மீள் கூடல்
சீருடைக்குள் என்னை அணிவித்து
சில அடிகள் எடுத்து வைத்து விரைகின்றேன்
என் பள்ளி நோக்கி...
வழக்கத்திற்கு மாறாக வருகை பதிவேடு
வாஞ்சையுடன் வண்ண பூங்கொத்து தந்து வரவேற்றது...
பதிவேடுகளில் என்னை அறிமுக படுத்தி கொண்டு
பரபரப்பாய் நினைவு கண்ணாடியில் பழைய முகங்களை தேடுகிறேன்....
முதுமை முக்காடு நீக்கி
நட்பு குசல விசாரணையில் மனம் மூழ்கியது...
எழுத்தறிவு தந்த இறைவனையும்
என்னுடன் பயின்ற இளவல்களையும்
நினைவு சல்லடையில் சலிக்கின்றேன்...
நிலை தடுமாறி தவிக்கிறேன்..
இளைமைக்கு விடை கொடுத்து
முதுமை தோட்டத்தில் இன்னும் அதே பூரிப்பில் பூத்து
நிற்கும் பூக்களை
ஆராதிக்கின்றேன்...
மூளைக்கும் எனக்கும் இடையே முரட்டு சன்டை
" என்னை தெரிகிறதா"என்ற வினவுதலுக்கும்
" தெரியவில்லையே" என்ற பதிலுக்கும்
இடையே தத்தளிக்கின்றேன்....
இறுதியில் புரிதல் என்ற போதை ஏறி
மயங்கி கிடக்கின்றேன் மது உண்ட வண்டாய்....
ஆத்தி சூடி கற்பித்த ஒளவையார்களாய்
முன்னாள் ஆசிரியர்கள் அணிவகுத்து அமர்ந்து இருக்க...
அனுபவ காடுகளில் கிடைத்த அரிய நெல்லிக்கனி வழங்க
அதியமான்களாய் ஆவலுடன் நாங்கள் அமர்ந்து இருக்க.....
அமர்க்களமாய் தொடங்கியது தமிழ் தாய் வாழ்த்துக்கள் உடன்
மீள் கூடல் வகுப்பறை....
சிற்பிகள் சிலைகள் செதுக்கிய வலிகளையும்
சிற்பங்கள் உளி தாங்கிய வலிகளையும்
உளமார உரசி பார்த்து கொண்டோம்...
சிற்பிகளின் கண்களிலும் கண்ணீர்
சிலைகளின் கண்களிலும் கண்ணீர்
தொட்டு துடைக்காத விரல்களாய்
சொக்கி போய் நினைவுகளில் சுகமாய்
மிதந்தோம்......
வாய்ப்பு அளித்த நல்ல
உள்ளங்கள் பல பேர்
வேள்வி தீ மூட்டினீர்கள்...
நாங்கள் விறகு ஆனோம் வெந்து தணிந்தது நினைவுகள்..
சாம்பலை திருநீற்றாய்
நெற்றியில் பூசி கொண்டோம்..
அடுத்த மகர ஜோதி காண ஆயத்தம் ஆகும்
அய்யப்ப பக்தர்களாய்...
நன்றிகள் கோடியுடன்
முன்னாள் மாணவர்
வ லெட்சுமணபெருமாள்
1977-78 பிரிவு.