தமிழிசையா----------------இசை, வாசகர் கடிதங்கள்
அன்புள்ள ஜெ,
தமிழிசை குறித்த உங்கள் பதிவுகளையும், அதுகுறித்த தொடர்புடைய வாசகர்கள் அளித்த சுட்டிகளையும் படித்துவருகிறேன். இதுகுறித்து எனது ஞானம் மிகவும் கேள்விக்குறியது என்றாலும் இதுகுறித்து உங்களிடம் விரிவாக விவாதிக்க எண்ணுகிறேன். (தமிழ்நாட்டில் வேறு யாரும் இதற்கு எந்த முன்கணிப்புகளும் இல்லாமல் உரையாட தயாராக இல்லை என்பது திண்ணம்.)
தமிழிசை என்ற ஒன்று தனியாக இருந்ததாக நான் ஒப்புக்கொள்ள இயலவில்லை. செம்மொழிக்கான உரைபுகள் போல ஏதேனும் ஒன்று தென்னிந்தியாவில் இருந்திருக்க வாய்ப்பு நிச்சயம் உண்டு. ஆனால் பெரும்பாலான ஆராய்ச்சிகள் இவர்களது முன்கணிப்புகளுக்கான சாட்சிகளை, சான்றுகளை நிறுவும் நோக்கிலேயே இருப்பதால் தமிழ் இசைகுறித்த ஆய்வுகளை நான் இப்போது படிப்பதில்லை. இந்த ஆய்வுகள் இந்து ஞானமரபுகளில், வேதங்களில், யேசுவின் பிறப்பு ஏற்கனவே குறிக்கப்பட்டிருக்கிறது என்ற ஆய்வு அறிக்கைகள் போலவே இருக்கிறது.
பண்டிதர் எழுதிய ஆய்வுகளையும் மற்றதையும் முழுவதும் படித்து அறிந்துகொண்டு பிறகு வருகிறேன். இப்போதைக்கு சொல்வதெல்லாம், தனித்தமிழ் இசை என்ற ஒன்று இருந்ததாக சொல்லப்படுவதை நான் நம்பவில்லை. ஆய்வுகளை படித்த பின் இது முற்றிலும் மாறலாம் எனவே….அப்போதைக்கிப்போதே சொல்லிவைத்தேன்.
-ராம்
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அன்புள்ள ஜெயமோகன்,
நீங்கள் சிலமுறைகள் குறிப்பிட்டு எழுதியிருக்கும் ஆபிரகாம் பண்டிதரின் இந்த ‘கருணாமிர்த சாகரம்’ என்கிற நூல் ஆங்கிலத்தில் வந்துள்ளதா? அதை விடுங்கள் தமிழிசை என்று கூறப்படும் “பண்டைத் தமிழரின் பாரம்பரிய இசை பற்றியே கூட ஆங்கிலத்தில் ஆதாரபூர்வமான நூல்கள் வந்துள்ளனவா? இல்லை என்றே நினைக்கிறேன்.
சமீபத்திய உங்கள் பதிவு ஒன்றில் நீங்கள் இப்படி சொல்கிறீர்கள் -
// அதை ஏற்றுக்கொண்டால் இந்திய இசை என்பதே தொல்தமிழ் இசை என்பதை ஏற்றாகவேண்டும் என்பதனால் அது பெரும்பாலும் புறக்கணிக்கபப்டுகிறது என்று நினைக்கிறேன் //
எந்த கர்நாடக சங்கீதவியல் நிபுணர்கள் (musicologists) இதனை புறக்கணித்திருக்கிறார்கள் என்று சொல்ல முடியுமா?
// கர்நடக சங்கீதத்தின் ராகங்கள் என்ந்த அடிபப்டையில் கணக்குபடுத்தப்பட்டுள்ளன என்பதே அது. சாரங்கதேவரின் ‘சங்கீத ரத்னாகரம்’ முதலிய நூல்களில் இசையின் ராகப்பிரிவினைகள் உள்ளனவே அல்லாமல் அதன் கணிதம் இல்லை என்கிறார் பண்டிதர். //
சாரங்க தேவரின் நூல் காலத்தால் மிகவும் பிற்பட்டது – கி.பி 13 அல்லது 14ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நூல் அது. இந்தக் காலகட்டத்தில், கர்நாடக சங்கீதம், மிக நேர்த்தியடைந்த (sophistication) ஒரு வடிவத்தை நோக்கி வரத் தொடங்கி விட்டது. அதற்கும் முற்பட்ட ‘பிருஹத்தேசி (மாதங்கர் இயற்றியது) என்ற நூலிலேயே ராக வடிவங்கள் கூறப் பட்டு விட்டன.
