ஈசனைச் சேர்தல் இனிய உயிர்க்கணி – அணியறுபது 56

இன்னிசை வெண்பா

ஆசை யறுதல் அறிவுக்(கு) அரியவணி
பாசம் அறுதல் பவமறுதற்(கு) ஆனவணி;
ஈசனைச் சேர்தல் இனிய உயிர்க்கணி;
யோசனை ஓர்வுக் கணி. 56

- அணியறுபது,
- கவிராஜ பண்டிதர் செகவீர பாண்டியனார்

பொருளுரை:

ஆசையை அழித்து ஒழித்தலே அறிவுக்கு அரிய அழகு. உலக பாசத்தை ஒருவி விடுதலே பிறவி அறுதற்கு அழகு: ஈசனைச் சேர்தலே சீவனுக்கு அழகு; கூரிய யோசனையே சிந்தித்து உணர்வதற்குச் சீரிய அழகு ஆகும். ஓர்வு - ஓர்ந்து உணரும் அறிவு.

அல்லல் உறாமல் பேணி உயிர்க்கு நல்ல சுகத்தை ஆற்றி வருவதே தெள்ளிய அறிவாம். கொடிய துயரங்களுக்கெல்லாம் ஆசையே நெடிய நிலையமாதலால் அதனை அடியோடு அறுத்து ஒழித்தாலன்றி உயிர் துயர் நீங்கி உயர்வுறாது.

வெண்டளை பயிலும் கலிவிருத்தம்

ஆசை யறுமின்கள்! ஆசை அறுமின்கள்!
ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள்
ஆசை படப்பட ஆய்வரும் துன்பங்கள்
ஆசை விடவிட ஆனந்தம் ஆமாமே. - திருமந்திரம்

கலி விருத்தம்
(விளம் விளம் மா கூவிளம்)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் வரலாம்)
(மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில்+ஒற்றோ தான் வரும். நெடில், நெடில்+ஒற்று வராது)

ஆசையுட் பட்டவர் அல்லற் பட்டவர்;
ஆசையுட் பட்டவர் அளற்றில் பட்டவர்;
ஆசையுட் பட்டவர் அயர்வில் பட்டவர்.;
ஆசையுட் பட்டவர் அரங்கப் பட்டவர். 1

ஆசையில் லார்களே அறவர் மேலவர்;
ஆசையில் லார்களே அருந்த வத்தினர்;
ஆசையில் லார்களே அருட்க லப்பினர்;
ஆசையில் லார்களே அரிய முத்தர்கள். 2 காசி ரகசியம்

ஆசையுற்ற போது சீவர்கள் படுகிற அவலத் துயர்களையும், அது அற்றபோது அவர்கள் அடைகின்ற ஆனந்த நிலைகளையும் இவை வரைந்து காட்டியுள்ளன.

பாசம் - உயிர் வாசனையான பற்று. இது அற்றபொழுதான் அந்த உயிர் பிறவித் துன்பங்கள் நீங்கிப் பேரின்பம் பெறுகின்றது.

நேரிசை வெண்பா

பாசம் படிந்து வருமளவும் சீவன்தான்
நீசம் படிந்து நிலைகுலைவன் - பாசம்
ஒழிந்த பொழுதே உயர்ஈச னாகி
எழுந்து திகழ்வன் எதிர்.

உயிர் துயராய் இழிவுறுவதும், உயர்வாய் ஒளி பெறுவதும் எதனாலென்பதை இதனால் உணர்ந்து கொள்ளலாம்.

உலக பாசத்தால் பலவகையான ஆசைகள் படர்ந்து தொடர்ந்து வருகின்றன; அந்த அகப்பற்று ஒழியின் எவ்வழியும் இன்பமே பெருகி வருகிறது.

‘பாசபந்தம் உடையவன் சீவன்; அதினின்று விடுபட்டவன் சதாசிவன்’ என்னும் இது இங்கே அறியவுரியது. சீவன் சிவன் ஆவது தெரியநின்றது.

மாசு நீங்கிய அளவே ஆன்மா தேசுமிகப் பெறுகிறது. உரிய பரமும் உயிரும் உணர வந்தன.

ஈசனிடமிருந்தே சீவன் பிரிந்து வந்துள்ளான். அந்தப் பிரிவினால் அளவிடலரிய துன்பங்களை அடைய நேர்ந்தான்: நேர்ந்த நீசத் துயரங்களுக்கெல்லாம் மூல காரணம் பாசம் என்றே தெளிந்தான்: அப்பற்றை முற்றும் ஒழித்தான்; பழைய பரமானந்த நிலையை அடைந்தான். முத்தி, வீடு என்பன எல்லாம் இந்த விடுதலை நிலையையே குறித்து நிற்கின்றன.

எழுசீர் விருத்தம்
(விளம் மா விளம் மா / விளம் விளம் மா)

பாசவேர் அறுக்கும் பழம்பொருள் தன்னைப்
பற்றுமா(று) அடியனேற்(கு) அருளிப்
பூசனை யுகத்தென் சிந்தையுட் புகுந்து
பூங்கழல் காட்டிய பொருளே!
தேசுடை விளக்கே செழுஞ்சுடர் மூர்த்தி
செல்வமே! சிவபெரு மானே!
ஈசனே! உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்.
எங்கெழுந் தருளுவது இனியே? - திருவாசகம்.

பாசம் தீர்ந்து ஈசனைச் சேர்ந்து மாணிக்கவாசகர் இன்பம் தோய்ந்துள்ள நிலையை இதனால் அறிந்து கொள்கிறோம். பரம புனிதனை இறைவன் அருள் புரிய வேண்டின் மனிதன் உள்ளம் பரிசுத்தமாக வேண்டும். ஆன போதே அதிசய இன்பமாகிறது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (14-Dec-18, 11:46 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 66

மேலே