யுத்தம் - தொடர்கதையின் முதற்பகுதி

டூம் டூம் டூம்,
டமார் டிமீர்,
எங்கும் சத்தம்,
எங்கும தீப்பிழம்பின் ஆர்பறிப்பு,
தப்பி ஓட வழியில்லை,
சுட்டுத் தள்ளு,
இல்லை செத்துப் போ என்கிற இரண்டை தவிர.

” நான் யுத்தத்திற்காக பயிற்சி பெற்றவன் அல்ல.
உயிர்களை காக்கும் வைத்தியம் பயின்றவன்.
ஆனால், என்னாலேயே உயிர்கள் பறிக்கப்படுகின்றன.
என்ன செய்வது?
யுத்தமென்று அறிவிக்கப்பட்டவுடன் குடும்பத்திற்கு ஒரு ஆண் யுத்தத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்று ஆணை பிறபித்துவிட்டது.
என் குடும்பத்தில் நான் மட்டுமே ஆண்மகனாக பிறந்து வளர்ந்திருந்தால் யுத்தக்களம் புகுந்து உயிர்களை பறிக்க நேர்ந்துவிட்டது. “,என்று தியாகு தன் சோகத்தை சக வீரரிடம் பகிர்ந்து கொண்டான்.

” நாம் நாடு காக்கப் பிறந்தவர்கள்.
சோகத்தால் துவண்டுவிடக் கூடாது.
நம் உயிர் போனால் நாட்டுக்காக போகட்டும்.
இல்லையென்றால் எதிரிகளின் உயிரைப் பறிக்கட்டும். “,என்று வீராவேசமாக பேசினார் சக வீரர் குமார்.

தியாகுவின் மனமோ யுத்தத்தில் கொலை செய்கிறோம் என்பதை பற்றி கவலை கொண்டிருந்தது.

தியாகு இருபத்தெட்டு வயதான இளைஞன்.
தன் தந்தை கற்றுத்தந்த வைத்தியத் தொழிலைக் கொண்டு வாழ்ந்து வருபவன்.
அக்கா, தங்கைகள் மூவர்.
அக்காவின் பெயர் காயத்ரி,
முப்பது வயதாகியும் திருமணமாகவில்லை.
மகாலட்சுமி, சுபலட்சுமி என்ற இரு தங்கைகள் வேறு உள்ளனர்.
அவர்களின் வாழ்வாதாரம் தியாகு தான்.
காயத்ரி கூலி வேலைக்கு செல்வதால் சற்று கருத்து கிராமக்களையுடன் இருப்பாள்.
தங்கைகள் இருவரும் படிக்கிறார்கள்.
தந்தை கருப்பையாயும் தாய் சிவகாமியும் காலமாகிவிட்டார்கள்.

தன் சகோதரரிகளின் வாழ்வின் பொருட்டு திருமணம் செய்யாமல் தன் கனவுகளை விரட்டிவிட்டு வாழ்ந்துவந்தான்.
அப்படிப்பட்டவர்களின் வாழ்வில் இந்த யுத்த அறிவிப்பு மிகப் பெரிய அதிர்ச்சியாக அமைந்தது.

வாழ்வின் பின்னணியை அடிப்படையை எப்போதுமே அரசாங்கத்தில் பணிபுரிபவர்கள் சிந்திப்பதே இல்லை.
அவர்களுக்கென்ன?
பணம் இருக்கிறது.
நல்ல உணவு, நல்ல உடை, நல்ல வீடு, என்ற ஆடம்பரத் தேவைகளில் திளைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு அன்றாட வாழ்விற்காக அல்லாடும் மக்களைப் பற்றிய சிந்தனை இருக்குமா?

வயிறு நிரம்பிவிட்டது.
உடலில் கொழுப்பு ஏறிவிட்டது.
அடுத்தென்ன? மமதையால் வாய்க்கொழுப்பால் விளைந்தது இந்த யுத்தம்.

இப்படி பணம் படைத்தவர்களின் ஆளுமையில் ஏழைகளின் வாழ்வாதாரமே அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.
என்கிற சூழ்நிலை புரிந்து கொள்ள எண்ணற்ற உதாரணங்களை அடுக்கலாம்.

