ராகவனின் எண்ணம்

ராகவனின் எண்ணம்

வீட்டிற்குள் நுழையும்போது இரவு 7.30 ஆகி விட்டிருந்தது ராகவனுக்கு. அவர் மனைவி வாசலிலேயே காத்திருந்தாள். ஏங்க, இன்னைக்கு இவ்வளவு லேட்? எதுவும் பேசாமல் துணிமணிகளை கழட்டி விட்டு கொடியில் தொங்கிய துண்டை இடுப்பில் சுற்றிக்கொண்டு புழக்கடை சென்று வாளியில் இருந்த தண்ணீரை எடுத்து முகத்தில் பளீரென அடித்து சர்ரென தண்ணீரை தன் இரு பாதங்களுக்கிடையில் விட்டு, கால்களாலே மாறி மாறி தேய்த்து கழுவி விட்டு உள்ளே வந்தார்.
அவர் மனைவி பதிலை எதிர்பார்த்தவாறு கையில் வேட்டியுடன் நின்றாள். அதை வாங்கி கொண்டு இடுப்பில் இருந்த துண்டை உருவி கையில் இருந்த வேட்டியை இடுப்பில் சுற்றிக்கொண்டு, கழட்டிய துண்டால் கை கால்களை துடைத்துக்கொண்டு அங்கிருந்த நாற்காலியில் அக்கடாவென உட்கார்ந்தார். உடல் அசதியாக இருந்தது.
இதற்குள் மனைவி கையில் காப்பியுடன் வர அதை வாங்கி இரசித்து குடித்து காலி செய்தவர் டம்ளரை மனைவியின் கையில் திணித்து விட்டு இன்னைக்கு ஏதோ போராட்டமாம், பஸ் எல்லாம் திருப்பி விட்டுட்டாங்க, காந்திபுரத்துல இருந்து சாயிபாபா காலனி வர்றதுக்குள்ள ஸ்..அப்ப்ப்பா… சலித்துக்கொண்டார்.
இது அன்றாடம் நடக்கும் நிகழ்ச்சிதான், தினமும் இவர் நேரம் கழித்து வருவது, பின் சலித்து கொள்வது, மகன் ரமேசை வண்டியை எடுத்து ஆபிஸ் வாசலிலேயே ஏற்றிக்கொண்டு வீட்டில் கொண்டு விட சொன்னாலும் இவர் ஒத்துக்கொள்ள மாட்டார். கல்யாணமாகி சென்ற தன் மகள் கல்பனா அவள் புகுந்த வீடு போகும் வரை தன் தந்தையிடம் மன்றாடி பார்த்து விட்டாள். தன் வண்டியிலேயே அவரை ஆபிஸ் கொண்டு விட்டு விடுவதாகவும், மாலையில் கல்லூரி முடிந்து, ஆபிஸ் வந்து மீண்டும் வீட்டில் கொண்டு வந்து விட்டு விடுவதாகவும் சொல்லி பார்த்தாள்.
இவர் உனக்கு எதற்கு வீண் சிரமம் என்று அவளை தவிர்த்து விட்டார். மகன் ரமேசுக்கும் அப்பாவை கொண்டு போய் அலுவலகம் விட்டு கூட்டி வருவது பெரிய சிரமம் இல்லை. அவன் அரசு பொறியியல் கல்லூரியில்தான் படிக்கிறான், ஆனால் அவர் ஒத்துக்கொண்டால்தானே. இது போக வீட்டில் கல்பனா உபயோகப்படுத்திய ஸ்கூட்டியும் சும்மாதான் இருந்தது.
ஒரு பத்து நாள் இவர் காலில் ஏதோ சுளுக்கு என்று நடக்க சிரம பட்ட பொழுது தினமும் அவரை அலுவலகத்துக்கு கூட்டி சென்று பின் மாலையில் வீட்டுக்கு அழைத்து வந்து கொண்டிருந்தான். தன் கால் சரியானதும் அவனை வரவேண்டாமென்று சொல்லி விட்டார். வழக்கம்போல வீட்டிலிருந்து அரை பர்லாங்கு தூரம் நடந்து வந்து பஸ் ஏறி அலுவலகம் சென்று வந்தார். ரமேசு அம்மாவிடம் புலம்புவான் அப்பா ஏன் இப்படி இருக்கறாரு? அவரும் கஷ்டப்பட்டு நம்பளையும் கஷ்டப்படுத்தறாரு. ராகவனின் மனைவி ஒன்றும் பேசமாட்டாள். விடுறா, அவரா கூப்பிடும்போது நீ போனா போதும்.
