உணவு
பசி தன் வயிற்றைக்கிள்ள, அவன் தன் இரு சக்கர வாகனத்தின் ஆக்சிலேட்டரை திருகி அதன் வேகத்தை அதிகரித்தான். மின்னலாய் பறந்த வண்டி சில நொடிகளிலேயே இன்னலாய் வந்த போக்குவரத்து சிகப்பு சிக்னலால் நின்றது. நிற்கும் ஒவ்வொரு நொடியும் பசியால் வயிற்றில் இறங்கும் இடியாய் தோன்ற, பச்சை அம்பு சிக்னல் விளக்கு எரிந்த மறுகணம் வில்லிலிருந்து பாய்ந்த அம்பாய் பறந்தான். நகரின் பெயர்பெற்ற உணவகங்களின் ஒன்றை நோக்கி சென்ற அவன், வீட்டில் உணவுக்காக் பசியோடு காத்திருப்போரையும் எண்ணியவாறே தன் வண்டியை மேலும் வேகப்படுத்தினான். பல இடங்களில் போக்குவரத்து இடையூறுகளை கடந்து அந்த குறிப்பிட்ட உணவகம் வந்தடைந்தவன் உள்ளே சென்று 4 பிரியாணி, 2 சிக்கன் 65 பார்சலாக பெற்றுக்கொண்டான்.
பசியோடு பிரியாணியின் மணமும் சேர்ந்து அவனை வீட்டை நோக்கி விரட்டியது. ஒரு வழியாய் வீட்டை அடைந்தவன், ஆர்டரை சரி பார்த்தவாறே கதவை தட்டினான். கதவை திறந்து வெளிவந்த பெண், தான் ஆன்லைனில் ஆர்டர் செய்த பார்சலை சரி பார்த்துவிட்டு பணம் கொடுத்து பெற்றுக்கொண்டபின் அதற்க்குரிய பணத்தை அவனிடம் தந்து கதவை மூடினாள்.
வீடுகளுக்கு உணவுகளை டெலிவரி செய்பவனாக பணியாற்றும் இவன், வெளியில் வந்து பசியாற ஒரு நிழல் தேடி ஒதுங்கினான். தன் வீட்டிலிருந்து கொண்டு வந்த டப்பாவை திறந்து அதிலிருந்த பழைய சோற்றை உண்ணத்தொடங்கினான், இரண்டு வாய் உண்ணுவதற்குள் செல்போன் ஒலிக்க, அடுத்த ஆன்லைன் ஆர்டர், 6 பரோட்டா 1 பட்டர் சிக்கன்.
தன் பசி அடங்கும் முன், டப்பாவை அடைத்த அவன் மீண்டும் வண்டியின் ஆக்சிலேட்டரை திருகினான் தன் பசித்த வயிறுடன் அடுத்த ஆர்டரை டெலிவரி செய்ய!
PG வெங்கடேஷ்