கிறித்தவ இசைப்பாடலாசிரியர்கள்------------கிறிஸ்துமஸ் இசை மலர் 2018

தமிழின் தனித்தன்மை கொண்ட ஓர் இலக்கியவடிவம் என்று கிறித்தவ தோத்திரப்பாடல்களை சொல்லமுடியும். குமரிமாவட்டத்தில் பிறந்து வளார்ந்த நான் தொடர்ந்து நாற்பதாண்டுகளுக்கும் மேலாக அவற்றைக் கேட்டுவருகிறேன். என் மனம் கவர்ந்த கிறித்தவ தோத்திரப்பாடல்களின் பெரிய பட்டியலே உண்டு. ஆனால் இந்தப்பாடல்களின் முறையான வரலாறோ இதன் ஆசிரியர்களின் பெயர்களோ நானறியாதவை. சமீபத்தில் வாசிக்கநேர்ந்த ஒரு நூல் அதன் காரணமகாவே மிகுந்த மனக்கிளர்ச்சியை உருவாக்குவதாக அமைந்தது

பேராசிரியர் யோ.ஞானசந்திர ஜான்சன் [தமிழ்த்துறை, கிறித்தவக்கல்லூரி தாம்பரம்] பேராசிரியர் அ.கா.பெருமாள் அவர்களின் மாணவர். அவர் எழுதிய ஆய்வுநூலான கிறிஸ்தவக் கீர்த்தனைக் கவிஞர்கள் அரியதோர் தகவல்களஞ்சியம். இதைச் சாதாரணமாகப் புரட்டிப்பார்த்தபோதே ஒரு வியப்பை அடைந்தேன். எழுபது கிறித்தவ கீர்த்தனை ஆசிரியர்களின் வரலாற்றை இதில் சொல்லியிருக்கிறார் ஜான்சன். தொடர்ந்து இத்துறையில் ஆர்வம் கொண்டவனாக இருந்தபோதிலும் நான் பத்துபேருக்குள்தான் கேள்விப்பட்டிருக்கிறேன்

இன்றைய கிறித்தவத் தோத்திரப் பாடல்களின் தொடக்கப்புள்ளி என்று மார்ட்டின் லூதரை[ 1483- 1546 ]ஜான்சன் குறிப்பிடுகிறார். இன்றைய சீர்திருத்த கிறித்தவ சபையினரின் தொடக்கப்புள்ளியாகிய அவர் இன்றுள்ள தேவாலய கூட்டுவழிபாட்டு முறையை உருவாக்கினார். அதில் பாடும்பொருட்டு அவரும் அவரது தோழர் ஜோஹான் வால்த்தரும் எழுதிய தோத்திரப்பாடல்கள் 1524ல்ல் நுலாகத் தொகுக்கப்பட்டன. அதுவே கிறித்தவ தோத்திரப்பாடல் மரபின் முதற்புள்ளி என ஜான்சன் சொல்கிறார். ஐந்து இலத்தீன் மொழிப்பாட்லகளும்32 ஜெர்மானியப்பாடல்களும் அடங்கியது இத்தொகுதி.

ஜெர்மானிய தோத்திரப் பாடல்களை தமிழாக்கம் செய்த அருள்திரு பர்தலேமியு சீகன்பால்கு [ 1683- 1719 ] அவர்கள்தான் தமிழ் கிறித்தவத் தோத்திரப்பாடல்களின் தொடக்க புள்ளி என்பது ஜான்சனின் கருத்து. 1713ல் அவர் இயற்றிய தமிழ் தோத்திரப்பாடல்களின் தொகுதியான ’ஞானப்பாடல்கள்’ இத்துறையின் முதல் நூல் .இதில் 48 பாடல்கள் இருந்தன.இவை மேலைநாட்டு காஸ்பல் இசையின் மெட்டுக்கு அமைக்கப்பட்டவை.

இப்போ எழுந்திருந்து – என் கர்த்தரைப் புகழ்ந்து
துதித்துக்கொண்டு வாறேன் என் கடனைத்தானே தீர்ப்பேன்

நான் தூங்கியிருந்த போதும் – இருட்டில் நின்றபோதும்
நான் காக்கபப்ட்டிருந்தேன் – சரீர பெலன் கொண்டேன்

என்ற பாடலை காலைத்துதிக்காக சீகன்பால்கு எழுதியிருக்கிறார். காலை மாலைப்பாடல்களை தனியாக அமைத்து தனித்தனியான இசைக்குறிப்புகளையும் அவர் அளித்திருக்கிறார்.

