உனைப்போல் ஒருவன்

முகவை மூடனும் நாஞ்சில் நாடனும்
அகவை மூவாறில் கொண்ட நட்பு
கருத்து ஒவ்வாது செருக்கு மேலோங்கி
வெறுத்து ஓராண்டில் பிரிந்த நட்பு
தனியன் எனைத்தேடி வந்த கனியன்மேல்
அடியேன் கொண்ட அருமை நட்பு
எனக்குத் தெரியாதென வினை செய்து
பிணக்கு வந்து பிரிந்த நட்பு

வாசல் தேடிவந்த வல்லான் உனை
ஈசலென மிதித்த பொல்லான் நான்
பேசி தீர்க்க பொருமை இல்லை
வீசி எறிந்தேன் விரட்டி அடித்தேன்
மனித தூது முயற்சி செய்தாய்
புனித மேனி புண்படும் என்றேன்
அவமானம் எதுக்கென்று அகந்தை கொண்டாய்
தன்மானம் எனக்கென்று தனியே சென்றேன்

முகம் கண்டால் முடியும் பகையென்று
அகம் நொந்து கூறினேன் வசையொன்று
நிழல் கண்டாலும் நினைவுகள் வருமென
அழல் கொண்டு அனைத்தும் அழித்தேன்
யாருமில்லை எனக்கென்று உணர்த்திய உனக்கு
கூறவில்லை உடைந்து நொருங்கிய நம்நட்பை
பக்கம் பாராமல் திரும்பிக் கொண்டோம்
துக்கம் கண்டாலும் துடைத்துச் சென்றோம்

நிழலின் அருமை வெயிலில் தெரியும்
நட்பின் பெருமை பிரிவில் புரியும்
இருட்டில் கண்ட மின்மினிப் பூச்சி
தருக்கம் இல்லாமலே பறந்து போச்சு
எகினன் படைத்ததில் மனதை வென்றது
சகளன் அழைத்ததில் பிரிந்து சென்றது
உன்னைத் தேடி வராததால் வருந்தினாயோ?
மண்ணில் போர்வை செய்து உறங்குகிறாயோ?

பார்த்து சிரித்து பாசாங்கு செய்தாலும் கை
கோர்த்து நடக்க இல்லை உனைப்போல் ஒருவன்
இனிமை சொற்கள் இயல்பாக பேசினும் என்
தனிமை தகர்க்க இல்லை உனைப்போல் ஒருவன்
சாயம் பூசிய சாணங்கள் இருப்பினும் மனக்
காயம் கரைக்க இல்லை உனைப்போல் ஒருவன்
எகினன் எத்துனை படைத்து இருப்பினும் உலகில்
தசமன் எனக்கு இல்லை உனைப்போல் ஒருவன்

எழுதியவர் : ஏ.தினபாகர் (23-Dec-18, 1:25 pm)
Tanglish : unaipol oruvan
பார்வை : 4833

சிறந்த கவிதைகள்

மேலே