பறவைக்கேது நேரச்சுமை

பெற்றோர்களே!!
பிள்ளைகளின் முதுகில்
புத்தக சுமையோடு உங்கள்
பெருங்கனவையும் சுமத்தாதீர்...
கன்றுக்குட்டிகளை வண்டிமாடுகளாக்கும்
கனவினை காணாதீர்!!!
ஆசிரியர்களே!!
அரை வகுப்புகள் நடத்தி
அவசர தேர்வுகளால் குழந்தைகளை
அளவீடு செய்யாதீர்...
அரும்புகளை அங்காடியின் தேதி
அச்சிட்ட பண்டமாக்காதீர்!!!
கண்மணிகள் கற்று கொள்ள
கால அட்டவணை தேவையா?
சில சிற்பங்கள் செதுக்க நேரம் ஆகலாம்...
அவகாசம் கொடுத்தால் சிலைகளாகலாம்....இல்லையேல்
அவை வெறும் கற்களாய் சிதைக்கபடலாம்!!!
வானில் பறப்பதற்கு பறவைக்கு நேர
விதிகள் இருக்கிறதா?
சிறகுள்ளவரை பறக்கத்தானே செய்யும்!!
கடவுளின் படைப்புகளில் சிலவை
கலவர படைப்புகள்...
ஒன்றை போல் இன்னொன்று இருப்பதில்லை!!!
ஒரே நேரத்தில்... போட்ட விதைகள் முளைப்பதில்லை!!!
குழந்தைகளை தரம் பார்த்து பிரிப்பதற்கு
பள்ளிக்கூடம் தொழிற்சாலையுமில்லை!!!
இத்தனை வருடம் இத்தனை கல்வி என்பது
இனி வேண்டாம்...
கற்றது முழுமை அடைந்தால்தானே
முற்று பெறும் கல்வி!!!
பள்ளிகூடங்கள் வெறும் குவிக்கப்பட்ட புத்தக பொதியல்ல...
வாழ்க்கையின் வாசல் திறக்கும் திறவுகோல்கள்!!!
அதை நேரத்தின் கதவு கொண்டு பூட்டி வைக்காதீர்!!!
அகண்ட விண்வெளியில் நேரம் தான் ஏது...காலம் தான் ஏது??