அதை விட அடிப்படையான சப்தஸ்வரங்கள், ராகம், தாளம் ஆகியவற்றிற்கான கோட்பாடுகள் எங்கே உள்ளன? பரத முனிவரின் “நாட்டிய சாஸ்திரம்” என்ற நூலில். கி.மு 2-ஆம் நூற்றாண்டிலிருந்து கி.;பி முதல் நூற்றாண்டுக்கு உட்பட்டது இந்த நூலின் காலம் என்பது பொதுவாக ஏற்கப் பட்ட கருத்து. கலை ஆய்வாளர் கபிலா வாத்ஸ்யாயன் உள்ளிட்ட அறிஞர்கள் இந்த நூலின் ஒழுங்கை வைத்துப் பார்க்கையில் இது பலரால் அல்ல, ஒருவராலேயே இயற்றப் பட்டிருக்க வேண்டும் என்று கூறுகின்றனர். ஏழு ஸ்வரங்களில் முதலாவதான “ஸ”வுக்கு ஷட்ஜம் (ஆறு ஸ்வரங்களையும் பிறப்பிப்பது) என்ற பெயரை இந்த நூலே அளித்தது. ராகங்களைத் தோற்றுவிக்கும் அடிப்படை அலகான “ஜதி” என்ற கோட்பாட்டையும், ஸ்ருதி, லயம், தாளம் ஆகிய கோட்பாடுகள், இசைக்கும் பாவம் (bhava), ரசம் ஆகியவற்றுக்கும் உள்ள தொடர்பு இவை அனைத்தையும் பரத முனிவரின் நாட்ய சாஸ்திரம் விளக்கி விட்டது. பிறகு ஏற்பட்ட வளர்ச்சி என்பது ராகங்களை அடையாளம் கண்டதும், அட்டவணைப் படுத்தியதுமே.
நாட்ய சாஸ்திரம் போன்று *இலக்கண நூல்* தொல் தமிழில் இல்லை. நமக்குக் கிடைப்பவை இலக்கியங்களில் இசை பற்றி வரும் குறிப்புக்களே. அது போன்ற குறிப்புக்கள் உபநிஷதங்கள், பிராமணங்கள், ராமாயணம், மகாபாரதம் ஆகிய தொல் சம்ஸ்கிருத நூல்களிலும் நிரம்ப உள்ளன.
எனவே தமிழிசையின் தொன்மை பற்றிய கருத்தாக்கங்கள் வேண்டுமென்றே *புறக்கணிக்கப் படுகின்றன* என்று நீங்கள் எழுதுவதற்கு ஆதாரம் இல்லை. சொல்லப் போனால் அவை ஒரு வட்டத்தைத் தாண்டி ”இந்திய இசை” வரை பேசப் படும் அளவுக்கு முன்வைக்கப் படவே இல்லை. இங்கு தமிழிசை பற்றி, அதிலும் குறிப்பாக “அதுவே ஆதி முதல் இசை” என்ற ரீதியில்உரத்துப் பேசுபவர்கள் பலருக்கு இந்திய இசை/கலைப் பாரம்பரியம் பற்றிய முழுமையான பிரக்ஞை இல்லை. கலைச் சொற்கள் மற்றும் அடிப்படை சம்ஸ்கிருத பரிச்சயம் கூட இல்லை, சம்ஸ்கிருத வெறுப்பிலும், ஒரு வகைக் காழ்ப்புணர்ச்சியிலும் ஊறித் திளைத்திருப்பவர்கள் இவர்களில் பெரும்பாலர். ஆய்வாக இல்லாமல் கோஷமாகவே கருத்துக்களை முன்வைப்பவர்கள்.
