ஆசை மகன்
பூங்குருவி கூடு
விட்டுப் பறந்தது./
குடும்பம் அனைத்தும்
தேடியே அலைந்தது/
கூண்டுக் குயில் ஈழம் காக்கும் /கூட்டத்தோடு இணைந்தது /
தமிழ் மண் போற்ற பறந்தே சென்றது/
என்னும் செய்தி கேட்டு /
பெத்த மனம் வார்த்தை இழந்து தவித்தது/
தேடி ஓய்ந்து சேர்ந்த இடம் அறிந்து /
வீடு வந்த பின்னும் /
அன்னை மனம் கலங்கியது /
ஈழமண் காக்க தன் மகன்
புறப்பட்டதை எண்ணி /
அந்த வீரத் தாயின் மனம் தேறியது/
இருந்தும் நன் நாள் பெருநாள் /
வரும் போது உள்ளம் விசும்பியது./
நான் பெற்ற மகன் வீர மகன்
மற்ற இனத்தையே நடுங்க /
வைக்கின்றான் என் மகன்/
என்று வீராப்பு வசனம் /
உரைத்தாலும் தந்தை கண்கள் /
மகனின் முகம் காணவே ஏங்கியது/
போர் களத்தில் மாண்ட வீரர்கள் /
பெயர் பட்டியலிலே முதலிடம் /
தன்னோட மகனின் பெயருக்கு
கிடைத்ததை /
படித்ததும் இடிந்து போனார்கள்/
ஏழைப் பெற்றோர்/
என்றாவது ஓர் நாள் /
கூடு தேடி குயில் வரும் /
என்னும் கனவு களைந்தது./
தாய் என்னும் ஆல மரம் தாங்கிப்
பிடிக்க /
விழுது இல்லாமல் சாய்ந்தது /
தந்தை என்னும் படகு துடுப்பில்லாமல் /
துன்பக்கடலில் துடித்தது/
ஈழம் காக்கச் சென்ற இளைய மகன் /
ஈழமண்ணில் விதைக்கப் பட்ட வீரமகன் /
அவர்கள் பல கனவோடு ஈன்ற மகன் /
இதோ அந்தச் சின்ன மகன் /
காத்திகை தீப ஒளியிலே /
கல்லறையின் உள்ளே /
உறங்குகின்றான் ஆசை மகன்/