டிசம்பர் கொண்டாட்டம் – Part 2-----------------------------------------முத்துச்சிதறல்
மணி 12த் தொட்டுக்கொண்டிருந்தது. அந்த சதுர வடிவ அறையிலிருந்த அடர் சிவப்பு நிற இருக்கைகள் மொத்தமாக நிரம்பியிருந்தது. அறையின் கிழக்குப்பகுதியை வெண்திரையும், மையப்பகுதியை தொகுப்பாளர்களும் கணிணிகளும் எடுத்துக்கொள்ள மூன்று திசைகளிலும் ‘ப’ வடிவில் அமர்ந்திருந்த அனைவரும் நான்கு வர்ணங்களாக பிரிக்கப்பட்டிருந்தனர். “என்னது மறுபடியும் வர்ணாசிரமா? “ என்று திராவிடச்சிங்கங்கள் சிலர் முழங்கினர்.
வழக்கம்போல், எங்களுடைய தொழில்நுட்பப் பிரிவு வங்கிக்கு எவ்வளவு முக்கியம் என்பதை தல உமா சுருக்கமாக முடித்துக்கொள்ள, அங்கிருந்த தொகுப்பாளர்கள் வெகு இலாவகமாக ஒட்டுமொத்த நிகழ்வையும் தங்கள் கையில் எடுத்துக் கொண்டார்கள். மாலையின் மயக்கத்தில் கடற்கரைக்குச் செல்லவேண்டாமென்று அக்கறையோடு உமா எங்களை கேட்டுக்கொண்டது, எப்படியோ பக்கத்து கட்டிடத்திலிருந்த ‘மருதமலை மாமுனிக்கு…’ கேட்டிருக்கும்போல. மாலையின் மயக்கத்தை ‘'ஏறுமலையேறு...ஈசனுடன் சேரு..” என்று முருகையா கலைக்கப்போகிறார் என்பது தெரியாமல் நிகழ்வுகளில் மூழ்க ஆரம்பித்தோம்.
அடுத்த இருமணி நேரங்களுக்கு அங்கிருத்த ஒட்டுமொத்த கூட்டத்தையும் தன்பிடியில் எடுத்துக் கொண்ட அந்த இரு தொகுப்பாளர்களின் நிபுணத்துவமும் எங்களை வாய்பிளக்கச் செய்தன.
எல்விஸ் மிக நிதானமாக தன் இறுக்கமான உடல் மொழியாலும், நேர்த்தியான ஆங்கில உச்சரிப்பாலும் அனைவரையும் ஈர்க்க ஆரம்பித்தார் என்றால், லக்ஸயா ஆராவார வகை. அருவி மாதிரி தமிழிலும் ஆங்கிலத்திலும் மாறி, மாறி படபடவென கொட்டிக்கொண்டேயிருந்தார். அக்குரலிருந்த துள்ளலும் எள்ளலும், உடல்மொழியில் இருந்த சீண்டலும் எளிதாக அங்கிருந்த ஒட்டுமொத்த கூட்டத்தையும் அவருக்கு தலையசைக்க வைத்தது. இவ்விருவருமே எங்கள் அலுவலகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது ஒரு ஆச்சரியமான விஷயம்தான். தன்னுடைய பொழுதுபோக்கையும் ஒரு தீவிர செயல்பாடாக மாற்றிக் கொண்டவர்களால் மட்டுமே, அதற்குரிய நிபுணத்துவத்தைப் பெறமுடியும் என்பதற்கு இவ்விரு தொகுப்பாளர்களும் ஒரு உதாரணம்.
10 பேர் இருக்கும் ஒரு அணியிலேயே 20 வாட்ஸ்அப் குழுக்கள் முளைக்கும் சமகாலச்சூழலில், அனைவரையும் கலையாமல் ஒரே இடத்தில் தக்கவைப்பது மிகச் சிரமமான காரியம். ஆனால் , தங்கள் கைவசம் இருந்த சுவாரஸ்யமான விளையாட்டுக்களால் இரு தொகுப்பாளர்களும் அங்கிருந்தவர்களின் எல்லைகளை கரைத்து ஒன்றாக்க முடிந்தது. ஆரம்பத்திலேயே தடாலடியாக ஒவ்வொரு வர்ணத்தின் தலைவருக்கும் ‘ஆள் கடத்தும்’ பொறுப்பு கொடுக்கப்பட்டது. அனைத்து வர்ணங்களும் தங்கள் இருக்கையிலிருந்து எழுந்து பரபரப்பாகினர்.
