சிறுதுளியின் மிச்சம்

அல்லிடைக் காத்த எனதாருயிர் நண்பா...! யான்
சொல்லிடத் தகுமோ...! நின் சோதிமிக்க நட்பதனை;
உள்ளிடைக் கொண்ட உணர்வெல்லாம், எந்தன்
ஊனிடைக் கலந்து உயிராய் நிற்பதன்ரோ...!

புல்லிடைப் பிறக்கின்ற பனித்துளியும் பெரிதாமோ
பூவிடைப் பிறக்கின்ற தேன்துளியும் பெரிதாமோ
கல்லிடைப் பிறக்கின்ற நீர்த்துளியும் பெரிதாமோ
நம்மிடைப் பிறக்கின்ற நட்பன்ரோ பெரிதினும்பெரிது

மண்ணிடைப் பிறந்த உயிரெல்லாம், உந்தன்
மாதகு நட்பினைப் பெற்றிடுமோ; எந்தன்
கண்ணிடைக் கலந்த கருமணியோ...! நீஎன்
கவியிடைக் கலந்த தமிழ் மொழியோ...!

பண்ணிடைப் பிறந்த இசைகூட, உந்தன்
பாசமொழி போல்வருமோ நேசமதை வீசிடுமோ
என்னிடைக் கலந்தாயடா என் தோழா...!
எழுபிறப்பும் மறவேனடா எழில் பாலா...!

ஆழியதன் ஆழமதை அளப்பாரும் உளராம்;
வானமதன் நீளமதை அளப்பாரும் உளராம்;
ஊழிநாள் அதைக்கூட உரைப்பாரும் உளராம்;
யாம்கொண்ட நட்பளக்க யார் உளரோ...?

எந்தையுமாய் இருப்பானே; என்தாயும் அவன்தானே;
சிந்தையிலும் மறவேனே; சிரமேற் கொள்வேனே;
முந்தை பிறப்பினில் மூண்ட உறவதனை, இன்றும்
தந்த இறைவா என்றும் நிலைத்திருக்க வரம்தா

கடலாகிப்போன எங்கள் காவிய நட்பதனைக்
கவியாக்கிச் சொல்லவந்தேன், ஏனோ
உணர்வாலே மூழ்கி நின்றேன் ; இவையாவும்
சிறுதுளியின் மிச்சமன்றோ அதை
இனிசொல்ல தமிழினிலே வார்தையுண்டோ...?

எழுதியவர் : வேத்தகன் (18-Dec-18, 8:44 pm)
பார்வை : 428

மேலே