கனன்ற கருவறை

ஊரார் பழிசொல்ல
உற்றவனும் பழிசொல்ல
சேர்வார் யாவருமே
செந்நாய் போல் குலைத்திருக்க
கார்வானம் கண்டதுபோல்
காதல் வாழ்கை ஆனதென்ன ...?

கண்ணே....! மணியே....! என
கட்டில்மேல் நானமர்ந்து
தண் மார்பைத் தொட்டிலாக்கி
தாலாட்டு பாடுதற்கும்
தாவி விளையாடுதற்கும்
தங்கமொன்று பிறக்கவில்லை
தாய்மை இன்னும் கிடைக்கவில்லை
தவிப்பதனால் நிற்கவில்லை

யார் செய்த புண்ணியமோ.....?
யான் செய்த பாக்கியமோ .....?


என் நெஞ்சை மிதித்தாட
எனதுள்ளே விளையாட
மண் திண்று மடிமீது
மயங்கியே விளையாட
புழுதிமண் மெய்ச் சேர
பின்வந்து எனைச் சேர
பிஞ்சுப் பிரபஞ்சம் ஒன்றை
பெற்றெடுக்கப் போகின்றேன்

மலடி என்ற பேர்சொல்லி
மாறி மாறி அழைத்தாரென்று
மாதராய்ப் பிறந்ததை எண்ணி
மன வெதும்பி நானிருந்தேன்
மண்சோறு உண்டுவந்தேன்

யார் செய்த புண்ணியமோ.....?
யான் செய்த பாக்கியமோ .....?

கொஞ்சி விளையாடுதற்கும்
கோடி முத்தம் வேண்டுதற்கும்
பிஞ்சு மழலைப் பேசுதற்கும்
பிஞ்சுப் பிரபஞ்சம் ஒன்றை
பெற்றெடுக்கப் போகின்றேன்

பிள்ளைப் பிரபஞ்சமே என்
பெண்மையின் பூரணமே.....!!!
பஞ்சு உதைகளால் எனை
பாடாய்ப் படுத்துவாயா...
கொஞ்சும் மழலையால்
கோடி இன்பம் தருவாயா...

நீ செய்த புண்ணியமோ.....!!!
நான் செய்த பாக்கியமோ.....!!!
கனன்ற கருவறை இன்று
உயிர் பெற்று எழுந்ததே

-- வேத்தகன்

எழுதியவர் : வேத்தகன் (3-Dec-18, 9:33 pm)
பார்வை : 1358

மேலே