ராகவனும், அவர் மனைவியும் இந்த காலனியில் வீடு கட்டி குடி வருவதற்கு முன்பு ஏழெட்டு வீடுகளில் வாடகைக்கு குடியிருந்தனர். வீட்டுக்காரர்களின் ஆதிக்க மனப்பான்மையை இவர்களால் தாங்க முடியாமல் நகைகள் அனைத்தையும் விற்று இந்த மனையை காலனியில் வாங்கி போட்டனர். அப்பொழுதெல்லாம் இந்த காலனி ஒரே பொட்டல் காடாகத்தான் இருந்த்து. அதன் பின் இவர் வேலை செய்யும் அலுவலகம் மூலமாக வீட்டு கடன் வாங்கி ஒரு வழியாக வீட்டை கட்டி முடித்தனர். அப்பொழுது கல்பனா சிறுமியாகவும் ரமேஷ் கைக்குழந்தையாகவும் இருந்தனர். இவரோடு நான்கைந்து பேர் தொடர்ந்து அங்கு வீடு கட்ட வர ஒருவருக்கொருவர் அணுசரணையாக இருந்தனர். அப்பொழுதெல்லாம் வீடு கட்ட கடன் கிடைப்பது என்பது குதிரைக்கு கொம்பு முளைப்பது போல, பணத்துக்கு இவர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் வீடு கட்டும் இட்த்தில் ஒருவருக்கொருவர் அணுசரணையாக இருந்து உதவிகள் செய்து கொண்டதால், சிரமங்களே தெரியவில்லை. வீடு கட்டி முடித்தவுடன் பாலை காய்ச்சி குடி வந்து விட்டனர்.
அப்பொழுதெல்லாம் தண்ணீர் கஷ்டமும் இருந்தது. இருபது இருபத்தை ஐந்து வீடுகள் மட்டுமே அப்பொழுது அங்கு கட்டி முடிந்து குடி வந்திருந்தனர். அவர்கள் அனைவரும் கூடி பேசி ஒரு “போர்” குழாய் அமைத்து ஓரளவு தண்ணீர் பிரச்சினையை தீர்த்துக்கொண்டனர். பின் காலனியில் வீடுகள் பெருக பெருக வசதிகளும் பெருகி அன்று இந்த இடம் பொட்டல் வெளியாய் இருந்தது என்று சொன்னால் இவர்களாலே இப்பொழுது நம்ப முடியவில்லை.
வீடு கட்டி குடி வரும்பொழுது இவர்களுக்கு இருந்த கடன் கழுத்தளவு இருந்தது. ஆனால் ராகவனின் மனைவியின் சாமார்த்தியத்தினால் கொஞ்சம் கொஞ்சமாக கடன் அடைக்கப்பட்டு நகை நட்டுகள் செய்து தன் மகளை நல்ல இடத்திலும் திருமணம் செய்து கொடுத்து விட்டனர். வீடு கட்டி பத்து வருடங்கள் வரை ராகவன் தினமும் சைக்கிளிலிலேயே அலுவலகம் சென்று வருவார். அதன் பின் சைக்கிள் மிதிக்க உடல் ஒத்துழைக்காததால் பஸ்ஸை நாட ஆரம்பித்து எட்டு வருடங்களுக்கு மேல் ஒடி விட்டது.
ஒரு நாள் ரமேசின் வண்டி ஸ்டார்ட் ஆகவில்லை. அப்பாவுடனே வண்டியை தள்ளிக்கொண்டு அவர் பஸ் ஏறும் இடத்தில் இருந்த இரு சக்கர வண்டி பழுது பார்க்கு இடத்தில் விடுவதற்காக வந்தான். வண்டியை விட்டு விட்டு அப்பா ஏறும் பஸ்ஸிலே கல்லூரி செல்லலாம் என்று முடிவு செய்து கொண்டான்.