சீகன்பாலுகுவிற்குப் பிறகு வந்த சூல்சே, வால்தர், பிரேசின் மற்றும் பெப்ரீசியஸ் ஆகியோரும் தமிழில் தோத்திரப்பாடல்களை எழுதியதாகக் குறிப்பிடும் ஜான்சன் இந்தக்காலகட்டத்தின் தோத்திரப்பாடல்களை 1901ல் ஜெ.எஸ்.சாண்ட்லரின் தலைமையிலான குழு பெருந்தொகுப்பாக தொகுத்தது என்கிறார். இத்தொகுதியே கிறிஸ்தவ பாமாலை பாடல்கள் என்ற பேரில் இன்றும் வெளிவந்துகொண்டிருக்கிறது

தமிழில் கிறித்தவத் துதிப்பாடல்களை எழுதிய முன்னோடி என்று வீரமாமுனிவரை[ 1680- 1747] ஜான்சன் குறிப்பிடுகிறார். வீரமாமுனிவரில் இருந்து தொடங்கி எழுபது துதிப்பாடலாசிரியர்களின் சுருக்கமான வரலாற்றை எழுதி அவர்களின் பாடல்களின் சில மாதிரிகளையும் சிறப்பியல்புகளுடன் அளிக்கிறார். வீரமாமுனிவர் இந்திய ராகங்களில் இசைப்பாடல்களாகவே தன் துதிகளை எழுதியிருக்கிறார்

ஜகந்நாதா குருபரநாதா – திரு
அருள்நாதா ஏசுபிர்சாத நாதா

[அனுபல்லவி]

திகழுறுந்தாதா புகழுறும் பாதா
தீதறும் வேத போதா

சரணம்]

முற்காலம் ஆதிமைந்தர் மோசப்பிராசு தந்திர
மொழ்ய்கொண்டு கனியுண்ட் பழியாலோ
நற்காலம் நீ தெரிந்த நவின்ற வண்ணம் பரிந்து
நரதேவனாக வந்தாய் மொழியாலோ

என்ற பாடல் தன்யாசி ராகத்தில் ஆதிதாளத்தில் அவரால் அமைக்கப்பட்டுள்ளது. அன்றிருந்த பக்தி இயக்கத்தின் கீர்த்தனைகளின் வடிவையே அதுவும் கொண்டிருக்கிறது

திராவிடமொழிகளின் ஒப்பிலக்கணம், திருநெல்வேலி வரலாறு போன்ற நூல்களை எழுதிய பேராயர் கால்டுவெல் [1814- 1891] தமிழில் இசைப்பாடல்களை எழுதியிருக்கிறார் என்பது பரவலாக அறியபப்டாத செய்தி அவரும் இந்திய இசைமரபுக்கு இசையவே தன் பாடல்களை எழுதியிருக்கிறார்.

ஏசையா பிளந்த ஆதிமலையே
மோசநாளில் உன்னில் ஒளிப்பேனே

என்ற பாடல் இந்தியக்காதுக்காகவே எழுதப்பட்டதுபோலிருக்கிறது

தமிழ் கிறித்தவ தோத்திரப்பாடல்களின் முக்கியமான பெயர் என்று ஜான்சனால் வேதநாயக சாஸ்திரியார் [1774- 1864] குறிப்பிடப்படுகிறார். சாஸ்திரியாரின் பாடல்கள் இந்திய இசைமரபுக்கு உட்பட்டு, தமிழிலக்கியத்தின் தனிச்சொல்லாட்சிகளுடன் எழுதப்பட்டமையால் பெரும்புகழ்பெற்றன. திருஎநெல்வேலியைச் சேர்ந்த வேதநாயக சாஸ்திரியார் பிறரைப்போல மதப்பணியின் ஒரு பகுதியாக இலக்கிய- இசைப்பணியைச் செய்யாமல் அதையே தன் முழுப்பணியாகச் செய்த வேதநாயக சாஸ்திரியார் எட்டு சிற்றிலக்கிய நூல்களையும் இரு நாடக இலக்கியங்களையும் ஐந்து அற இலக்கியங்களையும் உள்ளடக்கி 35 கிறித்தவ இலக்கிய நூல்களை எழுதியிருக்கிறார். ஆவ்ற்றில் நான்கு நூல்கள் இசைநூல்கள். ஞானப்பத கீத்தனைகள், ஆரணாதிந்தம், பாலசரித்திரம், வண்ண சமுத்திரம் ஆகியவை

பல்வேறு இடங்களில் கிறித்தவ அறிஞர்கள் உருவாக்கிய துதிப்பாடல்களை ஒருங்குதிரட்டியவர் அருள்திரு எட்வயத்திர்ட் வெப் அப்பாடல்களைத் தொகுத்து 1853ல் ஞானகீதங்கள் என்ற தலைப்பில் வெளியிட்டார். சீர்திருத்தச்சபையின் துதிப்பாடல்களின் முக்கியமான தொகுதியாக அது கருதபப்டுகிறது. அருள்திரு ஜே.எஸ்.சாண்ட்லரும் இசைப்பாடல்களை எழுதியிருக்கிறார்

