விதிக்கொரு பாடல்

=====================
விதியே விளையாடாதே
விழிநீர் துளி கூட்டாதே
விடியா ஏழை வாழ்வை நீயும்
விளையாட்டுப் பந்தாய் ஆக்காதே
அதை விலைவாசி காலால் உதைக்காதே!
**
விதையைப் போட்டு பயிரைக் கேட்டால்
பதரை கண்ணால் காட்டாதே
பயிரை வளர்க்க மழையைக் கேட்டால்
வெள்ளம் போட்டுக் கெடுக்காதே
பசியைப் போக்க உணவு கேட்டால்
பட்டினி யாக்கிக் கொல்லாதே
உழைக்கும் வர்க்கம் ஓடாய்த் தேய
உதவி யாக நில்லாதே (விதியே..)
**
கிழிந்த துணிக்கு மாற்று கேட்டால்
அம்மணம் வாங்கிக் கொடுக்காதே
கிளியை வளர்க்கும் வீட்டுக் குள்ளே
பூனை போல நுழையாதே
மூச்சு வாங்க காற்றைக் கேட்டால்
புயலாய் வந்து தாக்காதே
விளக்கை ஏற்றி வெளிச்சம் காட்டி
விட்டில் பூச்சாய் மாற்றாதே (விதியே..)
**
படிக்கும் குழந்தை புத்தகம் கேட்டால்
பள்ளிக் கூடம் இடிக்காதே
பருவப் பொண்ணு வாழ்க்கைக் கேட்டால்
பாலியல் குற்றம் சொல்லாதே
பிணியைப் போக்க மருந்து கேட்டால்
பைத்திய மாக்கிப் பார்க்காதே
இருப்பவன் வாழ இயந்திர மாக்கி
ஏழையை மட்டும் வதைக்காதே!
**

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (26-Dec-18, 2:46 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 64

மேலே