அப்பாவுடன் வெளியே நடந்து வர எதிரில் ஆட்டோவை ஒட்டி வந்த ஆட்டோ ஓட்டுநர் “வணக்கம் ஐயரே” கையசைக்க இவரும் பதில் வணக்கம் செய்தார். அதன் பின் அவர் நடக்க வழியெங்கும் விசாரிப்புக்கள், இவரும் சளைக்காமல் ஒவ்வொருவரிடமும் பேசிக்கொண்டே வந்தார். உங்க பையனா? என்ன பண்றார்? இப்படி பல்வேறு விசாரிப்புக்கள். கடைகள் முதல் தள்ளுவண்டி வைத்திருப்போர் வரை அவரிடம் சகஜமாக பேசி விட்டு சென்றனர். அவசரமாக செல்வோர் அவருக்கு ஒரு கை அசைப்புடன் செல்வதையும் பார்த்து ரமேசுக்கு ஒரே வியப்பு
அப்பாவுக்கு இத்தனை நண்பர்களா? அவரும் முக மலர்ச்சியுடன் எல்லோரிடமும் கல கலப்பாக பேசிக்கொண்டிருக்கிறாரே? பஸ் ஏறியும் இவரின் விசாரிப்புகள் குறையவில்லை. பஸ் டிரைவர் கூட இவரை பார்த்து கையை ஆட்டினார். இவரை போல தினமும் பஸ்ஸில் வருபவர்களுடன் ஒரே பேச்சுத்தான்.
இவன் கல்லூரிக்கு போவதால் பாதி வழியிலேயே இறங்கி கொண்டான். மாலையில் ராகவன் வீடு வந்து சேர்ந்த பொழுது ரமேஷ் சீக்கிரமே வீடு வந்திருந்தான். ராகவன் தன் வழக்கமான சிரம பரிகாரங்கள் முடித்து உட்கார்ந்திருந்த பொழுது ரமேஷ் அப்பாவின் அருகில் மெல்ல வந்து உனக்கு எத்தனை பிரண்ட்ஸ்ப்பா, எல்லார் கிட்டேயும் பேசறயே? ஆச்சர்யப்பட்டான்.
அவன் முகத்தை பார்த்த ராகவன் உங்கம்மாவும் நானும் இந்த வீடு கட்ட ஆரம்பிக்கும்போது சுத்தி இருக்கறவங்க எங்களுக்கு எத்தனையோ உதவி செஞ்சாங்க. நீங்க இரண்டு பேரும் சின்ன குழந்தைங்க, அப்ப இருந்து இப்ப வரைக்கும் எல்லோரும் எங்கிட்டயும் உங்கம்மா கிட்டேயும் நல்லா பழகுறாங்க. நாங்களும் அவங்களோட நல்லா பழகுறோம். நாம் என்ன காசு பணமா செலவு பண்ண்றோம். ஒரு வணக்கம், ஒரு சிரிப்பு அல்லது எப்படீ இருக்கறீங்க அப்படீன்னு ஒரு விசாரிப்பு, இது தாண்டா நமக்கு நட்பை கொடுக்கும்.
நான் ஏன் உன் வண்டியிலயோ, இல்லை கல்பனா வண்டியிலயோ வரலை தெரியுமா? இந்த மாதிரி எல்லா முகங்களையும் நாம் தினமும் சந்திச்சா நமக்கு ஒரு புத்துணர்ச்சி கிடைக்குமுன்னு நம்புறேன். வீட்டுல வண்டி ஏறி ஆபிஸ்ல இறங்கி, அங்கிருந்து திரும்ப வண்டி ஏறி வீடு வந்து சேர்ந்து அதுக்கப்புறம் தூங்கி காலையில யார் முகமும் தெரியாத விடியற்காலையில நாலு மணிக்கு வாக்கிங்க் போயி எதுக்குடா இந்த முகமூடி வாழ்க்கை என்னால நடக்க முடியற வரைக்கும் இந்த முகங்களோட பரிச்சயம் இருக்கணும், அவ்வளவுதான், நான் நடக்க முடியாம் இருக்கும்போது உங்க உதவி கேப்பேன் அப்ப எனக்கு உதவி செய்யுங்க.
ரமேஷ் அப்பாவின் கைகளை பிடித்துக்கொண்டான். ராகவனின் மனைவி அவரை முன்னரே புரிந்திருந்திருந்ததால் சின்ன புன்சிரிப்புடன் நின்றாள்.

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (3-Jan-19, 1:48 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 165

மேலே