பச்சை அழகி

சிறுவிழியில் சிறை வைத்த என்னவளே
சிந்தையெங்கும் நீ நிறைந்தாய் மன்னவளே!

இது விழியா இல்லை என் சாவிற்கான வழியா!

நீ குளிரூட்டும் பனியா இல்லை
பூஞ்சோலை கனியா!
ஈர்ப்பு விசைப் பிறப்பிடம் அவள் கண்களா
இல்லை அவள் முகம் தான்
முழுநாள் திங்களா!

முகத்தின் மையம் விண்மீன் ஒட்டியதோ
அதனாலே எனக்கு காதல் பற்றியதோ!

செவி ஆடும் தங்கமின்னல் தோட்டம்
கண்டதும் ஏனோ என்னுள்ளே ஆட்டம்!

நெற்றி மைய சின்ன மதி
நெஞ்சம் இழுக்க,என்னே விதி!
மதிமேலே செந்நிறக்கோடு
மனம் தொலையும் மாயக் காடு!

பொலிவாடும் அழகாடும் கார்மேகக் குழல்
மனம் வாடும் மணம் ஓங்கும் தாழம்பூ மடல்!

இதழ் மறைந்த புன் சிரிப்பு
அதுவே அவளின் தனிச் சிறப்பு!

காதலில் முத்தம் சுவை கூட்டும்
கழுத்தின் சிறு அணி எழில் ஏற்றும்!

வெண்மேகம் நிறம் மாறி
கன்னம் இரண்டாய் உருமாறி
அவளுக்கே அழகூட்டும் ஆசைக்கே வழிகாட்டும்!

பச்சை ஆடை பைம்பொழில் ஓடை
அணிந்து வர
வாட்டி விடும் வாடை!

சோலை போகாதே பெண்ணே!என் கண்ணே!
பூவென வண்டு சூழும் பின்,தான் ஏனென சோலையே வீழும்!

எழுதியவர் : செல்வா முத்துச்சாமி (16-Dec-18, 9:31 am)
Tanglish : pachchai azhagi
பார்வை : 737

மேலே