நீங்களும் இந்த கோஷ எதிரொலி போன்றே எழுதுவது வருத்தமளிக்கிறது,
ஜடாயு
--------------------------
அன்புள்ள ஜடாயு,
முதலில் நான் இந்தவிஷயத்தில் ஒரு நிபுணனோ, குறிப்பிடும் அளவுக்குக் கற்றறிந்தவனோ கூட இல்லை. என் அறிதல்கள் சில நூல்களில் இருந்தும் விஷயமறிந்த நண்பர்களிடம் இருந்தும் பெற்றுக்கொண்டவையே. ஆகவே இலக்கியம், தத்துவம் ஆகிய தளங்களில் நான் பேசுவதுபோல திட்டவட்டமாக எதையும் சொல்லத்தயங்குகிறேன். சில விஷயங்களை மேலோட்டமாக பேசவிரும்புகிறேன்.
சாரங்கதேவரின் சங்கீதரத்னாகரம் என்னும் நூலின் அடிப்படையில்தான் இன்று சங்கீதத்தின் இலக்கணங்கள் பேசப்படுகின்றன. அவர் ஹைதராபாதிலும் பின்னர் தஞ்சைமராட்டியர் அவையிலும் வந்து தங்கியிருந்து கற்றுக்கொண்ட இசை அடிப்படைகளைத்தான் தன் நூலில் தொகுத்து எழுதினார். அவருக்கு அந்த இலக்கணங்களை அளித்தவர்கள் அப்போது இந்த அவைகளில் இருந்த இசைக்கலைஞர்கள்.
நீங்கள் சொல்வதுபோல அப்போது கர்நாடக சங்கீதம் – அல்லது இந்திய சங்கீதம் முழுமையான வளர்ச்சியுடனும் பொலிவுடனும் இருக்கவில்லை. அது பலவகையில் திரிந்தும் சிதறியும்தான் இருந்தது. அக்காலகட்ட வரலாற்றுச் சூழலை வைத்தே இதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். வட இந்தியா பன்னிரண்டாம் நூற்றாண்டுமுதல் கடுமையான அன்னிய ஆக்ரமிப்புகளை சந்தித்தது. டெல்லியில் சுல்தான்களின் ஆட்சி ஆரம்பித்தது. இந்தியாவில் இருந்த இந்து,சமண அரசுகள் பெரும்பாலும் சிதைந்தழிந்தன. நாலந்தா உட்பட பௌத்தமையங்கள் அழிக்கப்படன. சுல்தான்களின் ஆட்சி இந்தியக்கலைகளுக்கும் சிந்தனைக்கும் எதிரானதாக இருந்தது.
தென்னிந்தியாவில் 1310ல் டெல்லிசுல்தான்களின் தளபதியான மாலிக் கா·பூரின் படையெடுப்பு நடந்து இங்கிருந்த அரசுகள் அழிந்தன. கோயில்கள் சூறையாடப்பட்டு கற்குவியல்களாக ஆயின. சிதம்பரம்,ஸ்ரீரங்கம்,மதுரை போன்றகோயில்கள் எல்லாமே அழிக்கப்பட்டு தமிழகம் பொலிவிழந்தது. கோயில்களைச் சார்ந்து இயங்கிய கலைகள் ஆதரவிழந்து சிதைந்தன. தமிழகத்தின் கலைகளுக்கு அது இரண்டாவது இருண்டகாலகட்டம்
அதன்பின் இருநூறுவருடம் கழிந்து விஜயநகரம் உருவாகி மீண்டும் தென்னிந்தியாவில் கோயில்கள் புத்துயிர்கொண்டன. 1509ல் மதுரையிலும் பின் தஞ்சையிலும் நாயக்கர் ஆட்சி உருவானது. அதன்பின்னர் தஞ்சை மராட்டியர் கைக்குச் சென்றது. இவ்வாறாக, சிலநூற்றாண்டு இடைவெளி தாண்டி, மீண்டும் தென்னிந்தியாவில் கோயில்கள் மீண்டும் புத்துயிர்கொண்டன. கோயில்களையும் அரசசபைகளையும் சார்ந்து மரபிசை மீண்டும் துளிர்க்க ஆரம்பித்தது.
