில்
சாதம் உறுதியில்லை…

ஆயினும்…
சோறுதண்ணி இன்றி
சோகத்தில் இருந்தால்கூட
விருந்தாடி வந்துவிட்டால்
விருந்துவைக்க தவறுவதில்லை!
-அ.அம்பேத்

எழுதியவர் : அ.அம்பேத் (2-Dec-18, 7:46 pm)
சேர்த்தது : அம்பேத் ஜோசப்
பார்வை : 35

மேலே