மூல முதற் பரம்பொருள்
( ஆன்மிக அன்பர்களின் மனதை புண்படுத்தும் நோக்கத்தோடு இக்கட்டுரையை எழுதவில்லை.
ஆழ்ந்த சிந்தனைக்கு ஒரு சிறு தீப்பொறியாக எழுதுகிறேன் )
சமீப காலங்களில் சில ஆன்மிக புத்தகங்களைப் படிக்கும் வாய்ப்புகள் கிடைக்கப்பெற்றேன்.
கிருஷ்ணா பக்தி இயக்கம் எங்கள் கிராமத்தில் நடத்திவரும் பஜனைகளை கேட்கப்பெற்றேன்.
இஸ்கான் வெளியிடும் ஆன்மீக மாத இதழை இன்று படிக்கப்பெற்றேன்.
கிருஷ்ண அமுதம் என்ற தலைப்பில் வெளியான அந்த 36 பக்க புத்தக அட்டையில்,
" எங்கெல்லாம் கிருஷ்ணரும் அர்ஜுனனும் இருக்கின்றனரோ அங்கெல்லாம் செல்வமும், வெற்றியும், வலிமையும், நீதியும் நிலைத்திருக்கும்!
"- பகவத் கீதை 18.78 என்ற வசனம் பதிக்கப்பட்டு இருந்தது.
அதை படித்ததும் என் சிந்தனைக்குத் தீனி கிடைத்துவிட்டதாக எண்ணினேன்.
ஏனெனில், கிருஷ்ணர் கீதை போதித்த கடவுளாக மக்களால் கருதப்படுவர்.
அதோடு கிருஷ்ணரின் நண்பரான அர்ஜுனன் சிறந்த வில்லாளியாகக் கருதப்படுகிறார்.
அதேவேளையில் என் சிந்தனையில் எழுந்த கேள்வி, " கிருஷ்ணர் என்ற பெயர் கொண்ட நபரும், அர்ஜுனன் என்ற பெயர் கொண்ட நபரும் நண்பர்களாக ஒரே இடத்தில் இருந்தால் அங்கு செல்வமும், வெற்றியும், வலிமையும், நீதியும் நிலைத்திருக்குமா? ",என்பதாகும்.
தண்ணீர் நாவறட்சியைப் போக்கி தாகத்தை தணியச் செய்யவல்லது.
அதேவேளையில்
கடல் நீரில் ஒரு அரைமணி நேரத்திற்கு மேல் நீந்தி குளித்தாலே உடலில் உப்பின் அளவு அதிகமாக கால், கை செயலிழக்கத் தொடங்கி விடுகின்றன. கிறக்கமாக வர மயக்கம் ஏற்பட்டுவிடுகிறது.
இதனால் மரணம் கூட சாத்தியமாகியிருக்கிறது. அப்படிப்பட்ட கடல்நீரைப் பருகி உயிர்வாழ இயலாது.
அசுத்தமான சாக்கடை நீரை உண்டும் வாழ இயலாது.
எல்லா இடங்களிலும் தண்ணீர் இருந்தாலும் தூய்மை இருந்தால் மட்டுமே உண்ண உகந்ததாக ஆரோக்கியமானதாக இருக்கும்.
ஆக கிருஷ்ணர், அர்ஜுனன் என்ற பெயர்களில் எந்த விதமான நலன்களும் இல்லை.
ஏதோ ஒரு பெயரை உச்சரிப்பதினால் பலன்கள் கிட்டுவதில்லை.
அதன் முழு தன்மையையும் அறிந்து அந்தத் தன்மையின் மேன்மையைக் கண்டு உணர்ந்த, தனது தன்மையாக்கினால் பலன்கள் கிட்டத்துவங்கி விடுகிறது.
நீங்கள் இவரை சரணடைந்தால் இவ்வளவு லாபம் உண்டென்று ஒரு ஆன்மிக குரு வழிகாட்டானால் அது வியாபாரம் தானே தவிர பக்தி வழிகாட்டல் அல்ல.
ஆன்மிகம் என்பது ஆன்மவியல் வழியான வழிகாட்டல். மாறாக புறவழியிலான வழிகாட்டல்கள், பெயர்களால் ஏற்படும் குழப்பங்களில் மத வியாபாரம் நன்றாகவே நடக்கிறது.
குரு சிஷ்யப் பரம்பரை என்று வழிகாட்டும் படி அறிவுரை வழங்குகிறது இஷ்கான் வெளியிட்ட அந்த மாத இதழ்.
குரு என்றால் யார்?
சிஷ்யன் என்பவன் யார்?
குரு சரியாக வழிகாட்டினால் சிஷ்யன் சரியாக வாழ்வான்.
ஆனால், இந்த உலகில் சரியான வழிகாட்டல்கள் இல்லை.
குரு ஒன்றை சொல்கிறார்.
சிஷ்யன் வேறொன்றைக் கருதுகிறான்.