அந்த சிதைவின் காலகட்டத்தில்தான் சாரங்கதேவர் அவரது நூலை எழுதினார். மிகவிரிவாகப் பயணம்செய்து அன்றிருந்த உதிரி அரசபைப் பாடகர்களைச் சந்தித்து தன் இசையறிவைபெருக்கிக் கொண்டு அதனடிப்படையில் தன் நூலை உருவாக்கினார். உண்மையில் அதற்குப்பின்னர்தான் மெல்லமெல்ல தென்னிந்தியஇசை மலர்ச்சி கண்டது. சாரங்கதேவர் உருவாக்கிய இசையிலக்கணம் அதற்கு உதவியது. தஞ்சைமராட்டியரின் அரசசபை தென்னிந்திய இசை வளர்ச்சிபெறுவதற்கான களமாக அமைந்தது. நாம் இன்று காணும் கர்நாடக சங்கீதம் என்பது அவர்களின் காலகட்டத்தில், பதினாறாம் நூற்றாண்டுக்குப் பின்னர் படிப்படியாக உருவானதேயாகும்.
வடநாட்டில் சுல்தான்களின் ஆட்சிக்குப்பின்னர் மொகலாயர் ஆட்சி உருவானபோது மீண்டும் இசை மலர்ச்சி அடைந்தது. ஹ¤மாயூன் இசையில் ஆர்வம் கொண்டவராக இருந்தார். துருபத் சங்கீதம் என்றபேரில் கைவிடப்பட்ட கோயில்களில் முடங்கி ஆதரிப்பார் இல்லாமலிருந்த இந்திய இசையை அவர் தன் சபைக்குக் கொண்டுவந்தார். அதனுடன் ஆப்கானிய இசை கலந்தது. விளைவாக இந்துஸ்தானி இசை உருவானது. ஷாஜகானின் அரச சபை அதன் பொற்காலத்தை உருவாக்கியது. பொறுமை இழந்த ஔரங்கஜீப் அதை அரசபையில் இருந்து துரத்தினார்.
இந்துஸ்தானி இசைக்கென சிறந்த இசை இலக்கணமோ முக்கியமான நூல்களோ இல்லை என்றுதான் சொல்கிறார்கள். அது வெவ்வேறு குருகுல அமைப்புகள் [கரானாக்கள்] மூலம் கற்றுக்கொள்ளப்பட்டு கைமாறுகிறது என்கிறார்கள்.
சொன்னதை மீண்டும் சொல்கிறேன். தமிழகத்தின் இசை மரபைப்பற்றிய விவாதத்தில் இரண்டு ‘இருண்ட’ காலகட்டங்கள் பேசப்படுகின்றன. முதல் காலகட்டம் களப்பிரர்களுடையது. அவர்கள் தத்துவம், மருத்துவம் போன்ற துறைகளில் மறுமலர்ச்சியை உருவாக்கினார்கள். இசைக்கு எதிரானவர்களாக இருந்தார்கள். கோயில்கள் பொதுவாக கைவிடப்பட்டன. தமிழ்நாட்டின் இசையின் தொடர்ச்சி அறுபட்டது அப்போதுதான்.
அதன்பின்னர் அந்த இசை மரபு ஆழ்வார்களாலும் நாயன்மார்களாலும் மீட்டு மறு ஆக்கம்செய்யப்பட்டது. இன்றும் ஓதுவார் மரபாக அதன் நீட்சி உள்ளது. அந்த மரபு மாலிக் காபூருக்குப் பின் நாயக்கர் காலம் வரையிலான ஒன்றரை நூற்றாண்டில் மீண்டும் அறுபட்டது. அதை மீட்டுருவாக்கம்செய்தவர் சாரங்கதேவர். அப்போது அவர் அவர் அறிந்தவகையில், வடஇந்திய கோயில்களில் இருந்த இசையின் கலைச்சொற்களைக் கொண்டு அதை அமைத்தார். அதுவே இன்றும் தொடர்கிறது.
