ஏசு கிறிஸ்து

ஏசு
இவன் அனைவரையும்
அன்பால் தன்பால் விழவைத்தவன்

தொழுவத்தில் பிறந்து
அனைவரையும் தொழவைத்தவன்

மேரிக்கு மகனாய்ப்
பிறக்காது மகானாய்ப் பிறந்தவன்
அன்பெனும் கதவை அகிலம்
முழுதும் திறந்தவன்

இவன் ஒரு கன்னத்தில் அறைந்தால்
மறு கன்னத்தைக் காட்டச் சொன்னான்
இன்றோ இருக்கும் ஒரு கழுத்தோ
வெட்டப்படுகிறது
நாங்கள் எதைக் காட்டுவது?

அன்று குடிசையில் பிறந்தவரை
ஏசு என்றார்கள்
இன்று குடிசையில் பிறந்தால்
ஏழை என்று ஏசுகின்றார்கள்

கிறிஸ்துவர்களும்
இந்துக்களும் ஒன்றுதான்
அவன் மேரி தெய்வம் என்கிறான்
இவன் மாரி தெய்வம் என்கிறான்

கூட்டல் குறி என்பதாலோ என்னவோ
நல்லவர்களை சமூகம் சிலுவையில்
அறைவதைக் கூட்டிக்கொண்டே
போகின்றது

ஏசு சிலுவையில் மூன்றாம் நாள்
உயிர்த்தெழுந்தார்
சமூகம் எனும் சிலுவையில்
அறையப்பட்ட பெண் எப்போது
உயிர்த்தெழப் போகின்றாளோ?

ஏசுவை விரும்புவோரைவிட
உலகில் காசுவை விரும்புவோர் அதிகம்

தீயவை பேசாதவர் பிறர்மனம்
நோக ஏசாதவர் யாரோ அவரே
ஏசு

கிறிஸ்துவும் கிருஷ்ணனும்
ஒன்றுதான்
நாம் தான் மனிதர்கள்
என்று ஒன்றுபடவில்லை

மதம் தூங்கட்டும்
மனிதம் ஒங்கட்டும்

அனைவருக்கும் கிறிஸ்துமஸ்
வாழ்த்துக்கள்

புதுவைக் குமார்

எழுதியவர் : குமார் (24-Dec-18, 3:21 pm)
சேர்த்தது : புதுவைக் குமார்
Tanglish : yaesu kiristhu
பார்வை : 113

மேலே