மழை நின்ற பின்


சொட்டு சொட்டென
பாத்திரத்தில்
சொட்டிக் கொண்டிருக்கும்
ஓட்டின்
நீர் சத்தமும்,

சம்மளமிட்டு
அருந்திய
கருப்பட்டி காபியும்
அரிசி பொறியும்,

தெருவில் வழிந்தோடும்
நீரோடையில் நண்பனோடு
பயணித்த
காகித கப்பல்களும்,

கால் சட்டை பையில்
கடலை நிறைத்து
கொறித்து போடும்
ஊர் பாலமும்,

ஆற்றிலோடும் வெள்ளத்தில்
வீசிப் போகும்
சீம உடைக் கம்புகளும்

கையசைத்தபடியே
கடந்து போகும்
ரோட்டோர வாகனங்களும்,

தூரத்து மலை ஒன்றில்
மாலை போல்
கவிழிந்து விழும்
நீர்வீழ்ச்சியும்,

நண்பர்களோடு
சைக்கிளில் சுத்தி வந்த
குளக்கரை
மணல் மேடுகளும

வேலியோர ஓணான்கள்
குருவிகளோடு கதை பேசி
கடந்துவரும் வழியில்,

எதிர் பாராது
பெய்திடும் மழைதனில்
நினைந்து

சட்டையினால்
தலை துவட்டி
பறக்க விட்டபடியே
வீடு வந்தடையும்
அந்த நாட்களை போல்

மீண்டும் ஒருமுறை
வாழ்ந்திட ஆசை பட்டு
நேற்று பொழிந்த மழையில்
தேநீர் கடையோரம் நின்று
ஏமாந்து போனேன்!

எழுதியவர் : RAMESHRACKSON (26-Aug-11, 10:24 am)
Tanglish : mazhai ninra pin
பார்வை : 569

மேலே