அறைமுழுதும் ஆராவாரமும் கூச்சலுமாக ஒவ்வொரு அணியினரும் தரையில் நீண்ட வரிசையில் அமர்ந்தனர். தரையில் இப்படி சம்மணமிட்டு உட்கார்ந்து வெகு நாட்களாகியிருக்கலாம் சிலருக்கு. வரிசையின் ஒரு முனையிலிருந்து மறு முனைக்கு அண்ணாந்து படுத்தவாக்கில் இருக்கும் ஒருவரை கடத்தும் இந்த விளையாட்டை ‘Passing the Person ‘ என்றார்கள். முதலில் கொஞ்சம் பயம் எழுந்தாலும், கடத்தப்படவேண்டியவர் காற்றைவிட எடை குறைவாக இருந்ததாலும், நானிருந்த காவி வர்ண அணியின் தல ஜெரோம் எங்களை உற்சாகப்படுத்துகிறேன் என்ற பேரில் ஏத்திவிட்டதாலும் பயம் குறைந்தது. பல்லக்கில் பயணிப்பதுபோல அசைந்து மிதவேகத்தில் கடத்தப்பட்டார் அந்த காற்றின் மைந்தன். இப்படி ஒவ்வொரு அணியினரும் ஒருத்தரை கடத்தி முடிக்க, எந்த வர்ணத்தின் ஆள் முதலில் கடத்தப்பட்டார் என்பதில் இருந்த குழப்பத்தால் அறை முழுதும் அலறியது, ‘ஜாக்சன்...ஜாக்சன்..’என்று ஒருபக்கமாகவும்; ‘விஜய்..விஜய்…’ என்று ஒருபக்கமாகவும்.
சிறிது நேரத்தில் குழப்பம் வடிந்து அறை தன் அமைதிக்கு மீண்டது. ஆனால் அனைவரின், மனதிலிருந்த உற்சாகமும் தற்போதைக்கு வடிவதாக தெரியவில்லை. நிரம்பி முகத்தில் புன்னகையாக நுரைத்துக் கொண்டேதான் இருந்தது. அடுத்து, வேடிக்கையான சில நடன அசைவுகளைக் கொண்ட காணொளிக்கு (Video) தோதாக ஆடமுயன்று தோற்றனர் ஒவ்வொரு வர்ணத்தினரும். வயிற்றில் மணியடிக்க ஆரம்பித்தது. மணியும் சற்று நேரத்தில் 2த் தொட இருந்தது. சாப்பாட்டிற்கான அழைப்பும் வந்தது. அறையிலிருந்து வெளியேறி மீண்டும் தரைதளத்தை அடைந்தோம்.
சில ரொட்டிகளை, கோழிக் குழம்பில் நனைத்து மென்று விழுங்கிக் கொண்டே, அங்கிருந்தவர்களிடம் சற்றுபேசி விட்டு வெளியே வந்தபோது சற்றே வெம்மையாக இருந்தாலும், முகத்தில் வருடிய வெளிக்காற்று அப்போதைக்கு மிகவும் அவசியமாக இருந்தது. கால்கள் தன்னையும் அறியாமல் கடற்கரை நோக்கி தள்ள ஆரம்பித்தது. உண்ட களைப்பா, அறையில் அலறிய களைப்பா என்பதறியாத ஒரு மோனத்தில் உடலும் மனமும் இ்ருந்தது.
நமக்குள்ளிருக்கும் நாமறியாத விஷயங்களை பொறுக்கி எடுப்பதுதான் தியானம் என்கிறார்கள். அப்படிப் பார்த்தால் இதுபோன்ற கூட்டுச் செயல்பாடுகளும் ஒருவகையான தியானம்தான் என்று எண்ணத்தோன்றியது. நவீனம் என்ற பெயரில் நாம் தொலைத்த பாரம்பரியமான திருவிழாக்கள் நினைவுக்கு வந்துபோயின.
கடற்கரையிலிருந்து திரும்பி மீண்டும் நடந்த ஆர்பாட்டங்கள், நடனங்கள்,பரந்து விரிந்த அப்புல்தரையில் நடந்த ஏமாற்றங்கள்,அதைத்தாண்டியும் 80களின் இளையராஜாவை வைத்துக்கொண்டு நாங்கள் நடத்திய கொண்டாட்டங்கள் என எல்லாவற்றையும் இன்னொரு பகுதியில் எழதவே மனம் எண்ணுகிறது.
ஆட்டம் தொடரும்....