நான் இதிகாசங்களையும் காளிதாச காவியங்களையும் கவனித்து வாசித்திருக்கிறேன். நான் அறிந்தவரையில் சிலப்பதிகாரம் போன்றவற்றில் இருப்பது போல.இசையின் இலக்கணங்கள் அவற்றில் பேசப்படவில்லை. அவற்றில் பேசப்பட்டிருக்கும் இசை chanting என்னும் வகைப்பட்டது என நான் நினைக்கிறேன். ஒத்திசைவுள்ள பாட்டுமுறைதான் அது. அதற்கு சந்தஸ் போன்ற உச்சரிப்பு, ஒலியிசைவு சார்ந்த பற்பல இலக்கணங்கள் உள்ளன. அதன் மூலவடிவம் சாமவேதம் சார்ந்தது.
இந்திய இசையின் தனிச்சிறப்பான அம்சமே அதன் ஆலாபனை என்னும் இயல்புதான். அந்த ஆலாபனைசார்ந்த இசைக்கான ராக இலக்கணங்களும், அவற்றுக்குரிய துணைக்கருவிகளின் இலக்கணங்களும் தமிழ் நூல்களிலேயே துல்லியமாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. பல இசைஇலக்கண நூல்கள் இருந்திருக்கின்றன. சிலப்பதிகாரமே அவற்றைப்பற்றிய குறிப்புகளை அளிக்கிறது. இந்த இசையின் ஊற்றுமுகம் தென்னகமாக இருக்கலாமெனக் கொள்ள இவையே போதுமானது. இந்த இசை இந்தியாவெங்கும் பரவியிருந்தது என்றே கொள்ளவேண்யிருக்கிறது.
பரதமுனிவரின் நாட்டிய சாஸ்திரம் நான் கவனித்து படித்த ஒன்றல்ல. விஷ்ணுபுரம் நாவலுக்காக ஒரு வாசிப்பு மட்டுமே கொடுத்திருக்கிறேன். அது ராகம்-தாளம்-பாவங்கள் சார்ந்து ஓரளவுக்கு தகவல்களை அளிக்கிறது. நாட்டியத்துக்குரிய ரசங்களை [மெய்ப்பாடுகளை] அது பேசுவதுடன் அதற்கான இசையையும் விவரிக்கிறது. ஆலாபனை என்னும் தனித்தன்மைகளை அது பேசியதாகத் தெரியவில்லை.
தமிழிசை ஆய்வாளரான ஆபிரகாம் பண்டிதர் தன்னுடைய ராகங்கள் குறித்த கோட்பாட்டை சிலப்பதிகாரம் முதலிய நூல்களில் இருந்து உருவாக்கிக் கொண்டு ராகங்களை உருவாக்கும் கணிதமுறையை வகுக்கிறார். இந்த ராகபுடம் என்னும் முறையை இசையறிந்த நீங்கள் கவனிக்க வேண்டும் என்று எண்ணுகிறேன். பரதமுனிவரின் நூலையும் சாரங்கதேவரின் நூலையும் பலநூறு பக்கங்களுக்கு பண்டிதர் விரிவாக ஆராய்கிறார். கிட்டத்தட 1000 பக்கங்கள் கொண்ட அந்நூலை வாசித்து ஆராய்ந்தபின்னர்தான் நீங்கள் விரிவான விவாதங்களுக்க்குள் செல்ல முடியும். அதாவது நீங்கள் விவாதிக்க வேண்டியது அந்த நூலிடம்.