மரியான் உபதேசியார், தேவவரம் முன்ஷியார்,அருள்திரு சற்குணம் வில்ஃப்ரெட், ஜான் பால்மர், காபிரியேல் உபதேசியார், அருமைநாயகம் சட்டாம்பிள்ளை, தேவசகாயம் உபாத்தியாயர், அருள்திரு வேதக்கண் , மாசிலாமணி, எலியா தேவசிகாமணி சாஸ்திரியார், அருள்திருபாக்கியநாதன் தாவீது , தி.யோசேப்பு, சி யோசேப்பு , அருள்திரு ஞா சாமுவேல், அருள்திரு ஒய் எஸ் டய்லர், திட்டூர் தேசிகர் என நாமறியாத பல பாடலாசிரியர்களின் வரலாறு இந்நூலில் உள்ளது

அறியப்பட்ட சில பெயர்களில் எ.ஏ.கிருஷ்ணபிள்ளை [1827 -1900]குறிப்பிடத்தக்க பெயர். இரட்சணிய யாத்ரீகம் என்னும் நூலை இயற்றியவர். அவரது ஐந்து கீர்த்தனைகள் இன்று பாடப்படுகின்றன என்கிறார் ஜான்சன்

இன்னொருவர் தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் [1859 – 1919] . நெல்லை அருகே பிறந்து தஞ்சையில் மருத்துவத் தொழில் புரிந்த ஆபிரகாம் பண்டிதர் தமிழிசை இயக்கத்தின் தொடக்கப்புள்ளி. கர்ணாமிர்த சாகரம் என்னும் பெருநூலின் ஆசிரியர். ஏழு இசை மாநாடுகளை சொந்தச்செலவில் நடத்தியவர். கர்ணாமிர்த சாகரத் திரட்டு என்ற நூலில் அவர் இயற்றிய 96 பாடல்கள் உள்ளன.

அறியப்பட்ட இன்னொரு பெயர் அருள்திரு ம.வேதமாணிக்கம் [1864- 1917] குமரிமாவட்டம் மயிலாடியில் பிறந்த வேதமாணிக்கம் குமரிமாவட்டத்தில் கிறித்தவ மதம் வேரூன்ற காரணமாக அமைந்தவர். இன்னொருவர் மொழிஞாயிறு என்று புகழ்பெற்றவரும் தமிழ் வெர்ச்சொல் அகரமுதலியின் ஆசிரியருமான தேவநேயப்பாவாணர். அவரது கிறித்தவ கீர்த்தனம் என்ற நூல் 1981ல் வெளிவந்தது. பியாக் ராகத்தில் பாவாணர் எழுதிய

இத்தரையின் மத்தியினில் பெத்தலையின் சத்திரம்

[அனுபல்லவி]

அத்தன் ஏகபுத்திரன் கிறித்துவும் உதித்தனர்

என்ற கீர்த்தனை பெரும்புகழ்பெற்றது

அலன் ஆபிரகாம் அம்பலவாணர்,ஜெ.எம் ஆழ்வார்பிள்ளை,க.பொ.முத்தையா முதலிய இலங்கை பாடலாசிரியர்களின் வரலாற்றையும் ஜான்சன் இந்நூலில் சேர்த்திருக்கிறார்.

என் பார்வையில் இப்பட்டியலில் மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் பெயர் காணப்படவில்லை என்பது சற்று வியப்பாக இருக்கிறது. தமிழ்க்கீர்த்தனைகள் எழுதிய பிள்ளையவர்கள் கிறித்தவப்பாடல்கள் எழுதவில்லையா என்ன?

அத்துடன் இதிலுள்ள பெரும்பாலான தோத்திரப்பாடலாசிரியர்கள் சீர்திருத்த சபையினராகவே இருக்கிறார்கள். இதில் கத்தோலிக்க தோத்திரப்பாடலாசிரியர்கள் முழுமையாக சேர்க்கப்பட்டிருக்கிறார்களா என்றும் ஐயமாக இருக்கிறது. அவ்வாறு சேர்க்கப்பட்டிருந்தால் மட்டுமே முழுமையான ஆய்வுநூலாக இதைக்கொள்ளமுடியும்

[கிறிஸ்தவக் கீர்த்தனைக் கவிஞர்கள்-யோ ஞானசந்திர ஜான்சன். F2 பெத்தேல் என்கிளேவ், 5 பெத்தேல் புரம், கிழக்குத் தாம்பரம், சென்னை59]

ஜெ
மின்னஞ்சல்

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
கிறிஸ்தவ இசைப்பாடல்கள்- கடிதம்
----------------------------------------------------

மதிப்பிற்குரிய ஜெயமோகன்,

உங்களின் பரந்து விரிந்த வாசிப்பினாலேயே நீங்கள் நினைப்பவைகளை எல்லாம் வார்த்தைகளாக வடித்துவிட முடிகிறது. கிறிஸ்தவ இசைப் பாடலாசிரியர்கள் என்ற நூல் பற்றிய உங்களின் பதிவுக்கு நன்றி. CLS பதிப்பகத்தைச் சேர்ந்த அருள்திரு. தயானந்தன் பிரான்சிஸ் அவர்களும் பல ஆண்டுகளுக்கு முன்பு கிறிஸ்தவ அருட்கவிஞர்கள் என்ற நூலை எழுதி இருக்கிறார். நீங்கள் அறிந்திருக்கக் கூடும்.