காலப்போக்கில் குருவாக மாறிய சிஷ்யன் பரப்பும் கொள்கைகளில் ஏகப்பட்ட குளறுபடிகள்,
குழப்பங்கள்.
சமானிய மக்கள் அன்றாட உணவிற்காக, உடைக்காக, ஆடம்பர வசதிகளுக்காக ஓடிக் கொண்டிருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டு, " எங்கள் கடவுளை வணங்குங்கள். நீங்கள் மேன்மை அடைவீர்கள்.
செல்வம் பெருகும். ",என்ற ஆசை வார்த்தைகளை உதிர்க்கிறார்கள்.
நம்பிய மக்களும் தினமும் பஜனை, பிரார்த்தனை செய்யத் தொடங்கினார்கள்.
ஆனால் முன்னேற்றம் அடைந்தார்களா? என்றால் இல்லை.
" கடவுளே! எனக்கு அதை கொடு. இதை செய்து கொடு. நான் நினைத்தது நடக்க வேண்டும். ". என்ற எதிர்பார்ப்போடு,
பிரார்த்தனை செய்தால் அதில் ஆத்ம விசவாசம் இருக்கவா போகிறது?
நாம் வாழ்வதற்கு தேவையான அனைத்து சூழல்களையும் உருவாக்கித் தந்து நம்மை தொடர்ந்து வாழ வைக்கிற, செயல்பட செய்கின்ற முழு முதற்பரம்பொருளிடம், " இன்னும் அது வேண்டும்! இது வேண்டும்!! ", என்று தொல்லை தருவதா பிரார்த்தனை?
செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமையானால் போதும் பக்கத்து வடகாசியம்மன் கோவிலில் பாடல்கள் ஒலிக்கத் தொடங்கிவிடும்.
மற்ற நாட்களில் கேட்பாரற்று கிடைக்கும்.
" மாதங்களில் நான் மார்கழி. ",என்று பகவத்கீதையில் கிருஷ்ணர் கூறியதாக கூறும் அந்த மாத இதழில் மார்கழியில் கிருஷ்ணனை வழிபடுதல் உகந்தது என்கிறது.
அப்படியானால் மற்ற மாதங்கள் கிருஷ்ணனுக்குப் பகைமையான மாதங்களா?
மார்கழி மாதங்களில் பனி வீசும்.
எங்கள் கிராமத்தில் பெண்கள் 4 நான்கு மணிக்கெல்லாம் எழுந்து குளித்துவிட்டு மாற்றுடையணிந்து சில்வர் குடத்தில் குளிந்த நீரை நிரப்பிக் கொண்டு பிள்ளையார் கோவிலுக்குச் செல்வார்கள்.
பிள்ளையார் சிலையின் தலையில் அந்த குளிந்த நீரை ஊற்றி விழுந்து வணங்கி மூன்று விக்கி போட்டு நெற்றியில் மூன்று குட்டுகளிட்டு அங்குள்ள கோவில் மணியை ஒலிக்கச் செய்வர்.
சில சமயங்களில் யார் முதலில் வந்து பிள்ளையாருக்கு நீருற்றி கோவில் மணியை இசைக்கிறார்கள் என்ற போட்டி நிலவும்.
அந்த மாதத்தில் மட்டும் பிள்ளையார் மிக குளுமையாக இருப்பார்.
சிறு வயதில் என்னை எழுப்பி குளிப்பாட்டி நான்கு மணிக்கெல்லாம் அம்மா அந்த பிள்ளையார் கோவிலுக்கு கூட்டிட்டு போவார்கள்.
வெந்நீரில் குளித்த எனக்கே உடல் குளிர்தாங்க முடியாது.
ஆனால் குளிர்ந்த நீரை தன்மேல் ஊற்ற இந்த பிள்ளையார் எப்படி தாங்குகிறார்?
என்று வியப்பாகப் பார்த்திருக்கிறேன்.
சில சமயங்களில் இந்த பிள்ளையார் யார் என்ன செய்தாலும் பார்த்துக் கொண்டு சும்மா இருக்கிறாரே.
ஒரு வேளை அதிகப்படியான குளிர்ந்த நீரை எல்லாரும் ஊற்றியதில் ஜன்னி வந்து இறந்திருப்பாரோ? என்றெல்லாம் எண்ணியிருக்கிறான்.
அம்மாவின் ஆன்மிகம் கோவில் கோவிலாக சுற்றிவர அப்பாவின் ஆன்மிகம் பல வழிமுறைகளைக் காட்டி மனதில் ஆன்மத் தேடலை விதைத்தது.
அந்தத் தேடலின் அடித்தளத்தில் பல சுவாராஷ்யமான விடயங்களும் அறியப்பெற்றேன்.
மேலும் எனக்குக் கிடைக்கப்பட்ட விடயங்களைப் பற்றி
இன்னும் ஆழமான சிந்தினைகளும் இக்கட்டுரையின் தொடர்ச்சியாக பகுதியில் உங்களை சந்திக்கிறேன்.
(தொடரும்...)