இப்படி ஒரு இலக்கணம் இன்றுவரை இந்துஸ்தானி இசைக்கு உருவாக்கப்படவில்லை என்பதே நான் அறிந்தது. ஆபிரகாம் பண்டிதர் பரோடாவில் நிகழ்ந்த அகில இந்தியமாநாட்டில் கலந்துகொண்டு தன் தரப்பை முன்வைத்திருக்கிறார். அவரது நூலின் பெரும்பகுதி ஆங்கிலத்தில் அவர் காலகட்டத்திலேயே வெளிவந்துவிட்டது. அவரது மைந்தர்களும் அதன் பல பகுதிகளை ஆங்கிலத்தில் கொண்டுவந்திருக்கிறார்கள். தமிழிசை இலக்கணம் குறித்து ஆங்கிலத்தில் இன்று ஏராளமான நூல்கள் கிடைக்கின்றன
ஆனால் வட இந்தியாவில் இந்திய இசைகுறித்து எழுதப்பட்ட எந்த ஒரு நூலிலும் ஆபிரகாம் பண்டிதரைப்பற்றியோ அல்லது அவரது கருத்தைப்பற்றியோ எதையுமே காணமுடியாது. ஏன் தமிழ்நாட்டைச்சேர்ந்த பத்மாசுப்ரமணியம் நாட்டியம் இசை பற்றியெல்லாம் ஏராளமாக ஆய்வுநூல்களை எழுதியிருக்கிறார். வழக்கமான ‘சாமவேதம்-பரதமுனிவர்- சாரங்கதேவர்’ இதுவே அவரது பாதையாக இருக்கிறது. ஒருமுறை நானே மலையாள மனோரமா இயர்புக்குக்காக பரணி என்பவர் எழுதிய தமிழ்நாட்டு இசை பற்றிய ஒரு கட்டுரையை மொழியாக்கம் செய்தேன் – ஆபிரகாம் பண்டிதர் பற்றியோ தமிழ் மரபைப்பற்றியோ ஒரு வரிகூட இல்லை அதில். நம்முடைய இசைக்கல்லூரிகளின் பாடநூல்களில் எதிலும் ஆபிரகாம் பண்டிதரைப்பற்றி எந்தக் குறிப்பும் கிடையாது. நான் நான்கு பாடநூல்களை பார்த்திருக்கிறேன்.
ஒருவேளை இந்திய இசையின் ஊற்றுக்கண்ணே சாமவேதமாக இருக்கலாம். ஆனால் ஒரு மாற்றுத்தரப்பு முன்வைக்கப்பட்டிருக்கிறதல்லவா? அதைப்பற்றி பொருட்படுத்தி விவாதிக்கலாம். அல்லது அதற்கு ஒரு மறுப்பாவது சொல்லலாம் அல்லவா? அலட்சியமான ஒரு போக்கு மட்டுமே காணக்கிடைக்கிறது.
நீங்கள் சொல்வது உண்மை. தமிழியக்கம் சார்ந்து பேசுபவர்கள் எல்லாவற்றையும் வெறுப்பில் இருந்து உருவாக்கிக் கொள்கிறார்கள். அனைத்தையுமே வெறுப்பைப் பரப்புவதற்கான கருவிகளாக ஆக்குகிறார்கள். எதையுமே ஆய்வுநேர்மையுடன் ,சமநிலையுடன், உண்மையான கல்விப்பின்புலத்துடன் பேசுவதில்லை. கோஷமிடுவதே அவர்களின் வழியாக இருக்கிறது.
ஆனால் அதற்கு நேர் எதிர்தரப்பில் — பிராமணவாத நோக்கு கொண்டவர்களைத்தான் சொல்கிறேன்- அதற்கு இணையான மூடத்தனமும் பிறரை துச்சமாக எண்ணும் அலட்சியமும் இருக்கிறது. வரலாற்றைப் பற்றிய கவலையே இல்லாமல் தங்கள் பண்பாட்டுமேன்மைகளை கற்பிதம் செய்துகொண்டு அதையே மீண்டும் மீண்டும் முன்வைக்கும் போக்கு இருக்கிறது. வெறுப்புக்கு எதிரான வெறுப்பாக இருதரப்பையும் நான் காண்கிறேன். இரண்டுமே உண்மையான பண்பாட்டுப் பரிமாற்றத்துக்கு உகந்தவை அல்ல.
இந்த மண்ணின் பண்பாடு ஏதேனும் ஒரு புனித புள்ளியில் இருந்து ஊற்றெடுத்தது அல்ல. இந்த மண் முழுக்க பலகோடி மக்கள் பல்லாயிரம் வருடங்களாக வாழ்ந்து உருவாக்கிய பண்பாட்டுத்தரப்புகள் ஒன்றுடன் ஒன்று உரையாடி ஒன்றை ஒன்று வளர்த்து உருவானது அது. ஏதேனும் ஒரு புள்ளியில் அதை குறுக்கும் எந்த முயற்சியும் -அது வடக்காக இருந்தாலும் தெற்காக இருந்தாலும்– ஆபத்தானதே
ஜெ
-----------------------------------