தியாகுவின் மனம் சஞ்சலமடைந்து இருந்தது.
மறுபக்கம் தான் யுத்தம் செய்தே ஆக வேண்டும் என்பதை அவனது அறிவு வலியுறுகிறது.

தனக்கு முன் மாண்டவர்களின் தியாகத்தைச் சிந்தித்தான்.
மனம் புதிய உத்வேகம் பெற்றது.

இந்த நேரத்தில் வான்வழி தாக்குதல்கள் ஆரம்பமானது.
போர் விமானங்கள் குண்டுகளைப் பொழிய உடன் இருந்தவர்களில் பல சிதறக் கண்டான்.
வானூர்திகளைக் குறி வைத்து ஏவுகனைகள் ஏவப்பட வானுர்திகள் வெடித்துச் சிதற அதிலிருந்து தப்பிய எதிரி வானுர்தி ஓட்டிகள் பாராசூட்டில் பறந்து தரையிறங்கக் கண்டவன் அவர்களை குறிவைத்து சுட்டுத் தள்ளினான்.

வெடிகுண்டுகளால் வெடித்துச் சிதற பிணங்களுக்கு நடுவே அவனது பார்வை இரையைக் குறிவைக்கும் கழுகின் பார்வையை ஒத்திருக்க,
நடந்தவன் முன்னால் சிதறுகின்றன சிதைத்த பிணங்களின் மண்டையோடுகள்.

அவன் மனதில் கோரம் ரூபமாய் எதையும் அழிக்கும் வேகம் தோன்ற, தோட்டாக்கள் தெறிக்கின்றன.
போர் பயிற்சி பெறாத வீரனாயினும் வைத்த குறிகள் தவறவில்லை.

பக்கத்து மரங்களில் குண்டு மழை பொழிய தீப்பற்றி எரிகின்றன.
தீயில் சிக்கிய பறவைகள் சாம்பலாகப் பறந்தன.
கோரமான அந்த யுத்தகளம் பார்ப்பதற்கே மிக அருவருப்பாக மாறியது.

நவீன ஆயுதங்களால் பல்லாயிரக்கணக்கான வீரர்கள் சில மணி நேரங்களில் கொல்லப்பட்டார்கள்.

இரு புற வீரர்களும் தங்கள் நாட்டுகளுக்காக தங்களது உயிரையே தியாகம் செய்து கொண்டிருந்தார்கள்.
தியாகு நகர்ந்து கொண்டே சுட்டுக் கொண்டிருக்கும் போது
பூமியில் புதைக்கப்பட்டிருந்த கண்ணி வெடிகளில் காலை வைத்துவிட்டான்.
வைத்தவனின் சிறு அசைவில் கண்ணி வெடிகள் வெடிக்க இரண்டு கால்களையும் பறிகொடுத்தான்.

நகரமுடியாமல் கீழே கிடந்தவனுக்கு தன் கால்களை இழந்த வேதனைவிட நாவறட்சி அதிகமாக இருந்தது.
தண்ணீரை தேடினான்.
இரத்தமே சுண்டிப் போகும் யுத்தகளத்தில் தண்ணீர் கிடைத்திடுமா?

தன் துப்பாக்கியை மேல் நோக்கி பிடித்து எதிரி வீரர்களைச் சுட்டுக் கொண்டே இருந்தான் அவன் பிரிந்தது கூட தெரியாமல்.
துப்பாக்கியோ தோட்டாக்களை வாந்தியெடுத்து தன் மூச்சை நிறுத்திக் கொண்டது.

வீட்டில் இருந்த ஒரே ஒரு ஆண்மகனையும் நாடு காவு வாங்கிக் கொண்டது.
இனி அந்த சகோதரிகளின் வாழ்க்கை என்னவாகும்?

நாடுகளுக்கு இடையே நடப்பது மட்டும் யுத்தம் அல்ல.
இந்த உலகில் ஏழைமக்களின் வாழ்வில் எண்ணற்ற யுத்தங்கள் நடைபெற்றுக் கொண்டே தான் இருக்கின்றன.

(தொடரும்…)

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (28-Dec-18, 12:02 am)
பார்வை : 196

மேலே