காதல் மொழி

காதல் மொழி

கங்கை நதியின் நீளம் அறிவேன்
கால்சுற்றும் நாயின் நன்றி அறிவேன்
கிழக்கில் உதிப்பவனின் வெம்மை அறிவேன்
கீரவாணி ராகத்தின் ரம்மியம் அறிவேன்!

குறையிலா மனிதரிலர் என்பதை அறிவேன்
கூவும் குயிலின் தனிமை அறிவேன்
கெண்டை மீனின் கண்ணீர் அறிவேன்
கேடுகெட்ட மனிதரின் குணம் அறிவேன்!

கைம் பெண்ணின் கையறுநிலை அறிவேன்
கொட்டும் மழையின் இனிமை அறிவேன்
கோகழி திருத்தலத்தின் புராணம் அறிவேன்!

சங்கத் தமிழின் சுவை அறிவேன்
சாத்திரங்கள் பலவும் நான் அறிவேன்
சிந்தும் கண்ணீரின் ஆழம் அறிவேன்
சீறும் காளையின் வலிமை அறிவேன்!

சுழலும் சூறாவளியின் வேகம் அறிவேன்
சூது உடையோரின் பேச்சு அறிவேன்
செத்தும் கொடுத்த சீதக்காதியை அறிவேன்
சேர்ந்தே குழிபறிக்கும் பகைவரை அறிவேன்!

சைவ சித்தாந்தத்தின் நெறி அறிவேன்
சொப்பனத்தின் மொழியை நான் அறிவேன்
சோகத்திலும் சிரிக்கும் வழி அறிவேன்!

தலைப் பிரசவத்தின் வலி அறிவேன்
தாங்கொணா பிரிவின் துயரம் அறிவேன்
திரைக் கடலின் பரப்பு அறிவேன்
தீதும்நன்றும் பிறர்தர வாராதென அறிவேன்!

துன்பத்தில் விளையும் ஞானம் அறிவேன்
தூங்கா விழியின் ரணம் அறிவேன்
தென்னாடுடைய என் சிவனை அறிவேன்
தேடிவரும் காதலின் சுகம் அறிவேன்!

தைத் திங்களின் சிறப்பு அறிவேன்
தொடு வானத்தின் தூரம் அறிவேன்
தோகை மயிலின் நடனம் அறிவேன்!

நயமாய் பேசுபவரின் சூழ்ச்சி அறிவேன்
நாரை கொக்கின் பொறுமை அறிவேன்
நித்தம் துடிக்கும் இதயத்தினோசை அறிவேன்
நீதி வழுவா மனுநீதிச்சோழனை அறிவேன்!

நுதற்பொட்டுடைய நங்கை அழகென அறிவேன்
நூறு இலக்கியங்களின் கருப்பொருள் அறிவேன்
நெறி தவறும் கயவர்களை அறிவேன்
நேர்பட பேசுபவரின் துணிச்சல் அறிவேன்!

நைந்துபோன தேகத்தின் வறுமை அறிவேன்
நொச்சி வேரின் மருத்துவப்பயன் அறிவேன்
நோயுற்றோரின் உடல் துன்பம் அறிவேன்!

பசியின் கொடுமையை நான் அறிவேன்
பாரதி உரைத்த ரௌத்திரம் அறிவேன்
பிறன்மனை நோக்குவதின் பாவம் அறிவேன்
பீமன் அவனின் பராக்கிரமம் அறிவேன்!

புகழ் கொடுக்கும் தலைக்கணம் அறிவேன்
பூவையர் மகள் ஆண்டாளை அறிவேன்
பெண்மையின் மென்மைதனை நான் அறிவேன்
பேராசைக் கொள்வதின் விபரிதம் அறிவேன்!

பைந்தமிழின் நல் இலக்கணம் அறிவேன்
பொறையுடைய நல்லோரின் பெருமை அறிவேன்
போர் புரிதலின் விதிகளை அறிவேன்!

மறை நான்கின் உட்பொருள் அறிவேன்
மாற்றம் ஒன்றே மாறாதது அறிவேன்
மிதிலையின் இளவரசி சீதையை அறிவேன்
மீண்டும் பிறவாதிருக்க வழி அறிவேன்!

முக்குணத்தின் தன்மையை நான் அறிவேன்
மூவேந்தர்களின் ஆட்சித் திறத்தை அறிவேன்
மெட்டி அணிவதின் காரணம் அறிவேன்
மேலோர் சொன்ன தர்மம் அறிவேன்!

மைதீட்டியக் கண்களின் மயல் அறிவேன்
மொட்டு மலராகும் நேரம் அறிவேன்
மொகமுடைய மங்கையின் தாபம் அறிவேன்-

ஆனால் கன்னியின் கண்கள் சிந்தும்
காதல் மொழியினை மட்டும் நான்
அறியாது போனேன் அது ஏனோ?

இவன்
சரவணன்
Thiruvannamalai

எழுதியவர் : சரவணன் (27-Dec-18, 9:44 pm)
சேர்த்தது : Saravanan
Tanglish : kaadhal mozhi
பார்வை : 83

மேலே