கிறிஸ்தவ கீர்த்தனைகள் என்றாலே எல்லோரும் வேத நாயகம் சாஸ்திரி அவர்களையே நினைப்பர். நீங்கள் சொல்லியது போல நாமறியாத பலரால் கிறிஸ்தவ கீர்த்தனைகள் இந்திய இசை மரபில் கிறிஸ்தவர்கள் பாட வேண்டும் என்பதற்காக இயற்றப்பட்டன. வேத நாயகம் சாஸ்திரியார் அவர்கள் இதை முழு நேர தொழிலாகவும், தஞ்சை அரச கவியாகவும் இருந்ததால் மிகவும் புகழ் பெற்றார் என்பது என் கருத்து. வேத நாயகம் சாஸ்திரியார் அவர்கள் கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகபிரும்மம் அவர்களின் சம காலத்தவர் என்பது செய்தி. சாஸ்திரியார் கிறிஸ்தவராக இருந்த படியால் பரவலான கவனத்தைப் பெற வில்லை என்று சிலர் கூறுவர்.

மாயூரம் வேதநாயகம் பிள்ளை அவர்கள் தமிழ் இலக்கியத்தின் முதல் நாவலான பிரதாப முதலியார் சரித்திரத்தை எழுதியவர். சர்வ சமய சமரச கீர்த்தனைகள் என்ற பெயரில் நூற்றுக்கணக்கான கீர்த்தனைகளை இயற்றி வெளியிட்டவர். அவருடைய படைப்புகளில் கிறிஸ்தவத்தின் பாதிப்பு இருந்தாலும் அவர் ஒன்றே இறைவன் என்ற கொள்கை உடையவராக இருந்திருக்கிறார் என்பதை அறிய முடிகிறது. முனைவர் இளங்கோ அவர்கள் இவர் பற்றி கட்டுரைகள் எழுதி இருப்பதாக ஞாபகம். அவருடைய எல்லையை அவர் கிறிஸ்தவத்துடன் சுருக்கிக் கொள்ள வில்லை.

மதுரையைச் சேர்ந்த சந்தியாகு ஐயரைப் பற்றி அந்த புத்தகத்தில் இருந்ததா என்று அறிய விரும்புகிறேன். என் மனம் கவர்ந்த சந்தியாகு அவர்கள் ஆங்கிலப் பாமாலைகளை அப்படியே தமிழ் இசை மரபில் மிகச் சிறந்த பாடலாக இயற்றுவதில் மிகவும் சிறந்தவர்.

இவைகளெல்லாம் நீங்கள் அறியாத தகவல்களாக இருக்க வாய்ப்பில்லை. என்றாலும் சொல்லத் தோன்றியது. உங்களுக்குப் பிடித்த கிறிஸ்தவ பாடல்களை முன்பு ஒரு பதிவில் வரிசைப் படுத்தி இருந்தீர்கள். அதை மறுபடியும் பகிர்ந்தால் இன்னும் சிறப்பானதாக இருக்கும்.

அற்புதராஜ்
------------------------------------------------------------------
அன்புள்ள அற்புதராஜ்,

சாந்தியாகு அய்யர் பற்றி நூலில் ஒரு கட்டுரை உள்ளது. ஏறத்தாழ முழுமையான நூலாகவே உள்ளது. வேதநாயகம் சாஸ்திரியின் பாடல்களுக்கும் பிறவற்றுக்கும் ஒரு முக்கியமான வேறுபாடுண்டு. அவற்றின் வரிகளும் அந்த ராக அமைப்பும் பாவமும் மிகச்சரியாக பொருந்திச்செல்கின்றன. தியாகராஜர், புரந்தர தாசர் போன்ற சிலரிடமே அதைக் காணமுடிகிறது.

இப்போது என் மனம் கவர்ந்த பாடல் ‘உனையன்றி எனைக்காக்க உலகினில் யார்’ ராகமும் வரிகளும் சரியாக இணையும் ஒரு கலைநிகழ்வு

ஜெ

எழுதியவர் : (9-Dec-18, 4:59 pm)
பார்வை : 146

சிறந்த கட்டுரைகள்

மேலே