எங்கே போனார் சன்னாசி ?
ஞாயிறு வந்தாலே
எங்களுக்குக் கொண்டாட்டம்
விடுமுறை என்பதால் மட்டும் அல்ல;
காலை பத்து மணிக்கெல்லாம்
மனைவி சொர்ணவல்லியோடும்
மகன் சுப்பிரமணியோடும்
வீடு வீடாய்ச் சோறு வாங்கவரும்
சன்னாசியைக் காணத்தான் அவ்வளவு
ஆர்வம் எங்கள் தெரு சின்ன பிள்ளைகளுக்கு.
"கும்ச்தலே பாரதம் ஜானே கோல மாரா
கும் ... தக்க ...தக்க... கும் ...", என்று ஏதோ இந்திப் பாடலைப் பாடுவதோடு, அதற்கேற்றார் போல சுற்றி சுற்றி வளைந்து ஆடுவார் சன்னாசி .
நாங்கள் எல்லாம் கை தட்டி, குதிப்போம்.
வீடுகள் தோறும் வாசலில் பெண்கள்
சிரிப்போடு பழையசோறுவைத்திருப்பார்கள்
சன்னாசிக்குப் போட.
"சொர்ணவல்லி, சோறு வாங்கு!", என்று
தன் மனைவியை ஏவி விடுவார் சன்னாசி.
"சுப்பிரமணிக்கு பழைய சட்டை ஏதாவது
இருந்தா கொடுங்க அம்மா!", என்று
உரிமையுடன் கேட்பார் சன்னாசி.
வீட்டுக்குள் கூடுகட்டி வாழும் குருவிகளைப்போல்
எங்கள் மனசுக்குள் கூடுகட்டி வாழ்ந்திருந்தார்
அந்த அன்னக் காவடி சன்னாசி.
ஒருமுறை ஏதோ வெள்ளைக்கார நாட்டு
ஜனாதிபதி வருகிறார் என்று
பிளாட்பார பிச்சைக்காரர்களைப்
பிடித்துக் கொண்டு...
தொலை தூர ஊர் ஒன்றில் போய்
விட்டு விட்டார்களாம் போலீசார்.
அவர்களுள் எங்கள் சன்னாசிக் குடும்பமும் அடக்கம்.
இருபதாண்டுகள் போன பின்னும்
இன்னும் சன்னாசிக் குடும்பத்தைக் கண்டு பிடிக்க முடியவில்லை எங்களால்.
ஏதேனுமொரு
இந்திப் பாடலைப் பாடத் தெரியாமல்
பாடிக்கொண்டும்..... அந்த பாட்டுக்கு சுற்றி சுற்றி ... மனைவி, மகனோடு ஆடிக்கொண்டும்... "சோறு வாங்கு சொர்ணவல்லி!", என்று சொல்லிக் கொண்டும் போகிற ஒரு ஆளைக்கண்டால் வந்து சொல்வாய்!
தென்றல் காற்றே!
"ஏனென்றால் குழந்தைப் பருவத்தில்
நாங்கள் பெற்ற குதூகலம்
எங்கள் பிள்ளைகளும் பெறட்டும்!", என்ற
பேரவா... அதனால் சன்னாசி எங்கள் குழந்தைகள்
மத்தியிலும் பேர் ஆவார் ...